தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருக்கின்ற திரு ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையின் பல்வேறு அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்ற போதிலும் அதில் வரி வருவாய்ப் பகிர்வு குறித்து கூறப்பட்டிருப்பதை நாம் கூடுதல் முக்கியத்துவத்தோடு பார்க்கவேண்டியுள்ளது.
வரி வருவாய்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாக பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கும் மொத்தம் 81570 கோடி ரூபாய் வழங்கப்படவேண்டும் என மத்திய அரசுக்கு 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கியிருக்கும் தொகை 72234 கோடி ரூபாய் மட்டும்தான். இதை பட்ஜெட்டில் பதிவு செய்துள்ளனர்.
மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு பதவியேற்றதும் மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக ஆரவாரத்தோடு அறிவித்தது. ‘கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரலிசம்’ என்ற புதிய வார்த்தை பிரதமர் மோடியாலும், நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியாலும் கவர்ச்சிகரமாக முன்வைக்கப்பட்டது. வரி வருவாய்ப் பகிர்வை 32% இல் இருந்து 42% ஆக உயர்த்தியிருப்பதாகவும் நிதி அமைச்சர் அறிவித்தார். 2016 ஆம் ஆண்டில் சுமார் 5.24 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் மொத்த வருவாயில் 62% ஐ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் அவை யாவும் ஏமாற்றுப் பேச்சுகள் என்பது வெகு விரைவிலேயே அம்பலமாகிவிட்டது.
மத்திய அரசால் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை சீரமைப்பதற்காக மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதலமைச்சர் தலைமையில் நிதி ஆயோக் ஒரு குழுவை அமைத்தது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவந்த 66 திட்டங்களை அக்குழு 28 ஆகக் குறைத்தது. அதுமட்டுமின்றி அவற்றை முதன்மையிலும் முதன்மை, முதன்மை, விருப்பத்தின் அடிப்படையிலானது என மூன்று வகையாகப் பட்டியலிட்டது. முதல் பிரிவில் உள்ள திட்டங்களுக்கு மாநிலங்கள் 30% நிதிச் சுமையை ஏற்கவேண்டும், இரண்டாவது வகைத் திட்டங்களுக்கு 40% நிதிச்சுமையை ஏற்கவேண்டும், மூன்றாவது வகைத் திட்டங்களுக்கு மாநிலங்கள் 50% நிதிச்சுமையை ஏற்கவேண்டும் என ஆக்கப்பட்டது. அதன்மூலம் முன்பிருந்ததைவிட அதிகமான நிதிச்சுமையை மாநிலங்களின் தலையில் பாஜக அரசு கட்டியுள்ளது.
அப்படி நிதி ஒதுக்கும்போதும் வளர்ச்சியடைந்த மாநிலம் எனக் கருதப்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குக் குறைவான விகிதத்திலேயே நிதி ஒதுக்கப்படுகிறது. அதாவது தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் வரியை வசூலித்து அதை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஓரவஞ்சனையான அணுகுமுறை பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே துவங்கிவிட்டது. முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான விகிதங்களைக் குறிப்பிட்டு 2013 ஆம் அண்டு ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. அதில் 4.46% ஆக இருந்த தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை 2.51% ஆகக் குறைக்கவும், 7.42% ஆக இருந்த பீகாருக்கான ஒதுக்கீட்டை 12.04% ஆக உயர்த்தவும், 10.09% ஆக இருந்த உத்தரப்பிரதேசத்துக்கான ஒதுக்கீட்டை 16.41% ஆக உயர்த்தவும், 4.79% ஆக இருந்த ராஜஸ்தானுக்கான ஒதுக்கீட்டை 8.42% ஆக உயர்த்தவும் அது பரிந்துரை செய்திருந்தது. அதைத்தான் இப்போது மோடி அரசு செயல்படுத்துகிறது.
கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கர்நாடகாவுக்கு 155% ஆகவும், மகராஷ்டிராவுக்கு 149% ஆகவும், ஆந்திராவுக்கு 128% ஆகவும் இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு 89% ஆக மட்டுமே உள்ளது என இன்று சமர்ப்பிக்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதி அமைச்சராக இருந்த திரு ஜெயக்குமார் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் இதைப்போன்றே புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. “பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், 2015-2016 ஆம் ஆண்டு முதல், மத்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான தனது பங்கினை மத்திய அரசு குறைத்துள்ளதால், அத்திட்டங்களில் மாநில அரசின் பங்கு கூடியுள்ளது. இதனால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடியுள்ளது” என அப்போது கூறப்பட்டிருந்தது. அந்த நிலை இப்போதும் மாறவில்லை என்பதையே திரு ஓ.பி.எஸ் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டிலும் பார்க்க முடிகிறது.
மத்திய அரசு திட்டமிட்ட முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பதற்கு இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ள கூற்று ஒரு சான்றாகும். இந்த அநீதியை எதிர்த்து வலுவாகக் குரலெழுப்பவேண்டியது தமிழக அரசின் கடமை மட்டுமல்ல, அது இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையுமாகும். ஏனெனில் இது மாநில உரிமை தொடர்பான பிரச்சனையாகும்.
மாநில அரசுகள் எல்லாவிதமான பொருளாதார தேவைகளுக்கும் இன்று மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதையும் மத்திய அரசுதான் தீர்மானிக்கிறது. கிராமப்புற வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உட்பட மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள்தான், மத்திய அரசின் நிதி நல்கை இல்லாவிட்டால் அவற்றைத் தொடரமுடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) ன் படி நிதி ஆணையம்தான் மத்திய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும்.
பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போதெல்லாம் ஆளுங்கட்சியைக் குறை சொல்லிவிட்டு நமக்கென்னவென்று இருந்தால் பாதிப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை மனதில்கொண்டு மாநில அரசின் நிதித் தற்சார்புக்கான வலுவான போராட்டங்களைத் தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேண்டும். அப்படிப் போராடுவதற்கு இனியும் காலந்தாழ்த்தக்கூடாது என்பதையே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது.