தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த, விசிக, மதிமுக கட்சிகளின் குரல்கள் அமைதியாக தொடங்கியுள்ளன. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட தயாராகிறதா இக்கட்சிகள்?. விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைத்தார் ஜெயலலிதா, அந்த பாணியில் தற்போது விசிக, மதிமுக போன்ற சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு வலியுறுத்தி (நிர்பந்தித்து என்றும் சொல்கிறார்கள்) வருகிறார் ஸ்டாலின். தற்போதைய இந்த முயற்சிக்கு வெள்ளோட்டமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே மதிமுக, விசிக கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைத்தது திமுக.
ஒரு கட்சி தனது தேர்தல் சின்னத்தை, மாநில கட்சி அந்தஸ்தை இழந்தபின்னர் ஆறு ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தலாம். அதன்படி 2010 ஆண்டிலேயே மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது மதிமுக, அதனால் தற்போது மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக்குறைவு. அதைப்போலவே விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவில்லை, அதனால் அக்கட்சிக்கும் நிலையான சின்னம் இல்லை. இதனால்தான் கடந்த நாடாளுமன்றதேர்தலில் கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு தொகுதியில் பானை சின்னத்தை பெற்றார் திருமாவளவன், மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் விசிக உதயசூரியன் சின்னத்திலேயே வெற்றிபெற்றது. அதைப்போலவே மதிமுகவும் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் களம்கண்டு வென்றது.
ஆரம்பத்தில் தனிச்சின்னம்தான் வேண்டும் என்று கறாராக பேசி வந்த திருமாவளவன் தற்போது பேசுகின்ற தொனியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மனநிலைக்கு தயாராகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக பேசிய திருமாவளவன் “ பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத எங்களைப்போன்ற கட்சிகள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால், அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதால் கூட்டணியின் நலன் கருதி திமுக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டிடலாம் என்ற ஆலோசனையை வழங்குகிறார்கள், அதனை பரிசீலிக்க வேண்டியது எங்களைப்போன்றோரின் கடமை, அதைத்தான் நான் சொன்னேனே தவிர, நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று சொல்லவில்லை, எங்களுக்கு அதுபோன்ற நிர்பந்தமும் திமுக கொடுக்கவில்லை. எங்களின் தனித்தன்மையும், தன்மதிப்பும் பாதிக்காத வகையில், கூட்டணியின் வெற்றியை பாதிக்காத வகையில் முடிவெடுப்போம்” என கூறினார்
மேலும் அவர் “பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு கடைசி நேரத்தில்தான் சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும். 15 நாட்களில் மக்களிடம் சின்னத்தை கொண்டு சேர்ப்பது சிரமம், அதனால்தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை, தங்கள் சின்னத்திலேயே போட்டியிடும்படி ஆலோசனையை வழங்குகிறார்கள். இதனை தவறு என்றோ, வற்புறுத்தல் என்றோ சொல்ல முடியாது” என்று கூறினார்
ஒருவேளை திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், மதிமுகவும் உதயசூரியனுக்கு சம்மதித்தே ஆக வேண்டும், மற்ற சில கட்சிகளுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிர்பந்தம் ஏற்படலாம். இதற்காகவே முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலமாக, கூட்டணி கட்சிகளை ஆழம் பார்க்கிறது திமுக. மேலும் தனிச்சின்னத்தில் போட்டி என்றால் குறைவான தொகுதிகள்தான் கொடுப்போம், உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்றால் கூடுதல் தொகுதிகள் கொடுப்போம் என்றும் திமுக தரப்பில் ஆஃபர் கொடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக கிட்டத்திட்ட 180 முதல் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே திமுகவின் வியூகம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அங்கீகாரம் இல்லாததால்தான் தனிச்சின்னத்தில் போட்டியிடும்படி ஒவ்வொரு முறையும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள், சிறிய கட்சிகளிடம் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் பேச்சைக்கேட்டு ஒவ்வொரு முறையும் அவர்களின் சின்னத்திலேயே போட்டியிட்டால் ஒரு கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஒருமித்த கருத்துக்காக கூட்டணி என்றாலும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு, அப்படி இருக்கும்போது கடைசி நேரத்தில் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று பெரிய கட்சிகள் நிர்பந்தம் கொடுப்பது சர்வாதிகார செயல். எனவே ஒவ்வொரு கட்சியையும் அதன் விருப்பத்திற்கேற்ப போட்டியிட அனுமதிப்பதே நல்ல ஜனநாயகமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.