சிறப்புக் களம்

நினைவிருக்கிறதா பொங்கல் வாழ்த்து அட்டைகளை? - இழந்துவிட்ட ஒரு அழகியல்!

நினைவிருக்கிறதா பொங்கல் வாழ்த்து அட்டைகளை? - இழந்துவிட்ட ஒரு அழகியல்!

PT WEB

தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல். போகி, சூரியன் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழ்நாடே திருவிழா கோலமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு, புது வண்ணம் பூசி விசேச வீடுகள் போல் காட்சியளிக்கும். சூரியனுக்கு நன்றி, கால்நடைகளுக்கு நன்றி என இயற்கையோடும், வாழ்வியலோடும் ஒன்றிப்போன பொங்கல், நாளுக்கு நாள் விடுமுறை தினமாக மாறி வருகிறதோ என்ற ஐயம் அவ்வப்போது வருவதும் உண்டு.

பொங்கல் என்றால் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்கும் நாட்கள் மட்டுமில்லை. அது நம் வாழ்வியலின் அங்கம். பிறக்கும் தை மாதத்தின் ஆரம்பம் முதலே நாமும் புத்துணர்ச்சியாய் மீண்டும் வாழ்வை தொடங்கும் ஒரு திருவிழாதான் பொங்கல். பொங்கல் பண்டிக்கை தொடங்குவதற்கு முதல் நாள் வாட்ஸ் அப் குரூப்பிற்கு சென்று Happy Pogal என்ற ஒரு புகைப்படத்தை போட்டுவிட்டு மீண்டும் தொலைக்காட்சிக்கு முன் சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் இன்றைய நாட்களில் ‘பொங்கல் வாழ்த்து அட்டை’ என்ற அற்புதமான வழக்கத்தை நாம் அனைவரும் இழந்துவிட்டோம் என்பதை மறுக்க முடியாது.

பொங்கல் தொடங்குவதற்கும் பல நாட்கள் முன்னதாகவே கடைகளின் வாசல்களில் வண்ண வண்ணமாய் காட்சி அளிக்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வெறும் அட்டைகள் அல்ல. அது அன்பின் உருவம். நடிகர்கள், நடிகைகள், கடவுள்கள், விளையாட்டு வீரர்கள், பொங்கல் கொண்டாட்ட வாழ்த்துகள் என அனைவரது பிரியத்துக்கும் ஏற்ப அட்டைகள் குவிந்து கிடக்கும்.

ஒற்றை அட்டையாய், இரட்டை அட்டைகளாக, திறந்தால் வாழ்த்து குரல் எழுப்பும் அட்டைகளாக தமிழகமெங்கும் பரவிக்கிடந்தது அந்த அன்பு. பிடித்த நண்பர்களுக்கு, பிடித்த உறவுகளுக்கு பொங்கலுக்கும் சில நாட்கள் முன்னதாகவே வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து கைப்பட வாழ்த்துகள் எழுதி, 'இப்படிக்கு அன்புடன்' என்று முடித்து ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் கொண்டு போடப்படும் அட்டைகளில் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும். பொங்கல் நேரத்தில் தபால்காரர்கள் சுமந்து சென்றது எல்லாம் உறவுகளின் பாசத்தைத்தான்.

ஒரே ஃபார்வேர்ட் வாழ்த்தை பலருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பும் இன்றைய வசதியில் அந்த அன்பும், பாசமும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. சில வளர்ச்சிகளினால் அழகான சில விஷயங்கள் மெல்ல மெல்ல மறைந்துவிடுவது வாடிக்கையாகி போய்விட்டாலும், இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி எடுக்க வேண்டும்.

நகர பகுதிகளிலும் கிராமத்து பொங்கல் என்று இன்று கொண்டாடப்படுகிறது, அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழும் உறியடி நடக்கத்தொடங்கி இருக்கிறது. சிலிண்டர் கேஸ் அடுப்புகளில் குக்கரில் பொங்கிய பொங்கல்கள் இன்று பானைகளை தேடி வருகின்றன.

இந்த வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளையும் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். உறவினர்களை தேடி, நண்பர்களை தேடி வாழ்த்து அட்டை என்னும் அன்பு பெட்டகம் பயணப்பட வேண்டும். 'இப்படிக்கு அன்புடன்' என்று முடியும் வாழ்த்துகளில் நினைவுகள் நிறைந்த பொங்கல் விழா தொடங்க வேண்டும்.