சிறப்புக் களம்

எளியோரின் வலிமை கதை 19: பூ வாங்குற மக்கள்கிட்ட இருக்கும் சிநேகம்தாங்க எங்களை வாழவைக்குது!

எளியோரின் வலிமை கதை 19: பூ வாங்குற மக்கள்கிட்ட இருக்கும் சிநேகம்தாங்க எங்களை வாழவைக்குது!

நிவேதா ஜெகராஜா

இயக்குநர் செல்வராகவனின் `இரண்டாம் உலகம்’ படத்தில், இரண்டாவதான உலகத்தை காட்டுகையில், அங்கு காதலே இருக்காது. முதன்முதலாக அங்கு நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உருவாகையில், அந்த முதல் காதலை கொண்டாடும் அடையாளமாய், அங்கு பூக்கள் பூக்க தொடங்கும். இந்தப் புவி மகிழ்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை, பூ பூப்பதை வைத்தே அறியலாம் என்பதே அப்படம் சொல்லும் விஷயமாக இருக்கும். பூ, சிறியவர் தொடங்கி பெரியவர் வரை... கடவுள் தொடங்கி சாமாணியன் வரை எல்லாவருக்கும் பிடித்த பொருள்.

எல்லோருக்குமானதுதான் பூ என்றாலும், இறுதியில் என்னமோ அது பெரும்பாலும் பெண்கள் தலையில் சூடிக்கொள்வதையே தங்களது லட்சியமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெண்களை அழகாக்குவதில் பூவிற்கு தனியிடமுண்டு. விதவிதமான வண்ணமயமான பல்வேறு நிறங்களில் பூக்கள் உண்டு என்பதால், ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கென பிரியர்கள் இருப்பதுண்டு. இவர்களையே தங்களது வாழ்வின் ஆதாரமாக வாழ்பவர்கள்தான், பூ தொடுத்து விற்கும் எளியோர்! அப்படி பூ தொடுத்து விற்பனை செய்யும் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே, இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்ள போகிறோம்.

``‌என் பேரு காந்தி. கடந்த 26 வருஷமா பூ கட்டிப்பிழைக்கிறேன். எனக்கு முதல்ல, பூ கட்ட தெரியாது. வறுமையும் கஷ்டமும் தான் என்னை பூ கட்ட பழக்கிவிட்ட்டுச்சு. இருபத்தி ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல என் கணவருக்கு கைகள் முறிவு ஏற்பட்டு, அவரால வேலைக்கு போக முடியல. அப்போ எனக்கு மூணு பிள்ளைங்க இருந்தாங்க. நான் வேலைக்கு போனா தான் அவங்கல காப்பாத்த முடியும் என்ற சூழ்நிலை. அந்த நேரத்தில்தான் நான் பூக்கடை வச்சேன். எனக்கு பூ கட்ட தெரியாதுன்றதால, காசு கொடுத்து யார்கிட்டயாவது பூ கட்டி வாங்கி, அதை கடையில வச்சு விப்பேன். அப்பறம், கொஞ்ச நாள்ல நானே பழகிட்டேன்.

நான் வியாபாரம் பண்ண ஆரம்பிக்கும் போது ஒரு கிலோ மல்லிகை பூ 50 ரூபான்னு இருந்துச்சு. ஒரு முழம் மூணு ரூபாய் வரையும் விப்போம். கொஞ்ச நாள்ல காலப்போக்குல கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறிச்சு. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி பண்டிகையொன்றின் போது 2000 ரூபாய் வரைக்கும் ஒரு கிலோ மல்லிகை பூ வாங்கி வந்து வித்தேன். நான் இந்த தொழிலுக்கு வந்தபோது, இந்த மாதிரி எல்லாம் பெரிய லாபம் எதுவும் கிடையாது. அப்ப 100 ரூபாய் கெடைச்சாலே போதும்னு இருக்கும். ஆனா இன்னிக்கு நாலாயிரம் வித்தாகூட போதாது.

