சிறப்புக் களம்

‘உச்சநீதிமன்ற தீர்ப்பு தேவையில்லை’ - 'அப்பாவு'க்கு வெற்றியை தூக்கி தந்த ராதாபுரம் மக்கள்

‘உச்சநீதிமன்ற தீர்ப்பு தேவையில்லை’ - 'அப்பாவு'க்கு வெற்றியை தூக்கி தந்த ராதாபுரம் மக்கள்

webteam

5 வருடத்திற்கு மேலாக முடிவுக்கு வராத சட்டப் போராட்டம்... நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் ஓயாமல் அலைந்து அலைந்து பொறுமையுடன் அங்கீகரத்திற்காக காத்திருந்த காலகட்டம். வெற்றியா தோல்வியா என்பதை இறுதி செய்ய முடியாமலேயே 5 வருட காலத்தை கடந்தவர்தான் ராதாபுரம் திமுக தொகுதி வேட்பாளர் அப்பாவு.

ஆம்... கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையை எதிர்த்து போட்டியிட்டார். அத்தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தபால் வாக்குகளை எண்ணாமலேயே முடிவு அறிவிக்கப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்தார் அப்பாவு. அவரது எதிர்ப்பு கண்டு கொள்ளப்படவில்லை.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு. இதை எதிர்த்து இன்பதுரை உச்சநீதிமன்றம் சென்றார். வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் அந்தத் தடையை நீக்கி தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது.

ஆனால் முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை தீர்ப்பு வரவே இல்லை.

இவ்வாறு 5 வருடங்களுக்கு மேலாகவும் இந்த வழக்கில் அப்பாவுக்கு முடிவு எட்டப்படவே இல்லை. இதனால் அவர் எவ்வளவோ மன துயரங்களை அடைந்து வருவதாகவும் வெற்றியோ தோல்வியோ முடிவுகள் வெளியாக வேண்டும் எனவும் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்தான், அதற்கு வர பிரசாதமாக ராதாபுரம் தொகுதி அப்பாவுக்கு வெற்றியை தூக்கி தந்திருக்கிறது. புதிய சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவுவே களம் இறக்கப்பட்டார். அதிமுக சார்பில் இன்பதுரையே களம் கண்டார். ஆனால் இந்த முறை முடிவு அப்பாவுக்கே சாதமாக அமைந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு இணங்க அப்பாவு, 82,331 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இன்பதுரை 76,406 வாக்குகள் மட்டுமே பெற்றார். எனவே 5925 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றார்.

5 வருடங்களாக நீதிமன்றத்தால் தர முடியாத தீர்ப்பை ராதாபுரம் மக்கள் அப்பாவுக்கு அளித்து நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளனர்.