சிறப்புக் களம்

”தெரிஞ்சவங்க உதவலன்னா என் நிலைமையை நினைச்சி பார்க்க முடில”:ஆட்டோ தொழிலாளியின் பரிதாப நிலை

webteam

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது. அப்படியே தேவைக்காக வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; மாஸ்க் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் தான். வாகனங்களில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். தியேட்டர், மால், பெரிய கடைகள் உள்ளிட்டவைகளை திறக்கக்கூடாது. பேருந்து, ரயில், விமானப்போக்குவரத்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் உண்டு. கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றுபவர்களுக்கும் சம்பளம் உண்டு.

ஆனால் ஆட்டோ, கால் டாக்ஸி, கேப் போன்றவை ஓடக்கூடாது. ஏழைக் கூலித்தொழிலாளிகளுக்கு, அரசு சார்பில் 1000 ரூபாய் வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதை வைத்து அவர்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

பெரிய அளவில் வேலைப்பார்ப்பவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே தெரிகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அன்றாட கூலித் தொழிலாளிகளே. இன்று வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலை இன்னமும் பல குடும்பங்களில் அணையாத ஜோதியாய் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பல தொழில்கள் முடங்கினாலும் வாழ்வாதாரத்தை இழந்தாலும், கொரொனாவால் கொத்து கொத்தாய் இழக்கும் உயிர்களை பார்த்து பரிதாபப்பட்டு, ஊரடங்கு இருப்பது அவசியம்தான் என முதலில் குரல் கொடுத்ததும் இதே ஏழைக் கூலித் தொழிலாளிகள்தான் என்றால் அது மிகையல்ல.

இந்த ஏழைக் கூலித்தொழிலாளிகளுக்கு அரசு எதுவுமே செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. அரசு செய்வது போதவில்லை என்றுதான் கூறி வருகின்றனர். அதற்கு அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பவர்கள் ஏராளம். அந்த வகையில் முடங்கியுள்ள பல தொழில்களில் ஆட்டோ தொழிலும் ஒன்று. அரசு தரும் உதவித்தொகையை வைத்து ஊரடங்கு காலத்தை ஒரு கூலித் தொழிலாளியால் ஓட்டிவிட முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இல்லை.

சரி, ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்து அவர்களின் நிலை என்ன என்பதை கேட்டறிவோம் என்று, குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள ஆட்டோ ஓட்டுநரான நந்தக்குமாரை சந்தித்தோம். வழக்கம்போல அவரின் நிலையை மிகவும் சலிப்புடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“நான் பல வருஷமா ஆட்டோ ஓட்டுறேன். வாடகை ஆட்டோதான். என் வாழ்க்கையும் வறுமை இல்லாமல் தேவைக்கு அனைத்தும் கிடைத்துக்கொண்டுதான் இருந்தது, இந்த ஊரடங்கை சந்திக்கும்வரை. ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டேன். அரசு சார்பில் 1000 ரூபாயும் ரேஷன் பொருட்களும் கொடுத்தார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது 10 நாட்களுக்கு கூட போதவில்லை. என் மனைவி வீட்டில்தான் இருக்கிறார். நான் ஆட்டோ ஓட்டி கொண்டு வரும் ஒரு சம்பளம் மட்டும்தான். தற்போது அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.

இதுவரை வேறு தொழிலுக்கும் போனதில்லை. வேறு தொழிலும் தெரியாது. ஆனால் இனி ஏதாவது ஒரு தொழிலுக்கு கூப்பிட மாட்டார்களா என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். கட்டடத்தொழிலுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதில் வேலைக்கு கூப்பிட்டால் செல்வேன். எனக்கு அந்த வேலை தெரியாது. ஆனால் கற்றுக் கொள்வேன். வேறு வழியில்லை. ஆட்டோ வாடகை நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கொடுக்க வேண்டும். தற்போது ஓட்டம் இல்லாததால் ஓனரிடமே ஆட்டோவை ஒப்படைத்து விட்டேன். கடன் வாங்கிதான் பிழைப்பை நடத்தி வருகிறேன். அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதுதான் கட்டடத்தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 1000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதே என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “சரிதான். ஆனால் அந்த பணத்தை பெற முதலில் விண்ணப்பிக்க வேண்டுமாம். ஒரிஜினல் ஆர்.சி. புக் சமர்ப்பிக்க வேண்டுமாம். ஓனரிடம் ஆர்.சி. புக் கேட்டால் டியுவுக்கு அதைதான் அடமானம் வைத்துள்ளாராம். என்னைப்போன்ற வாடகை ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு அந்த 1000 ரூபாய் பணம் ‘எட்டாக்கனி’ என்று நினைத்து கொண்டு திரும்பி வந்துவிட்டேன் சார்” எனக்கூறி வருத்தப்பட்டார் நந்தக்குமார்.

மேலும் பேச்சைத் தொடர்ந்த அவர், “இது ஒரு புறமிருக்க, வாடகை வீடு வேற. மாதமானால் வாடகை கொடுக்க வேண்டும். மாதம் 3000 கொடுக்க வேண்டும். கடந்த மாதம் கொடுக்கவில்லை. ஆட்டோ ஓட ஆரம்பித்ததும் சேர்த்து கொடுத்து விடுகிறேன் என்று ஓனரிடம் சொன்னேன். அதெல்லாம் முடியாது. இந்த மாதம் கண்டிப்பாக கொடுக்குற வழிய பாருங்கள் என்று வீட்டு ஓனர் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்” என்று வருந்தினார்.

அதுதான் அரசு கூலித்தொழிலாளிகளிடம் வீட்டு ஓனர்கள் வாடகை கேட்கக்கூடாது என்று உத்தவிட்டுள்ளதே என்ற கேள்விக்கு, அதெல்லாம் சொல்ல முடியாது சார். முடிந்தால் இரு இல்லையென்றால் வீட்டை காலி பண்ணு என்று சொல்கிறார்கள் என்று பதிலளித்தார். ஊர் பக்கம் போகலாம்னு பார்த்தா அதற்கும் வழியில்லை. அங்க இங்க கடன வாங்கி தெரிஞ்சவ உதவி செய்றதுனால் பொழப்பு ஓடுது. தெரிஞ்சவங்க உதவலன்னா என் நிலைமைய நினைச்சி பார்க்க முடில. அரசுதான் மேற்கொண்டு ஏதாவது உதவி செஞ்சா பரவாயில்ல என்று கூறி தனது பேச்சை முடித்தார் நந்தக்குமார்.