சிறப்புக் களம்

ஆதாரம் வெளியிட்ட வேல்முருகன் - செல்வமுருகன் மரணத்தில் அடுத்தடுத்து எழும் கேள்விகள்

ஆதாரம் வெளியிட்ட வேல்முருகன் - செல்வமுருகன் மரணத்தில் அடுத்தடுத்து எழும் கேள்விகள்

webteam

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர் காவல்நிலைய போலீசார், திருட்டு வழக்கு சம்பந்தமாக காடாம்புலியூரை சேர்ந்த செல்வமுருகன் என்பவரை 30.10.20 அன்று கைது செய்து விருத்தாச்சலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். அதனையடுத்து, 4.11.20 இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

இந்த நிலையில் அறிவியல் இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் தனியார் லாட்ஜில் காவல்துறையினர் செல்வ முருகனை ஒரு அறையில் வைத்து சித்திரவதை செய்ததால் இறந்துவிட்டதாகவும், அவர் இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது மனைவி நவம்பர் 5 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் தமிழக அரசு நவம்பர் 6 ஆம் தேதி வழக்கை சிபிசிஐடியிடம் மாற்றியது.

நவம்பர் 7 ஆம் தேதி கடலூர் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் தீபா விசாரணையைத் தொடங்கினார். ஆனால் ஒரு ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது மற்றொரு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டால் முழுமையான தகவல் வெளிவராது எனவும் விசாரணையை, ஆய்வாளர்களுக்கு மேல் பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை வேண்டும் எனவும் செல்வமுருகன் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வமுருகன் உடல் உள்ளது. 

பின்னர், ஆய்வாளர் விசாரணையிலிருந்து டிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறப்பு விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. செல்வமுருகன் மனைவி, உறவினர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பின்போது, சில ஆதாரங்களை வெளியிட்டார். அதாவது, நகைக்கடை ஒன்றில் செல்வமுருகனை காவலர் மிரட்டும் சிசிடிவி காட்சியை வெளியிட்டார் வேல்முருகன். செல்வமுருகன் மீது திட்டமிட்டே திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் வேல்முருகன் பேசுகையில், “விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 

உயிரிழந்த செல்வமுருகன் வழிப்பறி திருடர் அல்ல; வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். மற்ற செல்வமுருகன் என்ற பெயரில் உள்ள எஃப்.ஐ.ஆர்களை காவலர்கள் காட்டினர். அக்டோபர் 29 ஆம் தேதி காவலர்களுடன் இருக்கும் செல்வமுருகன் 30 ஆம் தேதி எப்படி நகையை வழிப்பறி செய்திருக்க முடியும். கொரோனா காலத்திலும் அதற்கு முன்பே பண மதிப்பிழப்பு காலத்திலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பணப் பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளாகி சற்றே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவரது இந்த நிலையில் போலீசார் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ” என்று கூறினார். மாஜிஸ்திரேட்டிடம் தான் அந்த ஆதாரங்களை அளிக்க உள்ளதாக தெரிவித்தார். 

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாநிதி, “ நான் டிவி விவாதங்களின்போது சொன்னேன். அது சரியா என்பதை விசாரணை செய்து தெரிந்து கொள்ளலாம். அன்றே நான் சொன்னது என்னவென்றால், உயிரிழந்த வேல்முருகனின் மனைவி நடந்த சம்பவங்களை விவரித்தது நாடகத்தனம்போல் இல்லை. உண்மையாக இருப்பது போன்றே எனக்கு தோன்றியது. வேல்முருகனிடம் உண்மையான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அதனை மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கலாம். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்” என்றார்.

இதனிடையே வேல்முருகன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்படும் என்று புதிய தலைமுறைக்கு சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, செல்வமுருகன் மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அதன் உண்மை கண்டறியும் குழு செல்வமுருகன் மரணம் தொடர்பாக கள ஆய்வு செய்தது. இது தொடர்பாக மதுரையில் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “கடலூர் வியாபாரி செல்வமுருகனை காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர், திட்டமிட்டே செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. செல்வமுருகனை காணவில்லை என மனைவி கொடுத்த புகாரை காவல்துறையினர் விசாரிக்கவில்லை. 

திருட்டு வழக்கு பதிவு செய்யாமல் இருக்க காவல்துறைக்கு 5 இலட்சம் தர வேண்டும் என சொல்லி உள்ளார்கள். செல்வமுருகனை நீதிமன்ற காவலில் அனுப்ப காரில் அழைத்து செல்ல செல்வமுருகனின் மகன் மன்மதனிடம் 5 ஆயிரம் ரூபாய் காவல்துறையினர் பெற்று உள்ளனர். தனியார் விடுதியில் வைத்து செல்வமுருகன் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். செல்வமுருகன் அழைத்து செல்லப்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அகற்றப்பட்டது. திருட்டு வழக்கு புகார் கொடுத்த பெண் மிரட்டப்பட்டு செல்வமுருகன் மீது புகார் வாங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.