சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 14: காட்சி விளக்கங்களை சமூகமயமாக்கிய ராஷ்மி சின்ஹா

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 14: காட்சி விளக்கங்களை சமூகமயமாக்கிய ராஷ்மி சின்ஹா

webteam
பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்கள் வர்த்தக உலகினரால் கொண்டாடப்படும் அளவுக்கு வெறுக்கப்படவும் செய்கின்றன. 'பிரசண்டேஷன்' என பிரபலமாக குறிப்பிடப்படும் காட்சி விளக்கம் சிறப்பாக அமைந்திருந்தால் பார்வையாளர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சாதாரண அல்லது மோசமான காட்சி விளக்கம், இலக்கு தவறிய அம்பாகி பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்திவிடும். அதனால்தான் நல்ல காட்சி விளக்கத்தை உருவாக்குவது ஒரு கலை என சொல்லப்படுகிறது. இதற்கான உத்திகளும், நுணுக்கங்களும் இருக்கின்றன. பெரும்பாலும் வர்த்தக அரங்குகளிலும், கல்விக் கூடங்களிலும், மாநாடு அறைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த காட்சி விளக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு என்றே ஒரு சமூக வலைப்பின்னல் சேவை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
 
ஆம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பொதுவான சமூக வலைப்பின்னல் சேவைகள் தவிர குறிப்பிட்ட துறைகள், ஆர்வங்கள் சார்ந்த பிரத்யேக சமூக வலைப்பின்னல் சேவைகளும் எண்ணற்றவை இருக்கின்றன. இவற்றில் தொழில்முறையான வலைப்பின்னல் சேவைகளில் லிங்க்டுஇன் (LinkedIn) சேவைக்கு அடுத்தபடியாக காட்சி விளக்க பகிர்வுக்கான ஸ்லைடுஷேர் (SlideShare) சேவை வருகிறது. காட்சி விளக்கங்களுக்கான யூடியூப் என வர்ணிக்கப்படும் இந்த சேவையை உருவாக்கிய ராஷ்மி சின்ஹா (Rashmi Sinha) பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
இந்தியப் பெண்
 
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான ராஷ்மி, அந்நாட்டில் வெற்றிக்கொடி நாட்டிய இந்தியர்களில் ஒருவராக திகழ்வதோடு, தொழில்முனைவு உலகில் தனக்கான தனி இடத்தையும் பெற்றிருக்கிறார். உலகின் செல்வாக்கு மிக்க பெண் தொழில்முனைவோர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ள ராஷ்மி, வலை 2.0 இயக்கத்தின் முன்னணி பெண் செல்வாக்காளராக பாராட்டப்படுகிறார்.
 
தொழில்நுட்ப உலகில் பலவித அடைமொழிகளால் அறியப்படும் ராஷ்மி, வேகமாகவும், பொறுமையின்மையோடும் இருப்பவர் என்று தன்னைப்பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என மற்றவர்கள் கேட்டுக்கொள்ளும் வகையில் எப்போதும் படபடவென பேசக்கூடியவர் என்று அவர் இதற்கு விளக்கமும் அளித்துள்ளார். ராஷ்மியின் குணாதிசயங்களில் ஒன்றாக அமையும் இந்த வேகமும், பொறுமையின்மையுமே தொழில்முனைவிலும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. தான் தேர்வு செய்த பாதை ஸ்லைடுஷேரில் தன்னை கொண்டு வந்து சேர்த்ததாக அவர் கூறியிருக்கிறார்.
ஸ்லைடுஷேர் சேவை
 
புகைப்பட பகிர்வுக்காக பிளிக்கரும், வீடியோ பகிர்வுக்காக யூடியூப் தளமும் அறிமுகமான பிறகு ’பிபிடி’ என சுருக்கமாக குறிப்பிடப்படும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்களை பகிர்ந்து கொள்வதற்காக ஸ்லைடுஷேர் தளம் அறிமுகமானது. வர்த்தக உலகிலும், மார்க்கெட்டிங்கிலும், கல்வித்துறையிலும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்கள் வெகு பிரபலம் என்றாலும், இணையத்தில் இவற்றை பகிர்ந்து கொள்வதற்கான எளிதான வழி இல்லை.
 
