சிறப்புக் களம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தொடர்பான FSSAI வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: காரணம் என்ன?

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தொடர்பான FSSAI வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: காரணம் என்ன?

EllusamyKarthik

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என பாரதியார் பசி குறித்து பாடியுள்ளார். பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் நார்மன் போர்லாக் கூட மக்கள் யாரும் பசியால் மாண்டதாக இருக்கக்கூடாது என சொல்லி பயிர் உற்பத்திக்கான மாற்று முறைகளை காண வேண்டும் என சொல்லி இருந்தார். இத்தகைய சூழலில் இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்றான உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறையை (Draft Regulations) வெளியிட்டுள்ளது. அதோடு பொது மக்களின் கருத்துகளையும் இதில் பெற்று வருகிறது. வரும் 15-ஆம் தேதி கருத்துகளை மக்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. 

இந்நிலையில் இந்த வரைவுக்கு எதிராக உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதோடு பல்வேறு ஆர்வலர்கள் ஆன்லைன் மூலம் “இது கூடாது” என பெட்டிஷன் கொடுத்து வருகின்றனர். 

எதிர்ப்புக்கு காரணம் என்ன?

கடந்த 2021 நவம்பர், 17-ஆம் தேதியன்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் வெளியிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறை தெளிவாக இல்லை எனவும். மாறாக இந்த வரைவு நம் உணவுகளில் மிகவும் எளிதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவை கொண்டு வந்து சேர்ப்பதாகவும் உள்ளது என உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த வரைவு முழுவதும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.

1 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரின் மூலப்பொருட்களைக் கொண்ட அனைத்து உணவுப் பொருட்களையும் "மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருள்" என்ற லேபிள் இருக்க வேண்டும் எனவும் இந்த வரைவு முன்மொழிவதாக உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மிகவும் பலவீனமானதாக உள்ள இந்த வரைவு கொல்லைப்புறமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மூலப்பொருளாக கொண்ட உணவை இந்தியாவுக்குள் அனுமதிப்பதாக சொல்கின்றனர் இதனை எதிர்ப்பவர்கள். மேலும் இதில் சோதனை முறைகள் குறித்தும் விளக்கம் ஏதுமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.  

குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரினால் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்?

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பி.டி பருத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது தவிர வேறு எந்தவொரு பயிருக்கும் இந்தியாவில் அனுமதி இல்லை. பி.டி கத்திரி, ஜி.எம் கடுகு உட்பட பல்வேறு மரபணு மாற்றப் பயிர்கள் இந்தியாவில் பயிர் செய்ய அனுமதியில்லை. இருப்பினும் அந்த வகை பயிர்கள் கொண்ட உணவு வகைகள் அடைக்கப்பட்ட பொட்டலங்களாக இந்தியாவில் ஊடுருவி உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள்.  

இது தொடர்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயனிடம் பேசினோம். “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதை மறந்துவிட்டு இந்த வரைவு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்த ஆணையத்தின் பணி. தற்போது வெளியாகி உள்ள இந்த வரைவில் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிரிட அனுமதி இல்லை என தெரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரின் மூலப்பொருட்களைக் உணவு பொருட்கள் 1 சதவிகிதம் கொண்டிருந்தாலும் அதை அவசியம் லேபிள் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த வரைவு பன்னாட்டு உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களை பொட்டலங்களில் அடைத்து விற்கும் சிப்ஸ், மக்காச்சோளம் மாதிரியான உற்பத்தியாளர்களுக்கு இது சாதகமாக இருக்கும். ஏற்கனவே இறக்குமதி செய்யப்படுகின்ற உணவு பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பரிசோதனை ஏதும் செய்வதில்லை” என்கிறார் அவர்.