சிறப்புக் களம்

இது ஸ்டீபன் ஹாக்கிங்கின் காதல் கதை!

இது ஸ்டீபன் ஹாக்கிங்கின் காதல் கதை!

webteam

"பூமியில் வாழும் உயிர்களுக்கு திடீரென வரப்போகும் அணுஆயுத யுத்தம், மரபுசார் வடிவமைக்கப் பட்ட வைரஸ், புவி வெப்பமடைதல் போன்றவற்றால் ஆபத்துக்கள் நேரும் என்பதை மனிதர்கள் இதுவரை நினைத்திருக்கவில்லை. நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம்.  இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது...”-ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்-ன் மறக்க முடியாத, மறுக்க முடியாத வரிகள் இவை.

உலகத்தின் தலை சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர். அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டவர். ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து நடமாடவும் பேசவும் முடியாத நிலையில், இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது என மருத்துவர்களால் கணிக்கப்பட்ட இவர் தான் இன்றைய அறிவியல் உலகில் அசைக்க முடியாத வரலாறு. இக்குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமே இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொதுவாழ்விலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.


 
சார்பியல் கோட்பாட்டையும், குவாண்டம் இயக்கவியலையும் இணைத்து புதிய அண்டவியல் கோட்பாட்டை அளித்த முதல் நபர் இவர் தான். அண்டவியல் துறைக்கு இவர் அளித்த பங்கு அளப்பறியது. உலகின் சிறந்த அறிவியல் மூளைகளை ஆராய்ந்தால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகராக இவருடைய மூளையை நிறுத்திப் பார்க்கலாம். இந்த அறிவியல் ஜாம்பவானின் வாழ்க்கையிலும் அழகான காதல் கதைகள், இருந்தது எவ்வளவு பேருக்குத் தெரியும்?  

ஆக்ஸ்ஃபோர்ட்டில் இயற்பியல் பயின்று வந்த ஹக்கிங்க்கு அவருடைய  பாடத்திட்டங்கள் அவ்வளவு சவாலானதாக இல்லை. பெரிய அளவில் சிரத்தை எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் Ph.D பயின்று வந்த ஹக்கிங்க்கு ஜேன் வீல்ட் அறிமுகமானார். இலக்கியம் பயின்று வந்த மாணவியான ஜேனும், அறிவியல் ஆராய்ச்சியாளராக உருவாகிக் கொண்டிருந்த ஹக்கிங்கும் நட்பில் இணைந்தனர், காதலும் மலர்ந்தது. 

வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும்போது தான் பெரிய அளவில் துன்பமும் வரும் என சிலர் கூறுவது ஹக்கிங்கின் விஷயத்தில் உண்மையானது. ALS நோயின் தாக்கம் அதிகரித்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ இயாலாது என மருத்துவர்கள் சொன்னதும் தன் வாழ்க்கை ஒரு சோக கீதம் என மனதைத் தேற்றிக் கொண்டே அமைதியாக இருந்தவாறே, அதிகம் அமர்ந்தவாறே, இசை கேட்டவாறே, தன் வாழ் நாளைக் கழிக்க முற்பட்டார். ஆனால் ஜேன் தளரவில்லை ஹக்கிங்கை விட்டு விலகவுமில்லை. இந்த நோயை நாம் சேர்ந்தே எதிர்கொள்வோம் என்றார். கடைசி நாட்களாக இருக்கும் என நினைத்த ஹக்கிங்க்கு திருமணத்தை நோக்கிய எண்ணம் புதிய உத்வேகத்தையளித்தது. படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்றார். அவர்களது திருமணமும் நடந்தது.

நாட்களை எண்ணிக் கொண்டிருந்த இருவரும் தங்களது நேரத்தை சந்தோஷமாக மட்டுமே கழிப்பது என உறுதியாயிருந்தனர். குழந்தைகள், இன்னும் கொஞ்சம் நீட்டித்த வாழ்க்கை என நாட்கள் வளர அவரது நோயின் தீவிரமும் வளர்ந்தது. ஒரு மலைப்பாம்பு தன் இரையை மெல்ல மெல்ல விழுங்குவது போல நோய் அவரது ஒவ்வொரு செயல்பாட்டினையும் விழுங்கியது. நாளடைவில் எழுந்து நடமாட முடியாத, கை கால்களை அசைக்க முடியாத, பேசும் திறன் இழந்தவரானார். அடிக்கடி தலை ஒரு பக்கமாக சாய்ந்துகொள்ளும். சுயமாக அவரால் அதைக்கூட சரி செய்ய இயலாது. ஆனாலும் அவரது சிந்திக்கும் திறனுக்கும் அறிவியல் சாதனைகளுக்கும் முட்டுக்கட்டை போட அந்தக் கொடிய நோயால் முடியவில்லை.

1990ல் தனக்கு சேவை புரிந்த செவிலியர் எலைன் மேசனை காதலித்து மணந்து கொண்டார். வயது, உடல் கடந்த மனப்பூர்வமான காதலாக இருந்திருக்க வேண்டும். ஜேனும் ஜோனத்தன் ஹெல்லர் என்பவரை மணந்து கொண்டார். 5 வருடங்களாக சிறப்பாகத் தொடர்ந்த ஹாக்கிங்- மேசன் திருமண உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. பின் ஒரு சில வருடங்களில் ஹாக்கிங் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் வருந்தினர். ஆனாலும் காவல்துறை விசாரணையில் ஹாக்கிங் எதையும் சொல்ல மறுத்துவிட்டார். 2006ம் வருடம் ஹாக்கிங்- மேசன் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு ஹாக்கிங் மீண்டும் ஜேனிடம் வந்து சேர்ந்தார். அவரது கடைசி 10 வருடங்களை ஜேன்- ஜோனத்தன் மற்றும் தன் மகன், மகள்கள் பேரப் பிள்ளைகளோடு கழித்தார். 

கல்லூரிக் காலத்தில் காதலித்து மணம் முடித்து, நோயுடன் இருவரும் சேர்ந்து போராடி, சாதனைகள் புரிந்து, மண வாழ்க்கை முறிந்து வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து வெவ்வேறு வழியில் சென்றாலும், வாழ்வின் கடைசி சில வருடங்களில் மீண்டும் இணைந்து, எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பை முதுமையிலும் பகிர்ந்து கொண்டு, வாழ்க்கையை இவ்வளவு அழகான முதிர்ச்சியோடு கடந்து சென்ற இவர்கள் உண்மையாகவே காலத்தையும் காதலையும் ஒருசேர வென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல!

எதை இழந்த போதிலும் இழந்ததைப் பற்றி கவலைகொள்ளாமல் நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என சொல்லிக்கொடுத்த ஹாக்கிங்ஸ் அறிவியலில் மட்டுமல்ல அன்பிலும் அரசனே!

கட்டுரையாளர் : திலகவதி