பிரசண்டேஷன்களை அச்சிட்டு விநியோகிப்பதை அல்லது சிடி/ பென் டிரைவில் சேமித்து வழங்குவதையுமே பலரும் வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் பிரசண்டேஷன்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வது பற்றி யாரும் யோசிக்கவில்லை. அப்படி யோசித்தவர்கள் அதற்கான வழியை உருவாக்கவில்லை. இந்த பின்னணியில் தான், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொள்வது போலவே காட்சி விளக்க கோப்புகளையும் எளிதாக பகிர்ந்து கொள்ள வழி செய்த ஸ்லைடுஷேர் அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்றது.
 
காட்சி விளக்க கோப்புகளை பகிர்வதற்கான மூல எண்ணம் ராஷ்மியுடையது இல்லை என்றாலும், இதை மையமாக கொண்டு ஸ்லைடுஷேர் நிறுவனத்தை உருவாக்கி வெற்றி பெற வைத்ததில் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. அதோடு, இந்த எண்ணம் உருவானதில் ராஷ்மி தூண்டுகோளாக இருந்திருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. உண்மையில், கணவர் மற்றும் சகோதரரோடு இணைந்து செயல்படுத்திய கூட்டு முயற்சியின் பலனாகவே ஸ்லைடுஷேர் நிறுவனம் உருவானது. இதன் மைய அச்சாக ராஷ்மி இருந்திருக்கிறார்.
யார் இந்த ராஷ்மி?
 
ராஷ்மி இந்தியாவின் லக்னோவில் பிறந்து, கொல்கத்தாவில் வளர்ந்தவர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் இளங்கலை, மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்று நியூரோ சைக்காலஜியில் முனைவர் பட்டம் பெற்றதோடு, கணினி அறிவியல் பாடத்திலும் பட்டம் பெற்றார்.
 
பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றபோதுதான் அவருக்கு இணையத்தின் முக்கிய அங்கமான வலை (web) அறிமுகமானது. கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்திருந்தாலும், தகவல் அறிவியல் துறை பேராசிரியர்களை சந்தித்தபோது அந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டு அடுத்த நாளே துறை மாறினார். இந்த துறையில் தான் அவருக்கு தேடியந்திரங்கள் மற்றும், தகவல் மீட்பு ஆகிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
 
வேகம் வேண்டும்!
 
பெர்க்லி பல்கலைக்கழகத்திலேயே ஆய்வுத்துறையில் ராஷ்மியால் பிரகாசித்திருக்க முடியும். ஆனால் கல்வித்துறை செயல்பட்ட வேகம் அவருக்கு பிடிக்கவில்லை. எல்லாம் விரைவாக நடைபெற வேண்டும் என எதிர்பார்த்தவர் கல்வித்துறையின் மெதுவான செயல்பாட்டால் அதிருப்தி அடைந்தார். எனவே தனது ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கத் துவங்கினார். இதனிடையே மென்பொருள் பொறியாளரான ஜோனாதன் பவுடல்லேவை திருமணம் செய்து கொண்டார்.
 
தொழில்முனைவில் ஆர்வம் கொண்டிருந்த பவுடல்லே அப்போது தான் காமர்ஸ் ஒன் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வெளியேறியிருந்தார். ராஷ்மி தன் பங்கிற்கு இபே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்துக்கொண்டிருந்தார். இந்த நிறுவனங்களுக்கு பயனர் அனுபவம் தொடர்பான விஷயங்களில் தனது நிபுணத்துவத்தை அவர் ஆலோசனையாக வழங்கினார்.
 
உஸாண்டோ (Uzanto) எனும் நிறுவனத்தை உருவாக்கி செயல்பட்டார். அவரது சகோதரர் அமீத் ரஞ்சனும் உடன் இணைந்து செயல்பட்டார். ஆலோசனை வழங்குவதிலும் அவர் கொஞ்சம் மாறுபட்ட வழியை பின்பற்றினார். பயனாளிகள் கருத்துகளை சேகரிப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் சர்வே பாணியை பின்பற்றிய நிலையில், இந்த அலுப்பூட்டும் வடிவை வீடியோ கேம் போல மாற்றி பயனாளிகளை பதில் அளிக்க வைக்கும் உத்தியை ராஷ்மி பின்பற்றினார்.
 
