சிறப்புக் களம்

சர்ச்சை நாயகன் சுரேஷ் கோபி: போலீஸ் சல்யூட் விவகாரத்தால் கொதிக்கும் கேரளா... என்ன நடந்தது?

சர்ச்சை நாயகன் சுரேஷ் கோபி: போலீஸ் சல்யூட் விவகாரத்தால் கொதிக்கும் கேரளா... என்ன நடந்தது?

PT WEB

போலீஸிடம் சல்யூட் கேட்டு வாங்கியதாக சொல்லப்பட்டு வந்த விவகாரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி, நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி, பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க திரிச்சூர் மாவட்டம் புத்தூர் பகுதிக்கு சென்றிருந்தார். அனக்குழி பகுதியில் போக்குவரத்தை தடுக்கும் வகையில் சூறைக்காற்றில் சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதியினர் சுரேஷ் கோபிக்கு தகவல் தெரிவிக்க, அந்தப் பகுதி சென்று பார்வையிட சென்றுள்ளார்.

விழுந்து கிடந்த மரங்களை பார்வையிட்டவர், ஒல்லூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சி.ஜே.ஆண்டனியை அணுகி, அப்பகுதியில் இருந்து வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அருகில் ஒரு போலீஸ் எஸ்.ஐ தனது ஜீப்பில் அமர்ந்திருந்ததாகவும், அவரிடம் நேராக சென்ற சுரேஷ்கோபி, "நான் ஒரு எம்.பி. மேயர் அல்ல. எனவே நீங்கள் ஒரு சல்யூட் அடிக்கலாம். நெறிமுறையை மறந்துவிடாதீர்கள்" என்று கூறியதாகவும், அதன்பிறகு அந்த போலீஸ் எஸ்.ஐ சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடித்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக, சுரேஷ் கோபி மீது விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. கேரள காவலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, அரசியல் கட்சிகளும் கண்டித்தனர். அதிலும் காங்கிரஸ் ஒருபடி மேலே சென்று அவர் நடித்த படத்தின் காட்சிகளை பகிர்ந்து கேலி செய்திருந்தது. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் அவருக்கு எதிராக கொந்தளித்தது. சர்ச்சை காட்டுத்தீயாக பரவ, சுரேஷ் கோபி நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

"சாய்ந்துகிடந்த மரங்களை பார்வையிட்ட 15 நிமிடங்களுக்கு பிறகுதான் ஜீப்பிற்குள் போலீஸ் எஸ்.ஐ இருந்ததை கண்டேன். அவரிடம் ஏன் இப்படி காரில் இருக்கிறீர்கள். நான் ஒரு எம்.பி. சல்யூட்டுக்கு தகுதி இருப்பவன் என்று மட்டுமே கூறினேன். சல்யூட் செய்யச் சொல்லி கேட்கவில்லை. சல்யூட் நடைமுறையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறவன் நான். யாருக்கும் சல்யூட் செய்யத் தேவையில்லை. என்றாலும் அதில் எந்த அரசியல் பாகுபாடும் இருக்கக்கூடாது.

இப்படி இருக்கையில், இந்த விவகாரத்தை விவாதம் ஆக்கியது யார்? சம்பந்தபட்ட அதிகாரியிடம் எந்தப் புகாரும் இல்லை. போலீஸ் அசோசியேஷன் புகார் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஜனாநாயக அமைப்பில் இல்லாத அசோசியேஷனை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பிடிஐக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்தார் சுரேஷ் கோபி. என்றாலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

விடாது துரத்தும் சர்ச்சை: நடிப்பை துறந்து குறிப்பாக பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கிய பிறகு சுரேஷ் கோபி நிறைய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். சில ஆண்டுகள் முன் சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்து, அதனையடுத்து மிகப்பெரிய சர்ச்சையை எதிர்கொண்டார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளர் இல்லாத குருவாயூரில், மக்கள் நோட்டா அல்லது முஸ்லீம் லீக் வேட்பாளர் கேஎன்ஏ காதர் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை எதிர்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டவர், பிரசாரத்தின்போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை தொட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த சர்ச்சை கோர்ட் வரை சென்றது. சில காலமாக சர்ச்சைகளில் சிக்காமல் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அவரின் நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் தயாராகி வருகின்றன. நீண்ட நாள்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் நடிக்க ஆரம்பித்தது அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்தநிலையில்தான் இந்த `சல்யூட்' சர்ச்சை மீண்டும் அவரின் ரசிகர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

- மலையரசு