சிறப்புக் களம்

பணம் பண்ண ப்ளான் B -24: பங்குச்சந்தையில் அடி வாங்கும் ஸ்டார்ட்அப்- அடுத்து என்ன நடக்கும்?

பணம் பண்ண ப்ளான் B -24: பங்குச்சந்தையில் அடி வாங்கும் ஸ்டார்ட்அப்- அடுத்து என்ன நடக்கும்?

webteam

சில வாரங்களுக்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உற்சாகத்தில் இருந்தன. இதற்கு முக்கிய காரணம், பேடிஎம், ஜொமோட்டோ மற்றும் நய்கா ஆகிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ வெளியானதுதான். இதில் பேடிஎம் தவிர மற்ற இரு ஐபிஓ-களும் நல்ல ஏற்றத்தில் இருந்தன. ஆனால் தற்போது மூன்று பங்குகளும் இதுவரை இல்லாத குறைந்தபட்ச விலையைக் கடந்த வாரம் தொட்டன. இந்தப் பங்குகளில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பங்குகளின் சரிவு இருந்தது.

செவ்வாய்க்கிழமை 75 ரூபாய் வரை ஜொமோடோ பங்கு சரிந்தது. பின்னர் சிறிதளவுக்கு உயர்ந்து 85 ரூபாய் வர்த்தகமானது. இந்த பங்கு அதிகபட்சம் 169 ரூபாய் வரை உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நினைவு இருக்கலாம்.

பேடிஎம் பங்கு ஆரம்பத்தில் இருந்தே முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.2,150 க்கு இந்தப் பங்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட தள்ளுபடி விலையிலே வர்த்தகம் தொடங்கியது. தற்போது 833 ரூபாயில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் சந்தை மதிப்பு ரூ54,000 கோடி அளவில் இருக்கிறது. ஆனால் ஐபிஓ சமயத்தில் ரூ.1.39 லட்சம் கோடியாக இருந்தது.

பேடிஎம் பங்கில் நம்பிக்கை இல்லை,  ஆனால் நய்காவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காரணம் இந்த நிறுவனம் லாபத்தில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம். ஆனால் தற்போது அந்த பங்கும் கடுமையாக சரிந்து வருகிறது.

பட்டியலாகும் போது 79 சதவீத பிரீமியத்தில் (ரூ.2,574) இந்த பங்கு பட்டியலானது. ஆனால் தற்போது கடுமையாக  குறைந்து 1,400 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமாகிறது. தற்போது ஐபிஓ விலைக்கு மேலே வர்த்தகமானாலும், உச்சபட்ச விலையில் இருந்து கடுமையாகச் சரிந்திருக்கிறது.

இந்த மூன்று பங்குகளின் செயல்பாடு அடுத்து ஐபிஓ-வுக்கு தயாராகும் பங்குகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டவில்லை என்பது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர். அதனால் அடுத்து வரும் ஐபிஓ-கள் வெற்றியடையுமா என்னும் சந்தேகம் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு உருவாகி இருக்கிறது.

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெலிவேரி வரும் மார்ச் மாத்துக்குள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருந்தது. தற்போது ஐபிஓவை அடுத்த நிதி ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறது. இதேபோல ஓயோ நிறுவனத்தின் ஐபிஓவும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் செபியின் அனுமதி கிடைக்கவில்லை.  ஒயோ நிறுவனத்துக்கும் ஜோஸ்டல் நிறுவனத்துக்கும் இடையேயான சிக்கல் காரணமாக செபி இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இதுதவிர பாலிசிபஸார் மற்றும் கார்ட்ரேட்  உள்ளிட்ட நிறுவனங்களின்  பங்குகளும் உச்சபட்ச விலையில் இருந்து  கடுமையாக சரிந்திருக்கின்றன.

பார்ம்ஈஸி

இ-பார்மஸி நிறுவனமான பார்ம்இஸி ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருந்தது. இதற்காக கடந்த நவம்பரில் செபியிடம் விண்ணப்பித்தது. இன்னமும் செபியின் அனுமதி கிடைக்கவில்லை. பேடிஎம் ஐபிஓவுக்கு முன்பாக பார்ம்இஸி நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.120-130 வரை மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 80 ரூபாய் வரையில் வர்த்தகமாகி வருவதாக தெரிகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அபரிவிதமாக இருப்பதால், சந்தை மதிப்பை மீண்டும் பரிசீலனை செய்ய பார்ம் ஈஸி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

செபி

ஸ்டார்ட் அப் ஐபிஓகளின் பங்குகள் கடுமையாக சரிந்திருப்பதால் கூடுதல் விதிமுறைகளை கொண்டுவர செபி திட்டமிட்டு வருகிறது. பங்குகளின் விலையை எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை தெரிவிக்கவேண்டும் என விதியை மாற்ற செபி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இந்த விதி உருவாக்கப்படும் பட்சத்தில், விலை எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப் பபுள்

ஆறு மாதங்களுக்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஐபிஓ குறித்து உற்சாகமாக இருந்த பங்குச்சந்தை, தற்போது நேர் எதிராக மாறி இருக்கிறது. இந்த நிலையில் பங்குச்சந்தையின் முக்கியமான முதலீட்டாளரான பொரிஞ்ச் (porinju veliyath) 90 சதவீத யுனிகார்ன் நிறுவனங்கள் வெடிக்க காத்திருக்கின்றன என ட்வீட் செய்திருக்கிறார்.

2021-ம் ஆண்டு மட்டும் 51 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன. மேலும் பல யுனிகார்ன் நிறுவனங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்டார்ட் அப் பபுள் உருவாகும் என்ற அச்சம், ஐபிஓகள் தள்ளிப்போகின்றன, செபியின் நெருக்கடி என பல முனைகளில் இருந்து ஸ்டார்ட் அப்களுக்கு நெருக்கடி உருவாகி இருக்கிறது.

இதையும் படிக்கலாம்: பணம் பண்ண ப்ளான் B -23: NFO முதலீடு என்றால் என்ன? யார் முதலீடு செய்யலாம்? யார் கூடாது?