காந்தி யாருக்கானவர். அவர் இருந்த போதும், அவர் மறைந்த போதும், ஏன் தற்போது வரை இந்த விவாதம் நடந்தவண்ணமே உள்ளது. மகாத்மா காந்தியின் 77 ஆவது நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாளில் திமுக சார்பில் மத நல்லிணக்கம் குறித்து பேசப்பட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாடுமுழுவதும் மத நல்லிணக்கம் குறித்து பேசப்படுகிறது. இத்தகைய பேச்சுக்களே காந்தியின் தேவையை உணர்த்துகின்றன.
மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரது படுகொலையில் இந்தியா கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? என்பது குறித்து சிறுகதை எழுத்தாளரும், நவ காந்தியவாதியுமான சுனில் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவன, “காந்திக்கு மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தது. அது, இந்திய விடுதலை, ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஏற்பட வேண்டிய சமூக மாற்றங்கள், இந்து இஸ்லாம் ஒற்றுமை. காந்தி, இந்து மதத்தின் பழமைவாதத் தரப்பினால் எதிரியாக பார்க்கப்பட்டார். இந்து இஸ்லாம் ஒற்றுமை ஒருபுறம் இருந்தாலும், ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் போன்றவையும் பழமைவாத தரப்பினால் மிக பெரியளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
காந்திக்கு மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தது. அது, இந்திய விடுதலை, ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஏற்பட வேண்டிய சமூக மாற்றங்கள், இந்து இஸ்லாம் ஒற்றுமை
1934 ஆம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக யாத்திரைகள் போகும்போதே அவர்மேல் கொலை முயற்சி செய்யப்பட்டது. அப்போதிருந்தே ஒரு விரிசல் இருக்கிறது. அதன்பின் வந்த பிரிவினைக் கால வன்முறைகளில் இருதரப்பும் கடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். இரு தரப்புமே காந்தியை எதிர்தரப்பு ஆதரவாளராக பார்த்தார்கள். இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஆதரவாளராக காந்தியை பார்த்தார்கள் என்றால், இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு ஆதரவானவராக காந்தியைப் பார்த்தார்கள். இஸ்லாமியர்கள் காந்தியை நம்பினாலும் அது பெரும்பான்மையாக இல்லை.
காந்தி என்பவர் எந்த லட்சியத்திற்காக நின்றாரோ அதை மறுக்கக்கூடிய வேறொரு தரப்பு இருக்கிறது. எல்லோரும் சமம், எல்லோரும் நல்லிணக்கத்தோடு இருக்கிறோம் என்று சொல்லாத வேறொரு தரப்பு. சமத்துவம் என்பதன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு தரப்பு, சமத்துவம் என்பதன் மீது நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பு. இது இரண்டுக்கும் இடையிலான ஓர் இடத்தில், காந்தி இதற்காகத்தான் களப்பலி ஆனார்.
காந்தியின் மரணம் என்பது அந்தக்காலத்தில், 1947, 48 காலக்கட்டங்களில் மிகப்பெரிய அளவிலான வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தது. கிட்டத்தட்ட 15 முதல் 20 வருடங்களுக்கு மத மோதல்கள் என்பது இல்லை. கூட்டு உணர்வில் (collective consciousness) ஒரு குற்ற உணர்வு இருந்தது. அது மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்திலும், மத நல்லிணக்கம் பேசுபவர்கள் தான் உண்மையென நம்பும் லட்சியத்தை பேசுகிறார்கள். இந்தியா என்ற ஒரு நாடு, அவர்களுக்கென ஒரு லட்சியக்கனவு இருக்கிறது. அதில் இருந்து அவர்கள் பேசும்போது மதநல்லிணக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு இடத்தில் இருக்கிறார்கள்.
காந்தியின் மரணம் என்பது அந்தக்காலத்தில், 1947, 48 காலக்கட்டங்களில் மிகப்பெரிய அளவிலான வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தது. கிட்டத்தட்ட 15 முதல் 20 வருடங்களுக்கு மத மோதல்கள் என்பது இல்லை. கூட்டு உணர்வில் (collective consciousness) ஒரு குற்ற உணர்வு இருந்தது.
ஆனால் மதநல்லிணக்கத்தை பேசுவது யாருக்கு எரிச்சல் கொடுக்கிறது என்பதுதான் நாம் பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் சமூகம் கடுமையாக துருவப்பட்டுக்கொண்டு இருக்கிறது. காந்திதான் பேச்சுவார்த்தையின் மீது நம்பிக்கை கொண்ட, இரு தரப்பையும் ஒருங்கிணைக்கிற, இரு தரப்பையும் உரையாடலுக்கு அழைக்கக்கூடிய தரப்பாக இருக்கிறார். மதநல்லிணக்கம் பேசக்கூடிவர்கள் உரையாடலுக்கு உண்டான வாயிலை திறந்துவைப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது குரல் மிக முக்கியமானது. அவர்களது குரலுக்கு நாம் செவி கொடுக்க வேண்டியது அவசியம். எப்போதும் ஒலிக்கக்கூடிய ஒரு குரல்களாக, சமூதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒரு குரல்களாக இருக்க வேண்டும். ஆனால் அந்த குரல்களை அமைதிப்படுத்தவே எல்லோரும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்., அதை அசௌகரியப்படுத்துகிறார்கள்.
மதநல்லிணக்கம் பேசக்கூடிவர்கள் உரையாடலுக்கு உண்டான வாயிலை திறந்துவைப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது குரல் மிக முக்கியமானது.
அரசியலில் சரி தவறு எனும் இடத்தில் தான் நாம் பார்க்கிறோம். ஆனால் அப்படியல்ல, இருதரப்பிற்கும் நியாயம் உள்ளது என சொல்லும்போதே, இருதரப்புமே மதநல்லிணக்கத்தை பேசுபவர்களை சந்தேகமாக பார்க்கக்கூடிய ஒரு சூழல் உருவாகிறது.
காந்தியின் குரல் அல்லது காந்தியின் வழிவந்தவர்களது குரல் அல்லது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறவர்களது குரல் மிக முக்கியமாக உள்ளது. ஆனால் அது அரிதாகிக்கொண்டே வருகிறது என்பது தான் இந்தியாவின் முக முக்கியமான பிரச்சனை” என தெரிவித்தார்.