சிறப்புக் களம்

ஃபோபியா பலவிதம்: சோம்னிஃபோபியா... துக்கத்தைத் தூக்கலாக்கும் தூக்கம்!

ஃபோபியா பலவிதம்: சோம்னிஃபோபியா... துக்கத்தைத் தூக்கலாக்கும் தூக்கம்!

Sinekadhara

காலையில் இருந்து இரவு வரை ஓடிக்கொண்டிருக்கும் மெஷின் வாழ்க்கையில், 'இரவு எப்போது வரும்... படுத்து நன்றாக தூங்கலாம்' என்றுதான் பலரும் நினைப்பார்கள். தூக்கத்தில் கிடைக்கும் நிம்மதி, மன அமைதி வேறு எங்கும் கிடைக்காது. ஆனால், அதுவே தூங்க நினைத்தாலே ஒரு பயம் ஆட்கொண்டு தூக்கம் ஓடிவிடுகிறது என்ற நிலை ஏற்பட்டால்..?

ஆம், இந்தப் பிரச்னை நம்மில் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதாவது, உடல் இயக்கத்தில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி, அடிக்கடி வரும் கெட்ட கனவுகள், மன அழுத்தம், மனப் பதற்றம், சிறு வயதில் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகள், விபத்துகள் போன்றவை ஒருவரை தூங்கவிடாமல் செய்கிறது.

தூங்குவதற்கு பயப்படும் இந்த நிலைதான் ‘சோம்னிஃபோபியா’ (Somniphobia) அல்லது ‘ஹைப்னோஃபோபியா’ (Hypnophobia) என்று அழைக்கப்படுகிறது. இன்சோம்னியா (Insomnia) என்று சொல்லப்படுகிற தூக்கமின்மை பிரச்னை அதிகமாகும்போது, அதுவே ஃபோபியாவாக உருவெடுக்கிறது. ஏதேனும் ஒருவகையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றங்கள் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி, உடலின் இயக்கத்தை பாதிக்கிறது.

அதாவது, ஏதோ ஆபத்து வருவது போன்ற அல்லது அழிவு ஏற்படுவது போன்ற ஓர் உணர்வு, இதயத் துடிப்பு வேகம் அதிகரித்தல், வியர்த்தல், நடுக்கம், இறந்துவிடுவோம் என்ற பயம், மயக்கம், நெஞ்சுவலி போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும். தூக்கம் வரவில்லையே, தூங்க முடியவில்லையே என்பது போன்ற பயங்களே இந்த ஃபோபியாவின் அறிகுறிகள்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஃபோபியாவை சரிசெய்வது எப்படி?

மற்ற ஃபோபியாக்களைப் போன்றுதான் தூங்கினாலே இறந்துவிடுவோம் என்று பயப்படக்கூடிய இந்த ஃபோபியாவிற்கும் தனி ஒரு மருந்தோ, மருத்துவமோ கிடையாது. கூடுமானவரை பயப்படுத்தக்கூடிய விஷயங்களைத் தவிர்த்துவிடவேண்டும்.

தூங்குவதற்கான நேரத்தை முன்கூட்டியே அமைத்துக்கொண்டு, அதன்படி தூங்கச் செல்லவேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரைப்படி உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

எக்ஸ்போஷர் தெரபி (Exposure therapy)

இந்த சிகிச்சையில் ஒரு நிபுணர் படிப்படியாக உங்கள் பயத்தைக் குறைக்க உதவுவார். எதனால் பயம் ஏற்படுகிறது? என்னென்ன மாதிரியான கனவுகள் வருகிறது என்பதை நிபுணரிடம் கூறும்போது, அவர் மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான வழிகளை எடுத்துரைப்பார். மேலும் நன்றாக தூங்கவும் உதவுவார்கள்.

அடுத்து, நிம்மதியாக தூங்குபவர்களின் புகைப்படங்களை பாருங்கள். அது உங்களையும் நன்றாகத் தூங்குவதற்கு உற்சாகப்படுத்தும். மேலும் உங்கள் துணை, பெற்றோர், நண்பர் அல்லது நம்பகமான ஆட்களுடன் சேர்ந்து தூங்குவது பயத்தைக் குறைக்கும். இந்த எக்ஸ்போஷர் தெரபியில் மற்றொரு வசதி, சிகிச்சைக்கு செல்லும்போது அந்த மையங்களிலேயே தூங்குவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். நீங்கள் தூங்கும்போது மற்றொருவர் விழித்து உங்களைப் பார்த்துக்கொள்வார்.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive behavioral therapy - CBT)

இந்த சிகிச்சைமுறையில் தூங்குவதில் ஏற்படும் பயத்தைக் கண்டறிந்து, அதற்கான தகுந்த சிகிச்சை கொடுக்கப்படும். அதாவது பயத்தைக் கொண்டுவரும் எண்ணங்களுக்கே சவால் விட்டு, அந்த எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.

அடுத்து, தூக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது அவசியம். அதாவது தூங்கச் செல்லும் நேரம் மற்றும் கண்விழிக்கும் நேரம் ஆகியவற்றை முடிவுசெய்து கொள்ளவேண்டும். இது உடலின் தூக்க நேரத்தை முடிவு செய்வதோடு, சோம்னிஃபோபியா பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கும்.

தியானம்

சரியான சிகிச்சைமுறைகளுடன் தியானம் செய்வது சிறந்த தீர்வுகளைப் பெற உதவும்.

- சினேகதாரா