தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. காரணம், 'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவதில் தாமதமாகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று வந்தேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? தொடர்ந்தால் என்ன பணிகள்? நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போறேனா? இல்லையா? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் அரசியலுக்கு ரஜினி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, “ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் ஒரு அணிக்கு ஆதரவாக இருப்பார். மோடிக்குகூட நெருக்கமாக இருப்பவர். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என செய்திகள் வெளியாகின.
ஆனால் ரஜினி யாருடைய அணியிலும் சேரமாட்டார். நடுநிலையாக இருப்பார். ஸ்டாலினுக்கும் நெருங்கிய நண்பர். அனைத்து கட்சியிலும் அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் ஏற்கெனவே கூறினேன். அதுதான் நடந்தது. தற்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய தேவையே இல்லை. அவருக்கு அரசியலுக்கு ஆர்வம் இல்லை. அவர் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று எண்ணியதால் அவருக்கு ஆதரவாக பேசினேன். தங்கள் துறையில் தன்னை வளர்த்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு மன்றம் தேவை. அதனடிப்படையில் ரஜினிகாந்த தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கும் படத்திற்கும் உத்வேகமாக அமையும் விதத்தில் மக்கள் மன்றத்தை புதுப்பிக்க விரும்பலாம். அரசியல் ரீதியாக ரஜினிகாந்துக்கு ஆர்வம் இல்லை என்றே கருதுகிறேன்” என்றார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறுகையில், “ஏற்கெனவே வருவேன் என்று சொன்னார். அப்புறம் வருவது உறுதி என சொன்னார். பிறகு வரப்போவதில்லை எனத் அறிவித்தார். எப்போது அறிவித்தாரோ அப்போதே அவருக்கான முக்கியத்துவம் போய்விட்டது. இனி அவர் வந்தாலுமே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். வரவேண்டிய தருணம் இந்த தேர்தல் தான். இனிமேல் 2024 மக்களவை தேர்தல்தான் தாக்கத்தை உண்டு பண்ண வாய்ப்பிருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது யோசிக்கிறேன் என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
வரமாட்டேன் என்பதற்கு இரண்டு காரணங்கள் சொன்னார். ஒன்று உடல்நிலை.இரண்டாவது கொரோனா. இப்போதும் அவர் உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது. இப்போது மட்டும் அவர் எப்படி வருவார். முன்னர் சொன்ன காரணத்திலிருந்து அவரே முரண்படுகிறார். இதன்மூலம் ரஜினி மீதான நம்பகத்தன்மை குறைகிறது” என்றார்.