சிறப்புக் களம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சென்னையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சென்னையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா?

webteam

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகத்தின் பல நாடுகளில் பரவி பலரின் உயிரை குடித்து வருகிறது. சீனாவில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் இருந்தாலும் மற்ற நாடுகளை விட்டுவைக்கவில்லை. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவே கொரோனாவால் ஸ்தம்பித்து போய் நிற்கிறது.

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 லிருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027 லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 937 லிருந்து 1,007 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 2058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஏப்ரல் 21-ஆம் தேதி 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22-ஆம் தேதி 15 பேர், 23-ல் 27 பேர், 24-ல் 52 பேர், 25-ல் 43 பேர், 26-ல் 28 பேர், 27-ல் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் இவ்வளவு தூரம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னையில் கொரோனாவின் மூன்றாம் நிலையான சமூக தொற்று பரவ தொடங்கிவிட்டதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் சுமந்த் சி.ராமன் கூறுகையில், “பல்வேறு இடங்களில் அதிக பாதிப்பு இருந்தால் அதை சமூக பரவலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சமூக பரவல் இருப்பதற்கான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஊரடங்கின்போதே இவர்களை கண்டுபிடித்தது ஒரு நல்ல விஷயம். ஊரடங்குக்கு பின்னர் இவர்களை கண்டறிந்தால் அதில் பலன் எதுவும் இல்லை. மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் சென்னையை பொருத்தவரை சமூக தொற்று இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே பல வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. 90 சதவீதம் பேர் தாமாகவே குணமாகிவிடுவார்கள். அது நாம் சிகிச்சை அளித்தாலும் சரி, அளிக்கவில்லை என்றாலும் சரி. அதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ள தேவையில்லை. உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இறப்பு எண்ணிக்கையைதான். அது அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நெரிசல் இருக்கும் இடங்களில் கொரோனா பரவல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நாம் நெரிசலை முற்றிலுமாக தடுக்கவில்லை. பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பெரிய நகரங்களில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் பரவல் அதிகமிருக்கும். இன்னும் தீவிரமாக சென்னையில் பரிசோதனைகள் செய்ய வேண்டும். சென்னையில் சமூக தொற்று இருப்பதை ஏற்றுக்கொண்டு பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இல்லை என்பது நிச்சயமாக மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்று. ஆனால் சென்னையை பொருத்தவரை அடுத்து சில நாட்கள் அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.