சிறப்புக் களம்

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர்.. சாதனைப் பெண் சுவர்ணகுமாரிதேவி!!

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர்.. சாதனைப் பெண் சுவர்ணகுமாரிதேவி!!

sharpana

இந்தியா  சுதந்திரம்  அடைந்து  74 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் ஊடகங்கள் பெருகியிருந்தாலும் அதில், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை என்பதோ குறைவுதான். எல்லா, இடங்களிலும் பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கவேண்டும் என்று எழுதிவரும் ஊடகங்களிலேயே சமத்துவம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆண்களுக்கு  சமமாக  பெண்கள் ஊடகங்களில் பணிபுரிகிறார்களா என்றால்,  பெரும்பாலான நிறுவனங்களில் இல்லை என்றுதான் பதில் வரும்.

காரணம், பத்திரிகை பணி சவாலானது என்பதுதான். பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் குடும்பத்தில் விடுவதில்லை.  இந்தக் காலத்திலேயே இவ்வளவு சவாலான  விஷயங்கள் பெண்களுக்கு இருக்கின்றது என்றால், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே… இல்லை.. இல்லை… ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, ஒரு பெண் பத்திரிகை துறைக்கு வருவதற்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்திருக்கும்?

அத்தனை கட்டுப்பாடுகளையும்  உடைத்து பெண்களும் பத்திரிகை துறைக்கு  வரலாம்; வந்து  சாதிக்கலாம் ; ஏன் பத்திரிகையையே நடத்தலாம் என்று  நம்பிக்கையூட்டி பத்திரிகை துறைக்கு வந்தவர்தான்  சுவர்ணகுமாரி தேவி. இவரே, இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர்; இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர்; வங்காளத்தின் முதல் பெண் எழுத்தாளர்; இந்தியாவின் முதல் அறிவியல் நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர்.  இன்று இவரின் 165 வது பிறந்தநாள்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 1855 ஆம் ஆண்டு பெருமைமிக்க தாகூர் குடும்பத்தில் தேபேந்திரநாத் தாகூரின் பத்தாவது மகளாகப் பிறந்தவர்தான் சுவர்ணகுமாரி தேவி.  பள்ளிக்குச் சென்று மனப்பாட முறையில் இயந்திரத்தனமாக  கல்வி கற்கும் முறையைவிட இவருக்கும் இவரது சகோதர சகோதரிகளுக்கும்  அறிவியல் முறையில் வீட்டிற்கே வந்து கல்வி கற்க  உதவினார் இவரது தந்தை.  அவர் கொடுத்த சுதந்திரத்தாலேயே  நாவல்கள் எழுதுவது, பாடல்கள்  எழுதுவது என்று எழுத்தின்மீது ஆர்வத்தை செலுத்தினார் சுவர்ணகுமாரி .

1876 ஆம் ஆண்டு இவரது முதல் நாவல் ‘deepnirban’ வெளியானது. அதன் மூலம் வங்காளத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.  அதற்கு அடுத்த ஆண்டிலேயே, இவரது குடும்பத்தினர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘பாரதி’ என்ற பத்திரிகையில்  செய்தியாளர்  மட்டுமல்லாமல் பத்திரிகையின் ஆசிரியராகவும் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது, இவரது தம்பி நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்; முதல் ஆசியர் ரவீந்திரநாத் தாகூருக்கு  வயது 16 தான். இவரது அண்ணன் இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ் சத்யேந்திரநாத் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளராக மக்களுக்கும் அரசுக்கும் உறவுப்பாலமாக இருந்த சுவர்ணகுமாரி வெறும் எழுத்தில் மட்டுமே சமூக அக்கறையை வெளிப்படுத்தவில்லை.  ‘நண்பர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து பெண்களின் உரிமைகளுக்கும் பெண்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து உயர்த்திக்கொண்டிருந்தார்.   அந்த காலத்திலேயே பத்திரிகையில் பெண்ணிய கருத்துகளையும் பெண்களுக்கான சுதந்திரத்தையும் தொடர்ந்து எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

- வினி சர்பனா