இப்பலாம் ஒரு முழம் 30 ரூபாயில் தொடங்கி 50 ரூபா வரைக்கும் விக்கிறோம். இந்த விலையேற்றதால, நாங்கதான் லாபமடையுறோம்னு சிலர் நினைக்கிறாங்க. ஆனா அப்படியில்ல. நாங்க விலை அதிகமா வச்சு விற்கனுன்னு விற்கலை. பூ விலைய பொறுத்துதான் விக்கிறோம். அப்பல்லாம் பொண்டாட்டிக்கு பூ வாங்கி கொடுக்கிறவங்க 4 முழம் 5 முழம் வாங்கி கொடுத்தாங்க. இப்ப விக்கிற விலையில ஒருமுழம் வாங்கிக் கொடுக்கறதே ரொம்ப பெருசா இருக்கு. அதேநேரம் பூ வியாபாரிகளோட எண்ணிக்கையும் அதிகரிச்சுடுச்சு. எங்க பகுதியில மட்டுமேகூட 50 பேர் பூ வியாபாரம் செய்யுறாங்க. ஆரம்பத்துல கடை வச்சு வியாபாரம் செஞ்சோம். அப்பெல்லாம் கடையை தேடி வருவாங்க. இப்ப போட்டி அதிகமாயிடுச்சி. அதனால பூ வாங்க வருவாங்கன்னு எதிர்பார்க்க முடியாத நிலைதான் இருக்கு எங்களுக்கு.

மக்கள் எங்களை நோக்கி வராததால, யார் பூ வாங்குவாங்கன்னு பார்த்து, அவங்ககிட்ட பூ கூடையை நாங்க கொண்டு போகிறோம். விற்காம பூ மீந்து போயிடுச்சுன்னா எல்லா பூவையும் நானா வச்சிக்க முடியும் சொல்லுங்க...? ஒருநாள் பூ விற்கலன்னாகூடம், ஒரு மாசம் சம்பாதிக்கிற பணம் போய்டும். அப்புறம் ராத்திரி பகலா கடுமையாக வேலை செஞ்சுதான் காசு பார்க்க முடியும். எப்படியோ பூ வியாபாரம் பண்ணிதான் என் மூனு புள்ளைங்களையும் கரையேத்துது. ஏதோவொன்னு... என் குடும்பத்தை கரைசேர்த்தா போதும்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குறேன். இப்ப என் வீட்டுக்காரரையும் நான் தான் கவனிச்சிட்டு வரேன்.

பூக்களோடயே இருக்கதால, எங்க வாழ்க்கை எப்பவும் மணம் நிறைஞ்சேதான் இருக்கு. இருந்தாலும், எங்களுக்குள்ளயும் வெறுமை இருக்கு. அதையெல்லாம் போக்குறது, பூ வாங்குறவங்களோட புன்னகை பூத்த முகங்கள்தான். அதுலயும், புதுசா கல்யாணம் பண்ண ஜோடிங்க வந்து பூ வாங்கி தலையில் வச்சிட்டு போகும் போது ஒருத்தரையொருத்தர் ஒரு பார்வை பாத்துட்டு போவாங்க பாருங்க... அந்த சிநேகம் தாங்க இந்த வேலையிலிருந்து எங்கள மாதிரி ஆளுங்கள இந்த தொழில்ல உசுரோட வாழ வச்சிட்டு இருக்கு” என்றார்.

`பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க’ என்றார் வைரமுத்து. அந்த காதலுள்ள வரையில், பூ விற்பனையாளர்களும் மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள்! பூக்கள் கசங்கி போகாமல் விற்பனை செய்யும் இவர்களுடைய வாழ்க்கையில் நிறைய கசங்கல்கள் இருந்தாலும் அதை அவர்கள் எப்போதும் பூ கொடுக்கும் போது அதை வெளிப்படுத்துவது கிடையாது.

-ஜோதி நரசிம்மன்