கோடை காலம் வந்தாலே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வதற்கு தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் மாறி வரும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உடலை சீராக வைத்துக் கொண்டு பணியிடங்களில் வேலை பார்ப்பது மிகவும் சிரமமான காரியம் தான். அதனால்தான் கோடை வந்தாலே இளநீர், எலுமிச்சை, தர்பூசணி, குளிர்பானங்கள், நீர்ம பொருட்கள் ஆகியவற்றை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை மக்கள் கடைபிடிக்கிறார்கள். அதில் தர்பூசணி பழம் ஏழைகளின் "கோடை நண்பன்" என அழைக்கப்படுகிறது. தித்திக்கும் சுவை, புத்துணர்ச்சி தரும் நீர்ம சத்து, மலிவான விலை என அனைவரும் எளிதில் வாங்கும் வகையிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் வல்லமையை கொண்டுள்ளது தர்பூசணி பழம்.
தர்பூசணி பழம் பூமத்திய ரேகை பகுதியில் அதாவது 25 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை இருக்கும் பகுதிகளில் வளர கூடியது. 18ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி, தற்போது விளைச்சலில் தன்னிறைவு பெறும் அளவிற்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய கோடை காலங்களில் இதன் சீசன் தொடங்குகிறது. அப்போது தான் சந்தைகளிலும், சாலைகளிலும், பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களிலும் புதிதாக முளைத்த தர்பூசணி பழ கடைகளை பார்க்கிறோம்.
இந்தியாவில் உத்தர பிரதேசம், ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. சாலை ஓரங்களில் அதிகபட்சம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் தர்பூசணியில் 46% கலோரி உள்ளது. மேலும் ஒரு பழத்தில் 90% அதிகமான நீர் சத்து நிரம்பியுள்ளது. தர்பூசணி பழத்தில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால் உடலுக்கு கோடை வெப்பத்தை தாங்கும் திறனை கொடுக்கிறது. அதிலுள்ள ஐசோபின், இதயம் மற்றும் கண்களுக்கு மிகவும் நன்மை கொடுக்கும். தினமும் காலை தர்பூசணி பழங்களை எடுத்து வந்தால் வயிற்றுக்கும் கண்ணுக்கும் இதயத்திற்கு மிகுந்த பயனளிக்கும். மேலும் இதில் கலோரி என்பது குறைவான அளவு உள்ளதால் உடல் எடை குறைக்கவும் மிகுந்த பலன் அளிக்கிறது.
தர்ப்பூசணியில் 11 % வைட்டமின் A வும், வைட்டமின் C யில் 13 %மும் இருப்பதால் சருமம், கண், தோல், மார்பகம், சிறுநீரகம், குழந்தை பேறு, மலச்சிக்கல் ஆகிய உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்னைகளுக்கு தர்பூசணி ஊட்டம் அளிக்கிறது. அதே வேளையில் தர்பூசணியை பழமாக சாப்பிடுபவர்களை விட ஜூஸ் குடிப்பவர்கள் அதிகம் உள்ளனர்.
இது குறித்து ஊட்டச்சத்து மருத்துவர் தாரணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, தர்பூசணி பழம் அனைவரும் எளிதில் வாங்க கூடிய பழமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகவும் உள்ளது. இதில் உள்ள முக்கிய ஊட்டசத்துகளான வைட்டமின் A, வைட்டமின் C, லைக்கோபீன், சிட்ரின் ஆகியவை உள்ளன. இதில் லைக்கோபீன் என்கிற சத்து தர்பூசணி பழத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம். இது தக்காளி, சிவப்பு மிளகாய் போன்றவற்றிலும் காணப்படுகிறது.
லைக்கோபீன் உடலில் உள்ள எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. அதிக பலன் கிடைக்கும் தர்பூசணியை ஜூஸ் போட்டு நீர்மமாக குடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. ஜூஸ் போட்டு சர்க்கரை சேர்த்து தர்பூசணியை நீர்மமாக குடிப்பதால் இருக்கும் பலனை விட பழமாக உட்கொண்டால் அதில் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும். தர்பூசணியை அறுத்து உள்ளே இருக்கும் சிவப்பு நிற பழத்தை விதைகளை விடுத்து உட்கொள்ளும் போது அதிகப்படியான ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எனவே தர்பூசணியை பழமாக சாப்பிடுவதை இளம் தலைமுறையினர் பழக்கப்படுத்த வேண்டும். அதே போல தர்பூசணி சுவையாக இருந்தால் சிறுவர்கள் சிலர் அதை அதிகமாக எடுத்து கொள்கிறார்கள். தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதால் பசியின்மை ஏற்படுகிறது. உணவு சாப்பிடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன், தர்பூசணியை அளவாக எடுத்துக் கொண்டால், உடலானது பெரும் பலனை பெருகிறது என்கிறார் மருத்துவர் தாரணி கிருஷ்ணன்.
இந்த வருடம் நல்ல விளைச்சல் இருந்தால் தர்பூசணி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் சாலைகளில், கடைகளில் கிலோவுக்கு 15 முதல் 25 வரையும், கோயம்பேடு சந்தையில் 10 முதல் 20 வரை விற்கப்படுகிறது. இதன் விற்பனை குறித்து கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடைமேடை கடை போட்டு வரும் ஈஸ்வரியிடம் கேட்ட போது, 15 வருடமாக தர்பூசணி பழ கடை வைத்துள்ளேன்.தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.
மார்ச் முதல் ஜூன் வரை மட்டுமே சீசன் இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் பழங்களின் விலை குறைந்து, விற்பனை அதிகரிக்கிறது. பள்ளி கல்லூரிகளில் முழுமையாக செயல்படாமல் உள்ளதால் உதிரியாக விற்பனை ஆவது குறைந்துள்ளது. மற்றபடி முழு தர்பூசணியை குடும்பம் குடும்பமாக வாங்கி செல்கின்றனர். இளைய தலைமுறை பலர் ஜூஸ் குடிப்பதையே விரும்புகின்றனர். எங்கள் கடையில் கிலோ தர்பூசணி 15 ரூபாய், ஆந்திராவில் இருந்து வந்த பழமாக இருந்தால் 20 ரூபாய். அவ்வளவு தான் என கூறினார் ஈஸ்வரி. இப்படி கோடை தாக்கத்திலிருந்து மக்கள் தங்களின் தாகத்தை தீர்த்து கொள்ள தர்பூசணி பழம் சிறந்த தீர்வாக உள்ளது.
ஆப்பிள் கிலோ 150, மாம்பழம் கிலோ 200 என பழங்களில் விலைகொடுத்து சாமானிய மக்கள் வாங்க முடியாத சூழலில், தர்பூசணி நல்வாய்ப்பாக அமைகிறது.
- ந.பால வெற்றிவேல்