சிறப்புக் களம்

வருங்காலத்திலும் இல்லை; மக்கள் மன்றமும் கலைப்பு: ரஜினியின் திட்டவட்டத்திற்கு காரணம் என்ன?

வருங்காலத்திலும் இல்லை; மக்கள் மன்றமும் கலைப்பு: ரஜினியின் திட்டவட்டத்திற்கு காரணம் என்ன?

webteam

தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். சமீபத்தில், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9-ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றம் இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும். மக்கள் நலப்பணிகளுக்காக முன்புபோல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. சார்பு அணிகள் ஏதுமின்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும். வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த முடிவை ஏற்பதாக ரஜினி மன்ற நிர்வாகிகளும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “இன்று தெளிவான முடிவை அறிவித்துள்ளார். அரசிலுக்கு வரும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ரஜினி பதவி ஆசை இல்லாதவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். பாஜகவில் பதவி வர வாய்ப்பு உள்ளது என சொல்லும்போது கூட அதில் ஆர்வம் இல்லை என்றே ரஜினி சொன்னார். அதனால் அவர் முடிவை தெளிவாக சொல்லியுள்ளார்.” என்றார்.

திரைப்பட இயக்குநர் பிரவின் காந்தி கூறுகையில், “ரஜினிகாந்த் அறிவிக்கும் முன்பே ரசிகர்கள் அனைவரும் தயாராகிவிட்டனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர்களுக்கு தெரிந்து விட்டது. இதில் எந்த அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு இல்லை. அவர் வரமாட்டேன் என சொல்லும்போது அனைவரும் அதிர்ச்சியடைந்தது உண்மைதான். தற்போது அவர் அறிவித்திருப்பதன் மூலம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இன்னொரு கொண்டாட்டத்தை ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் மாலன் கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினார். ஆனால் அவரின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அதனால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார். தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை சிலர் தவறாக பயன்படுத்தலாம் என்பதால் அதை கலைத்துள்ளார். அரசியலுக்கு வரப்போவதில்லை என முடிவு செய்த பிறகு அதற்காக ஆரம்பித்த மன்றமும் தேவையில்லைதானே. அதனால்தான் கலைத்துள்ளார்” என்றார்.