ராஷ்மி ஆலோசனையில் பின்பற்றிய இந்த உத்தியில் இருந்த பொது தன்மையை உணர்ந்த அவரது கணவர் பவுடல்லே இதை நிறுவன வடிவில் வழங்கலாம் என நினைத்தார். இதனையடுத்து ராஷ்மியும், கணவரும் இணைந்து மைண்ட்
கேன்வாஸ் எனும் நிறுவனத்தை துவக்கினர்.
மைண்ட் கேன்வாஸ் நிறுவனம் வெற்றிகரமாகவே அமைந்தது. அதன் வாடிக்கையாளர்களாக வர்த்தக நிறுவனங்கள் அமைந்திருந்தன. இந்த சேவையும் வர்த்தக நிறுவனங்களை மையமாக கொண்டவை என்பதால், அதன் வளர்ச்சியும், செயல்பாடும் வர்த்தக உலகிற்குள் தான் இருந்தது. ராஷ்மிக்கு இது திருப்தி அளிக்கவில்லை. பெரிய அளவில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சேவையை அவர் வழங்க விரும்பினார். இந்த துடிப்பும், ஆர்வமுமே ஸ்லைடுஷேர் சேவைக்கு வித்திட்டது. மைண்ட் கேன்வாஸ் நிறுவனத்தில் பவுடல்லே தொழில்நுட்ப பிரிவில் கவனம் செலுத்திய நிலையில், அமீத் ரஞ்சன் வர்த்தக விஷயங்களை கவனித்துக்கொண்டார். இந்தியாவில் இருந்த அலுவலக கிளையையும் அவர் கவனித்துக்கொண்டார். ராஷ்மி, பயனர் அனுபவம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி நிறுவனத்தை வழிநடத்தினார்.
 
சமூக வலைப்பின்னல்
 
புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இணையத்தில் வலைப்பின்னல் அலை வீசத்துவங்கியிருந்த நிலையில், தொழில்நுட்ப மாநாடுகளும் பல இடங்களில் நடத்தப்பட்டன. இவற்றில் ஒரு வகையான பார்கேம்ப் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப நிகழ்வில் தான் ஸ்லைடுஷேருக்கான விதை உண்டானது. 2006ஆம் ஆண்டு அமீத் மற்றும் பவுடல்லே, இந்தியாவின் டெல்லியில் பார்கேம்ப் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளர்களில் பலரும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்களை பயன்படுத்தினர். பேச்சாளர்களில் பலர் தாங்கள் வழங்கிய பிரசண்டேஷன்களை பார்வையாளர்களுக்கு விநியோகிக்க விரும்பினர் என்றால், பார்வையாளர்களில் பலர் தங்களை கவர்ந்த பிரசண்டேஷன்களை காமிரவில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர். பின்னர் இந்த படங்களை பிளிக்கர் தளத்தில் படமாக அல்லது யூடியூப் தளத்தில் வீடியோவாக பகிர்வது எளிதாக இருக்கும் என்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. ஒரு சிலர் பிரசண்டேஷன்கள் கோப்புகளை பென்டிரைவ்களிலும் பரிமாறிக்கொண்டனர்.
 
ஆக, பிரசண்டேஷன்கள் கோப்புகளை பார்ப்பதிலும், பகிர்வதிலும் பரவலாக ஆர்வம் இருந்தாலும், நேரடியாக பிபிடி கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான எளிதான வழி இருக்கவில்லை. இது தீர்வு காணபதற்கான பிரச்சனை என நினைத்த பவுடல்லே, பவர்பாயிண்ட் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான சேவையை உருவாக்கலாமே என நினைத்தார். ராஷ்மிக்கும் இந்த எண்ணம் ஏற்புடையதாகவே இருக்கவே, மைண்ட்கேன்வாஸ் பொறியாளர்களை கொண்டு இதற்கான சேவையை உருவாக்க தீர்மானித்தார்.
 
ஸ்லைடுஷேர் உதயம்
 
அடுத்த சில மாதங்களில் இந்த சேவை உருவாக 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்லைடுஷேர் சேவை அறிமுகமானது. துவக்கத்தில், மாநாடு ஏற்பாட்டாளர்கள், பிபிடி கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான சேவையாகவே ஸ்லைடுஷேர் அமைந்திருந்தது. இதற்கேற்ப சேவையின் அடிப்படையாகவே இருந்தது. பிபிடி கோப்புகளை இந்த தளத்தில் பதிவேற்றி அதன் இணைப்பை மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வகையில் சேவை அமைந்திருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை மீறி, மேலும் பலவித பயனாளிகள் ஸ்லைடுஷேர் மூலம் தங்கள் பிபிடி கோப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
 
இதன் காரணமாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததோடு, பிபிடி கோப்புகளை பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. பயனாளிகள் ஆர்வத்தை கவனித்த ஸ்லைடுஷேர் குழுவினர், அதன் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தினர். பிபிடி கோப்புகளை பார்க்கும் வசதியோடு, அதன் மீது விருப்பம் தெரிவிப்பது, கருத்து சொல்வது மற்றும் பகிர்ந்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டது. இது பிபிடி கோப்புகளுக்கு சமூகத்தன்மையை அளித்தது. இதை பயனாளிகள் பெரிதும் விரும்பினர்.
 
