சிறப்புக் களம்

'நம்பிக்கை'யை நம்பி தொடங்கிய ஸ்டார்ட் அப்: CRED ஆப் அசாத்திய வெற்றிக்குப் பின்னால்..?

'நம்பிக்கை'யை நம்பி தொடங்கிய ஸ்டார்ட் அப்: CRED ஆப் அசாத்திய வெற்றிக்குப் பின்னால்..?

webteam

தற்போது ஒட்டுமொத்த ஸ்டார்ட் அப் துறையே வளர்ந்து வருகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் CRED (கிரெட்) நிறுவனத்தின் வளர்ச்சி இந்த ஆண்டில் மட்டும் பல மடங்காக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் திரட்டப்பட்ட நிதி மூலம் (25.1 கோடி டாலர்கள்) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 401 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் நிதி திரட்டியபோது 220 கோடி டாலர் என்னும் அளவிலே சந்தை மதிப்பு இருந்தது. 2020-ம் ஆண்டு ஜனவரியில் நிதி திரட்டும்போது 80 கோடி டாலர் அளவில் மட்டுமே இருந்தது. 4 பில்லியன் டாலர் என்னும் வளர்ச்சியை அடைய மற்ற நிறுவனங்கள் பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், 2018-ம் ஆண்டு தொடங்கிய நிறுவனம் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

குணால் ஷா: எம்பிஏ படிப்பை பாதியில் நிறுத்திய குணால் ஷா இந்த நிறுவனத்தை தொடங்கினார். இவர் ஏற்கெனவே 'ஃபிரீசார்ஜ்' என்னும் நிறுவனத்தை தொடங்கிவர். 2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை 'ஸ்நாப்டீல்' நிறுவனத்திடம் விற்றார். இடைப்பட்ட காலத்தில் செக்யோயா கேபிடல் முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். தனிப்பட்ட முறையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் வெளிநாடுகளுக்கு பல பயணங்களை செய்திருக்கிறார்.

வெளிநாடுகளில் நம்பிக்கை என்பது அதிகமாகவே இருக்கிறது. பெட்ரோல் பம்ப், மளிகை கடைகளில் பணியாளர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் இந்தியாவில் நம்பிக்கை குறைவாக இருக்கிறது. கிரெடிட் கார்டு பில்லை செலுத்தத் தவறினால் அபராதம், வட்டி போன்றவை விதிக்கப்படுகிறது. ஆனால், சரியான தேதியில் தவணையை செலுத்துபவர்களுக்கு பெரிய அங்கீகாரம் இல்லை. பலரிடம் பணம் இருக்கும். ஆனால், தேதியை மறப்பதால் செலுத்துவதில்லை. அதனால், கிரெடிட் கார்டு பயனாளர்களை மட்டுமே நம்பி இந்த நிறுவனத்தை தொடங்கினார் குணால் ஷா.

ஒரு நிறுவனம் தொடங்கும்போது அந்த துறையில் உள்ள மொத்த சந்தை வாய்ப்பு என்ன என்பதை கணக்கிட்டுதான் நிறுவனத்தை தொடங்குவார். அப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் மொபைல்போன் என்பது பெரும்பாலான மக்களிடம் உள்ளது. ஆனால், இந்தியாவில் தற்போது வரை வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் 6.3 கோடிதான். இதில் எப்படியும் ஒரு கார்டுக்கு மேல் வைத்திருப்பவர்கள் பல லட்சம் இருப்பார்கள். 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையில் மேலும் சில கோடிகள் குறைவாக இருந்திருக்கும். இருந்தாலும் இந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் குணால் ஷா.

பிசினஸ் மாடல் என்ன? - இந்த செயலியினை டவுன்லோடு செய்தால், ஒருவரிடம் அத்தனை கிரெடிட் கார்ட் குறித்த தகவல்களும் ஒன்றிணைக்கப்படும். எப்போது தவணை செலுத்த வேண்டும், மொத்த தொகை என்ன என்பது தெரியும். இந்த ஆப் மூலமாகவே எந்த கிரெடிட் கார்டின் பில்லையும் செலுத்தலாம். சரியான தவணைக்குள் செலுத்தும்போது கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது. தவிர, ஆப் மூலம் பணம் செலுத்தும்பட்சத்தில் பாயின்ட்ஸ் வழங்கப்படுகிறது. பல விதமான வவுச்சர்களுக்கு இந்த பாயின்ட்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனைத் தவிர கடன்கள், காப்பீட்டு பிரீமியம் மற்றும் வீட்டு வாடகை கூட செலுத்த முடியும். வீட்டு வாடகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முடியும்.

நாம் சரியாக செலுத்துவதால் அவர்களுக்கு என்ன லாபம், நிறுவனத்துக்கு என்ன வருமானம் கிடைக்கும் என தோன்றலாம். லாப நோக்கம் இல்லாத எந்த நிறுவனமும் இல்லை.

CRED Mint என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யபட்டிருக்கிறது. ஒருவரின் கடன் செலுத்தும் தகுதியை இந்த நிறுவனத்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். நல்ல சிபில் ஸ்கோர் (750-க்கும் மேலே) உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. CRED Mint என்பது பியர் டு பியர் லெண்டிங் திட்டம். இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அவர்களுக்கு வங்கியில் கிடைக்கும் வட்டியை விட அதிகமான வட்டி (9 சதவீதம்) கிடைக்கும்.

இந்த பணத்தை இந்த ஆப்-ல் பதிவு செய்த பயனார்களுக்கு கொடுக்கிறது இந்த நிறுவனம். இதன் மூலம் வருமானம் ஈட்டுகிறது.

அதேபோல CRED Cash எனும் திட்டத்தையும் இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. பணம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக வழங்குகிறது. வழக்கமான கிரெடிட் கார்டுகளைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹிப் பார்: சில நாட்களுக்கு முன்பு ஹிப்பார் என்னும் நிறுவனத்தை க்ரெட் வாங்கி இருக்கிறது. மதுபானங்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும் நிறுவனம் இது. (இந்த இணைப்புக்கு பிறகு மதுபான டெலிவரியை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன) இந்த நிறுவனத்தை ஏன் ஒரு ஃபின் டெக் நிறுவனம் வாங்க வேண்டும் என யோசிக்கலாம். இந்த நிறுவனம் வசம் பிபிஐ (prepaid payment instrument ) அனுமதி இருக்கிறது. இதுவரை ரிசர்வ் வங்கி 37 நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த அனுமதி ஹிப் பார் வசமும் இருக்கிறது. இந்த அனுமதி மூலம் டிஜிட்டல் வாலட், பிரீபெய்ட் கார்டு, வவுச்சர் உள்ளிட்டவற்றை வழங்க முடியும்.

சரியான தேதியில் பணம் யார் செலுத்திகிறார்கள் என்பதை கிரெட்-டால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்கு தேவையான நிதி சேவைகளுக்கு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 3 ஆண்டுகளில் 400 கோடி டாலர் நிறுவனம் என்பது அசாத்தியமே!