சிறப்புக் களம்

பேஸ்புக்கில் புத்தாண்டு "ஆப்ஸ்" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம் !

பேஸ்புக்கில் புத்தாண்டு "ஆப்ஸ்" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம் !

webteam

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.  

இந்த பேஸ்புக் திருட்டை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது இதை திருட்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக ‘பேஸ்புக்’  நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நெருக்கடிகளை சந்தித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையில் ஆஜராகி நேரில் விளக்கமும் அளித்தார். 

இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாகவே இருந்தது. என்றுமே புகழ்ச்சியையே கேட்டுக்கொண்டு இருந்த மார்க், இந்த விவகாரத்துக்கு பிறகு அதிக கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார். மெல்ல மெல்ல இந்த திருட்டு விவகாரம் மறைந்து வர பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதுவெல்லாம் வதந்தி என எதிர்பார்த்த நிலையில், ஆமாம் உண்மைதான். லீக் ஆன புகைப்படங்களை அழிக்க முயற்சிகள் செய்கிறோம் என கூலாக பதிலளித்து வழக்கம் போல் மன்னிப்பு கோரியது பேஸ்புக்.

எப்படி புகைப்படங்கள் லீக் ஆனது என்று கேள்விக்கு பேஸ்புக் கைகாட்டியது மூன்றாம் தர செயலிகளைத்தான். அது என்ன மூன்றாம் தர செயலிகள்? நீங்கள் பேஸ்புக் பக்கத்தை ஸ்குரோல் செய்து கொண்ட போகும் பொழுது, ''2019ல் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கும். அறிய இங்கே க்ளிக் செய்யவும்'' என்று வருமே கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் ஆணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள்? பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள்? ராமாயணத்தில் நீங்கள் யார்? அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும்? இப்படி எவ்வளவோ ஆர்வமான கேள்விகளுடன் நம்மை கிளிக் செய்ய வைப்பார்கள். அது உள்ளே சென்று 100 சதவீதம் ஓடி நின்று உங்களுக்கு ஒரு ரிசல்ட்டை காட்டும். அதை ஆர்வமாக நீங்கள் ஷேர் செய்வீர்கள். உங்களைப்பார்த்து உங்கள் நண்பர் முயற்சி செய்வார். இது தான் அந்த மூன்றாம் தர செயலியின் வேலை. 

இந்த செயலிகளை பொழுதுபோக்கு என்ற கோட்பாட்டில் தான் பேஸ்புக் அனுமதி அளித்துள்ளது. இதனை கண்காணிக்க API முறை என்ற டூலை பேஸ்புக் பயன்படுத்தும். இப்போது பேஸ்புக் என்ன கூறியது என்றால், எங்களது API முறையில் சிறு குறை இருந்தது. அதன் மூலமே புகைப்படங்கள் வெளியாகிவிட்டது என்று தெரிவித்தது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் சமூக வலைதளங்களின் தகவல்கள் தான் ஒட்டு மொத்த முடிவையே மாற்றியது என்றும் இன்றும் அங்கு கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் தேர்தல்கள் எதிர் வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது. நாம் பொழுதுபோக்காக பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் நம் நாட்டின் தலையெழுத்தையே நம்மை மீறி மாற்றும் என்றால் அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். நாம் சாதாரணமாய் க்ளிக் செய்யும் ஒரு ஜாலி மொமண்ட் யாரோ ஒருவருக்கு மிகப்பெரிய தகவலை கொடுக்கிறது என்றாலும் அது அத்தனை மிகையானது அல்ல. 

நாங்கள் புகைப்படம் கசியும் ஓட்டைகளை அடைத்துவிட்டோம் என்று பேஸ்புக் தெரிவித்திருந்தாலும் நாளை ஒரு பிரச்னை என்றதும் ஆமாம். என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கோரிவிடும் பேஸ்புக். அதனால் நமது அக்கவுண்டை நாம் தான் கவனமாக பயன்படுத்த வேண்டும். நாம் அனுமதிக்காத வரை எதுவும் வெளியே போகாது என்பது உண்மை. ஆனால் உங்களை அனுமதிக்க வைக்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட் உலகம் இருக்கிறது. ஜாக்கிரதை!