வெற்றிப் பயணம்
 
வர்த்தக நிறுவனங்கள் மார்க்கெட்டிங் நோக்கில் ஸ்லைடுஷேர் சேவையை பயன்படுத்த துவங்கிய நிலையில் கல்வியாளர்கள் கற்றல் நோக்கிலான கோப்புகளை பகிர்ந்து கொண்டனர். விளைவு ஸ்லைடுஷேர் பிரசண்டேஷன்களை பகிர்வதற்கான சேவையாக பிரபலமானது. எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஸ்லைடுஷேர் வளர்ந்தது. பிளிக்கர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் பிரபலமாக இருந்த பின்னணியில், பிபிடி கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொண்டு அதனடிப்படையில் உரையாடுவதை பயனாளிகள் விரும்பினர்.
பயனாளிகள் ஆர்வத்தை புரிந்து கொண்ட ஸ்லைடுஷேர் தொடர்ந்து இந்த சேவையை மேம்படுத்தியது. அதிக வரவேற்பை பெறும் பிபிடி கோப்புகள் முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிபிடி கோப்புகளில் ஸ்லைடுஷேரில் பார்க்கும் வசதியை உள்ளீடு செய்திருந்தனர். இது பார்வையாளர்களை ஸ்லைடுஷேர் தளம் நோக்கி ஈர்த்தது. மேலும் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் வாயிலாக கோப்புகளை பகிரும் வசதியையும் அளித்தனர். கோப்புகளின் உள்ளடக்கத்தை எழுத்து வடிவில் வாசிக்கும் வசதியும் அளிக்கப்பட்டு அதற்கான தேடல் வசதியும் அளிக்கப்பட்டது. பயனாளிகள் கோப்புகளுக்கான வரவேற்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளவும் வழி செய்யப்பட்டது.
 
தனிநபர்களுக்கு இலவச சேவை என்றாலும், கூடுதல் அம்சங்கள் தேவைப்பட்ட வர்த்தக பயனாளிகளுக்கு கட்டணச்சேவை அளிக்கப்பட்டது. ஆக ஸ்லைடுஷேர் பயனாளிகள் எண்ணிக்கையில் வளர்ந்ததோடு, வருவாயையும் அள்ளிக்குவித்தது. இணையத்தின் சமூகத்தன்மையில் ராஷ்மிக்கு இருந்த புரிதல் ஸ்லைடுஷேர் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் அவரது தலைமை செயலதிகாரியாக அவரது துடிப்பான செயல்பாடும் வெற்றிக்கு உதவியது.
 
பொழுதுபோக்கு, கேளிக்கை சார்ந்த உள்ளடக்கத்தை நாடியவர்கள் யூடியூப் போன்ற சேவைகளை அதிகம் நாடிய நிலையில், தகவல் சார்ந்த உள்ளடக்கத்தை விரும்பியவர்கள் ஸ்லைடுஷேர் தளத்தை தேடி வந்தனர். இது அந்த தளத்தை முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக நிலை பெற வைத்தது. 2012-ம் ஆண்டில் தொழில்முறை வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. பின்னர் மற்றொரு சமூக வலைப்பின்னல் சேவையான ஸ்கிர்ப்டு, ஸ்லைடுஷேர் சேவையை வாங்கியது.
 
ஸ்லைடுஷேர் சேவையை ராஷ்மி வழிநடத்தியவிதம் சிலிக்கான் வேலியில் அவருக்கு தனி செல்வாக்கை உண்டாக்கியது. ஸ்லைடுஷேர் காலத்தில் வலைப்பதிவு (https://rashmisinha.com) மூலம் தனது கருத்துக்களை எழுத்து வடிவில் பகிர்ந்து கொண்ட ராஷ்மி தற்போது அரிதான நோய்களை குணமாக்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். ராஷ்மியின் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/rashmi) அவரது செயல்பாடுகளை அறியலாம்.