சிறப்புக் களம்

எளியோரின் வலிமை கதைகள் 37: கையில காசு இல்லனாலும் பசியாற்றும் ‘கோடியில் ஒருவன்’

எளியோரின் வலிமை கதைகள் 37: கையில காசு இல்லனாலும் பசியாற்றும் ‘கோடியில் ஒருவன்’

webteam

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார்". "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என கோபம் கொப்பளிக்க பாடினார் மகாகவி. உணவு என்பது உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று என்பது நாம் அறிந்தது தான். உணவு தேடி பல இடங்களில் அலைந்து திரியும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். உணவுக்கான பொருளாதாரம் இல்லாமல் பட்டினியாய் கிடக்கும் பலரையும் கூட நாம் பார்த்திருக்கிறோம். யாராவது உணவு கொடுக்க மாட்டாரா என ஏங்கி தவிக்கும் பலரும் நம் கண் முன்னே வந்து போவது உண்டு. அப்படி ஏங்கி தவிக்கிற பசியால் வாடுகிற பலருக்கும் உணவளிக்கும் சில நல்ல உள்ளங்களும் இருந்து தான் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென்கோடிப்பாக்கம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத 24 வயது பூர்த்தியடைந்த பூவரசன் என்கிற இளைஞன் இருந்து வருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உணவளித்து வருகிறார்.

அதற்கென அவர் தொகை எதையும் நிர்ணயிப்பதில்லை. இருந்தால் கொடுங்கள், இயலாதவர்களுக்கு உதவுவதற்கு என்று ஒரு உண்டியல் வைத்து உணவு பரிமாறி வருகிறார். அங்கே எழுதி இருந்த வார்த்தைகள் நம்மை உருவம் உயர்த்த செய்தது. "உணவின் விலை உங்கள் விருப்பம். பணம் இல்லை என்றாலும் நீங்கள் பசியாரலாம்" வாருங்கள் அவரை சந்திக்கலாம்.

வணக்கம். என் பேரு பூவரசன். வயசு 24 ஆகுது. சொந்த ஊரு தென்கோடிப்பாக்கம். நான் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த நேரம். அப்போ கொரோனா பெருந்தொற்று உலகையே மிரட்டிக் கொண்டிருந்தது. அப்போது எதைத் தேடி அலைந்தார்களோ இல்லையோ, உணவுக்கு அலைந்தவர்களைதான் அதிகமாக நான் பார்த்தேன். உணவின் முக்கியத்துவத்தை நான் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். பெருந்தொற்று காலத்துல இலவசமாக எதுவுமே கிடைக்கல. எல்லாமே காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைல தான் இருந்துச்சு. குறிப்பா உணவு, பணம் இல்லாமல் சாத்தியமே இல்லை, அப்படிங்கிற நிலைமைக்கு வந்துச்சு. இன்னும் கொஞ்சம் நேரங்கள்ல பணமே இருந்தாலும் உணவு தட்டுப்பாடு இருந்துச்சு.

அந்த நேரத்தில் தான் நான் ஒரு நாளைக்கு பத்து பேருக்கும், 15 பேருக்கும் என்னால முடிஞ்ச உணவுகளை தயாரித்து பொட்டலமா கட்டிக் கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்தேன். அப்போ "கூட்டத்தில் ஒருத்தன்" அப்படின்னு ஒரு திரைப்படம் பார்த்தேன். அந்த படம் தாங்க என்ன இந்த செயலுக்கு கொண்டு வந்து சேர்த்தது. தினமும் காலையில இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி அப்படின்னு ஒரு 150 பேருக்காவது கொடுத்துகிட்டு வரேங்க. அதுக்காக விலைப்பட்டியல் எல்லாம் எதுவும் நான் வச்சிக்கல்ல. இங்க ஒரு உண்டியல் இருக்கும். சாப்பிட்டவர்கள் அவங்களா பிரியப்பட்டு ஏதாவது அந்த உண்டியல்ல போடுவாங்க. நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இருக்கிறவங்க காசு போடுவாங்க. இல்லாதவங்க, இலவசமாகவே சாப்பிட்டு போவாங்க. அதுக்காகத்தாங்க இந்த வேலையை தொடங்கி இருக்கேன்.

என் கூட எங்க அம்மா குப்பம்மாளும் சேர்ந்து இருக்காங்க. ஒரு நாளைக்கு காலையிலேயும், மதியமும் 40, 50 பேர் சாப்பிடுவாங்க. மதியானம் தக்காளி, தயிர், சாம்பார், லெமன் சாதமுன்னு ஏதாவது ரெண்டு சாதம் வைத்து இருப்பேன். அந்த நேரத்துல எந்த காய்கறி விலை கம்மியா இருக்கோ, அந்த சாப்பாடு தாங்க நம்மகிட்ட. ஒரு வேலைக்கு குறைந்தது 1200 ரூபாய் வரைக்கும் செலவாகுது. ஆனா உண்டியல்ல 200-ல் இருந்து 500 ரூபாய்க்குள்ளதான் இருக்கும். யாராவது ஒருத்தர் தினமும் எப்படியோ ஒரு வகையில எனக்கு இதுக்கான செலவு பணத்த கொடுத்துடுவாங்க. இப்ப கொஞ்சம் பேரு கல்யாணம், பிறந்தநாள் அப்படின்னு ஏதாவது விசேஷம் இருந்துச்சுன்னா, என்னிடம் பணம் கொடுத்து வரவங்களுக்கு சாப்பாடு போடுங்கள் என்று சொல்கிறார்கள். வேலை வெட்டிக்கு எதுவும் போகலைங்க. இது தான் வேலையா நினைச்சுகிட்டு இருக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பேராவது சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த புன்னகை முகத்தோடு போறத பார்க்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க எனக்கும். எங்க அம்மாவுக்கும்.

மனித நேயம், அன்பை பரிமாறுவோம் அப்படின்னு இந்த வேலைகளை தொடங்கி இருக்கோம். எதிர்காலத்தில் இன்னும் நிறைய பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்று ஒரு திட்டம் வச்சிருக்கேன். ஏதோ சில நல்ல உள்ளங்கள் பொருளாதார ரீதியா உதவி பண்றது, இந்த வேலை செய்யறது, எனக்கு கொஞ்சம் சிரமம் குறைஞ்ச மாதிரி இருக்குது. பசி அப்படின்னு நினைக்கிற யாரா இருந்தாலும், இங்க வரலாங்க. அவங்களுக்கு அடுத்த வினாடியே உணவு கொடுக்கிறது தான் என்னுடைய வேலை என்றார் பூவரசன்.

இப்பல்லாம் குறைந்த விலைக்கு உணவு கிடைக்கிறது ரொம்ப சிரமம். அதுலயும் விலை இல்லாமல் உணவு வழங்குவது அப்படிங்கறது, ஒரு பெரிய பெருந்தன்மை தாங்க. இருக்கறவங்க கொடுக்கிற ஏதாவது கொஞ்சத்துல, இல்லாதவங்களுக்கும் உணவு வழங்குற அந்த வேலையில பூவரசன் ஈடுபட்டு இருக்காரு. பூவரசன் மட்டும் இல்லைங்க, இதுபோல பல மாவட்டங்களில் பலர் இருக்கிறாங்க. அவங்க ஒவ்வொருத்தரையும் அடையாளப்படுத்த முடியல. அவங்களுடைய எல்லார் சார்பாக பூவரசனை அடையாளப்படுத்துவதில்லை மகிழ்ச்சி அடைகிறோம்.

- ஜோதி நரசிம்மன்