சிறப்புக் களம்

கொரோனா தாக்கினால் ARDS பாதிப்புக்கும் அதிக வாய்ப்பு' - அடிப்படைத் தகவல்களும் அறிகுறிகளும்!

கொரோனா தாக்கினால் ARDS பாதிப்புக்கும் அதிக வாய்ப்பு' - அடிப்படைத் தகவல்களும் அறிகுறிகளும்!

Sinekadhara

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான சுவாசக்கோளாறு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

சமீபகாலமாக கொரோனா வைரஸால் உலகமே பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கிவிட்டால் சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் மிக முக்கியமான ஒன்று மூச்சுவிட முடியாமை. இந்த அறிகுறி ஏற்பட்டவர்களில் நிலை ஆபத்தானது என்பது கவனிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் அதை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயுடன் வகைப்படுத்தலாம்.

குறிப்பாக நுண்ணிய ரத்தக்குழாய்களிலிருந்து நீர் வடிந்து அது நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றுப்பைகளில் சேரும்போது, உடலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதுடன், மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனும் தடுக்கப்படுகிறது. இந்த தீவிர சுவாசக்கோளாறைத்தான் Acute respiratory distress syndrome என்கிற ’மோசமான சுவாசக்கோளாறு நோய்’ என்கிறோம்.

ARDS என்ற இந்த சுவாசக்கோளாறு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது மிகவும் கடினம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பிரச்னை காயம்பட்ட அல்லது தொற்று ஏற்பட்ட சில மணிநேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ உருவாகலாம் என்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பிழைப்பதில்லை என ஆய்வுகளும் கூறுகின்றன. வயது மற்றும் நோயின் தாக்கத்தைப் பொருத்து பாதிக்கப்பட்டவர் உயிர்ப்பிழைக்கும் சாத்தியக்கூறுகளும் மாறுகின்றன.

அறிகுறிகள்:

திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல், வழக்கத்திற்கு மாறாக மூச்சுவிடுதல், ரத்த அழுத்தம் குறைதல், குழப்பம் மற்றும் அதீத சோர்வு, சளி, காய்ச்சல், நெஞ்சுவலி, நகங்கள் மற்றும் உதடுகள் நீலநிறத்தில் மாறுதல், மயக்கம் போன்ற பொதுவான சில அறிகுறிகள் ARDS நோய்க்கான அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள்.

காரணங்கள்: மற்ற உடல்நலக்குறைவுகள் ARDS பிரச்னைக்கு பெரும்பாலும் காரணமாக அமைகிறது.

செப்சிஸ்: ரத்த ஓட்டத்தில் தொற்று ஏற்பட்டு, உடலில் திடீரென நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக செலவிடப்பட்டு, வீக்கத்தை ஏற்படுத்துதல், சிறிய ரத்தக்கட்டுக்களை உருவாக்குதல் மற்றும் ரத்தக்கசிவை ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

விபத்துகள்: கார் விபத்து அல்லது கீழே விழுதல் போன்ற விபத்துகள் நுரையீரல் அல்லது மூளைப்பகுதிகளைப் பாதித்து மூச்சுவிடுதலில் சிரமத்தை ஏற்படுத்தும்.

அடர்த்தியான புகை அல்லது ரசாயனங்களை முகர்தல்கூட சுவாசப் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

நிமோனியா, ரத்தக்கசிவு, கணையம் வீக்கமடைதல், அதிகப்படியான மருந்து, தீக்காயம், பரம்பரை பிரச்னை, புகைப்பிடித்தல், அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளுதல், கீமோதெரபி, ஒபேசிட்டி போன்ற காரணங்களும் ARDS பிரச்னைக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ARDS பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் சில அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.

பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்

ஒரே ஒரு சோதனையிலிருந்து மட்டும் ARDS பிரச்னையை கண்டுபிடித்துவிட முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் அதிகப்படியான திரவம் சேர்ந்திருத்தல் மற்றும் உதடு மற்றும் சருமம் நீலநிறமாக மாறும்போது கீழ்க்கண்ட சோதனைகள் எடுக்கப்படும் என்கின்றனர்.

முதலில் மார்புப் பகுதியை எக்ஸ்-ரே படம் எடுத்துப் பார்ப்பர். சிலநேரங்களில் சி.டி ஸ்கேன் எடுப்பர். இது நுரையீரலில் எவ்வளவு திரவம் சேர்ந்துள்ளது என்பதை கணிக்க மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

பிறகு ரத்த பரிசோதனை எடுத்தால், ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு தெரியவரும். மேலும் ரத்தத்தில் உள்ள தொற்று, அனீமியா, ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை போன்றவற்றையும் அறிந்துகொள்ள உதவும்.

இதயத்தின் செயல்பாடு குறைந்துவிட்டதை சில பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தொற்றின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும்போது மருந்துகள் மூலம் சரிசெய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.