சிறப்புக் களம்

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு - மத்திய அரசும், திமுக தரப்பும் முன்வைத்த வாதங்கள் என்ன?

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு - மத்திய அரசும், திமுக தரப்பும் முன்வைத்த வாதங்கள் என்ன?

webteam

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், விசாரணையின் போது மத்திய அரசு மற்றும் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு.. நீதிபதிகள் சொன்னதென்ன?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மூன்று நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு முறையை சரி என்றும் இரண்டு நீதிபதிகள் தவறு என்றும் தீர்ப்பு வழங்கினர்.

இதில் மிக முக்கியமான விஷயம் 10% இட ஒதுக்கீடு முறையை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் வழங்குவது தவறு என்றும் இந்த இட ஒதுக்கீடு முறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகியோரை சேர்க்காதது தவறு என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு லலித் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சரிதான் என்றும் அதே நேரத்தில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை விலக்கி வைத்தது தான் தவறு என்றும் இந்த இரண்டு நீதிபதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என 10% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனுதாரர்களான திமுக உள்ளிட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்திருந்தனர்.

மேற்கொண்டு மத்திய அரசு வைத்த வாதத்தையும் , திமுக தரப்பு வைத்த வாதத்தையும் காணலாம்..

மத்திய அரசின் வாதம் –

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வரைமுறை, உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக மறு பரிசீலனை செய்யப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அதேவேளையில் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

* ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, இந்த வழக்கில் வாதிட அவசியம் இல்லை, ஏனெனில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஓ.பி.சி பிரிவினர் இந்த ஒதுக்கீட்டால் பயனடைவதையும், ஏழ்மையான பலருக்கான வாய்ப்பு கிடைப்பதற்கும் தடையாக இருக்கும் எந்த விவகாரத்தையும் ஏற்க மாட்டோம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை வரையறுப்பதற்கு வருமானம் என்பது சரியான அளவுகோல் தான். குறிப்பாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாயாக நிர்ணயித்தது நியாயமான வரம்பு தான்.

* ஓபிசி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பயன்படுத்தப்படும் க்ரீமி லேயர் முறையை போலவே எட்டு லட்சம் ரூபாய் என வருமான வரம்பு நிர்ணயித்தது என்ற வாதத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவது என்பது மிகக் கடுமையான முறையில் செயல்படுத்தப்படுகிறது.

*உதாரணமாக கிரிமிலேயர் என்பது ஒரு குறிப்பிட்டவருடைய மூன்று ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு கடைப்பிடிக்கப்படுவது. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது.

*ஓபிசி கிரீமிலேயர் விவகாரத்தில் விவசாயம் மற்றும் கைவினை சுய தொழில்களில் இருந்து வரும் வருமானம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆனால் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் விவசாயம் உள்ளிட்ட அனைத்து வருமானமும் எட்டு லட்ச ரூபாய் வரம்புக்கு கீழ் கொண்டு வரப்படுகிறது.

* ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருந்தும் வகையில் தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வருமான வரம்பு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

திமுகவின் வாதம் -

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் முன் வைத்த வாதம்:

* பொருளாதாரத்தில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது என்பது ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரை அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு முன்பான காலகட்டத்திற்கு கொண்டு சென்று விடும்.

* இட ஒதுக்கீடு என்பது வறுமை மீட்பு திட்டமாக கணக்கில் கொள்ளக்கூடாது இட ஒதுக்கீடு என்பது வறுமை வசதியின்மை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கக்கூடியது அல்ல.

* இட ஒதுக்கீடுக்காக அமைக்கப்பட்ட ஷின்கோ கமிஷன் கூட இத்தகைய பரிந்துரைகளை வழங்கவில்லை.

* ஒவ்வொரு வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்பதை வழங்க முடியாது அப்படி இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக நிச்சயமாக வகைப்படுத்த முடியாது இதை ஏற்கனவே இந்திரா சாவ்னி தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

* 10% இட ஒதுக்கீடு என்பது பொதுப் பிரிவினரின் 50 சதவீதத்திற்குள் வருகிறது என்றும் எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெவ்வேறு பிரிவுகளாக இருப்பதால் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் முரணானது.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டுள்ளது என அரசு கூறுவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல வறுமை என்பது அனைத்து தரப்பிலும் சமமான ஒன்றாக இருக்கும் பொழுது இதனை இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அசாதாரண சூழல் என எவ்வாறு வகைப்படுத்த முடியும்?

* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசன சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டு விட்டதால் அதனை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என அரசு கூறுவது என்பது ஏற்கனவே இது தொடர்பான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது.

- நிரஞ்சன் குமார்