சிறப்புக் களம்

’கொரோனாவால் பறிபோன ஊதியம்’ : பேராசிரியர் - ஆசிரியை தம்பதி பிரியாணி கடை உரிமையாளரான கதை

’கொரோனாவால் பறிபோன ஊதியம்’ : பேராசிரியர் - ஆசிரியை தம்பதி பிரியாணி கடை உரிமையாளரான கதை

Sinekadhara

கொரோனா பொதுமுடக்கம் பலபேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்ட நிலையில், அதனால் வேலை இழந்த பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர், பிரியாணிக்கடை உரிமையாளராக மாறியுள்ளார்.

பொதுமுடக்க நேரத்தில் வேலை இழந்த தம்பதி, தங்கள் வேலையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அவர்கள் ஜூன் மாதம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள் மேலகோட்டையூரில், சாலையோரத்தில் சிறிய அளவில் ஆரம்பித்த பிரியாணி கடை வாடிக்கையாளர்களின் ஆதரவால் ஆகஸ்ட்டில் உணவகமாக உருவாகியுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்டு 2 வயது குழந்தையுடன் இனிமையாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் ஜானகிராமன் - சுரேதா தம்பதி. தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியராக இருந்த ஜானகிராமனுக்கு வேலை பறிபோனநிலையில், பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்த சுரேதாவும் வேலை இழந்தார். இதனால் கடந்த ஜூன் மாதம் வண்டலூர் - கேளம்பாக்கம் செல்லும் சாலையில் பிரியாணி விற்கத்தொடங்கினர் இந்த தம்பதி.

தனது வாழ்க்கை மாறியத் தருணத்தைப் பற்றி ஜானகிராமன் கூறுகையில், ‘’நான் ME, MBA படித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைசெய்து வந்தேன். BE படித்துள்ள என் மனைவி சுரேதாவும் கொரோனா பொதுமுடக்கத்திற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். கொரோனா காரணமாக இருவருக்கும் சம்பளம் வரவில்லை. குடும்பத்தின் வறுமை காரணமாகத்தான் பிரியாணி விற்கத் தொடங்கினோம்’’ என்கிறார்.

சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பால் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பிரியாணி பிசினஸை பெரிதாக்கியுள்ளனர் இந்த தம்பதி. ஆனால் என்னதான் வறுமை காரணமாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும், இவர்களின் வளர்ச்சிகண்டு அக்கம்பக்கத்தினர் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.

அதுபற்றி சுரேகா கூறுகையில், ’’நாங்கள் தினமும் கடை போடும்முன்பே 200க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்பார்கள். ஆனால் எங்களிடம் வெறும் 100 பிரியாணிதான் இருக்கும். எனவே நான் கூட்டம் சேரசேர சமைத்துக்கொண்டே இருப்பேன். எங்கள் கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருப்பதைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரர்கள் எங்கள்மீது பொறாமைகொண்டு சண்டைபோட ஆரம்பித்தனர். ஆனால் தற்போது எங்கள் ரோட்டோரக் கடை வளர்ந்து உணவகமாக மாறியுள்ளது’’ என்கிறார்.

பிரியாணி சுவை வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டதால், இனி தங்கள் பழைய வேலைக்கு திரும்பப்போவதில்லை என்கின்றனர் இந்த தம்பதி.