மாநிலங்கள் நிதிச்சுமையை சமாளிக்க கடன் வாங்க சொல்வது மேலும் மேலும் மாநிலங்களுக்கு நிதிச்சுமையை கூட்டுமே தவிர அதை தீர்க்கும் வழியாகாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட இரண்டு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
முதல் திட்டத்தின் படி ரூ.97,000 கோடி வரை மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது திட்டத்தின் படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இது மாநில அரசுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த சிறப்பு கடன் திட்டங்கள் குறித்து பொருளாதார நிபுணர் சங்கர் நீதிமாணிக்கம் கூறுகையில்,
‘’ஜிஎஸ்டி கொண்டுவரும்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளுக்கு கண்டிப்பாக தேவையான இழப்பீடு தரும் என்ற உறுதிமொழி இன்று காற்றில் பறக்கவிடப்பட்டு, மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும்போது இரண்டு தெரிவுகளை கொடுத்து உங்கள் பற்றாக்குறைக்கு மைய வங்கியின் வழிகாட்டுதலோடு கடன்வாங்கியோ அல்லது நிதிச்சந்தையில் இருந்து திரட்டியோ சமாளியுங்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
ஏனெனில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய வருவாய் இழப்புக்கு/குறைவுக்கு ஈடு செய்யவே சில குறிப்பிட்ட பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அதுவுமில்லாமல் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல் டீசல் போன்றவை மீது வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான வரித் தொகையை இந்த அவரச காலத்திற்கு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்து நிலைமையை சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையும் கூட.
அதை விடுத்து மாநிலங்கள் நிதிச்சுமையை சமாளிக்க கடன் வாங்க சொல்வது மேலும் மேலும் மாநிலங்களுக்கு நிதிசுமையை கூட்டுமே தவிர அதை தீர்க்கும் வழியாகாது. மேலும் அப்படி வாங்கும் கடனை திருப்பி அடைக்கவும், வட்டி கட்டவும் மேலும் செஸ் வரியை விதிக்க வழிகாட்டுகிறது. அது ஒரு சில பொருட்கள் மீதுதான் என்றாலும் எல்லா வரிச் சுமையும் கடைசியில் சாமானிய மக்களின் தலையில் தான் பலவிதமான வழிகளில் வந்து விழுகிறது.
இந்தப் பெருந்தொற்று காலம் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றவேண்டிய ஒரு தருணம் என்பதிலும் ஒருவரை ஒருவர் குறைகாணும் காலமுமில்லை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை., ஆனால் பொருளாதார சிக்கலில் இருந்து மீள வழிகண்டறிய வேண்டிய மத்திய அரசின் நிதியமைச்சர் இந்த சூழலுக்கு கடவுள் தான் காரணம் என்று சொல்லுவது அவர் தன்னுடைய கடமையில் இருந்து தப்பிக்க வழிபார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது’’ என்கிறார் அவர்.