சிறப்புக் களம்

சூரரைப் போற்று: '1997 சென்னை சம்பவம்' - விமானப்படை ஓடுதளத்தில் சவுதி விமானம்..?

சூரரைப் போற்று: '1997 சென்னை சம்பவம்' - விமானப்படை ஓடுதளத்தில் சவுதி விமானம்..?

PT

'சூரரைப் போற்று' படம் வெளியானதில் இருந்து கலவையாக நேர்மறை - எதிர்மறை விமர்சனங்களைக் காண முடிகிறது. 'வர்க்க ரீதியான பிரச்னைகளை கவனத்தில் கொள்ளவில்லை', 'படத்தின் முற்போக்கு வசனங்களின் வாயிலாக மேல்தட்டு வர்க்கத்தின் சார்பு நிலையை மாற்றிவிட முடியாது' போன்ற விமர்சனங்கள் முக்கியமானதாக தோன்றுகிறது. ஆனால், படத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், இயங்கும் தளம் சார்ந்த கள வேலைகளையும் நிறைய செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.

எடுத்துக்காட்டாக, படத்தின் முதற்காட்சியில் விமான ஓட்டி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தில் விமானத்தை இறக்க முயற்சிக்கும்போது, விமானப்படை வீரர் ஒருவர் சிவப்பு நிற ஒளி உமிழும் பட்டொளி துப்பாக்கியால் மேலே சுட்டு எச்சரிக்கை விடுவார். உண்மையில், இந்த நடைமுறை இந்திய விமானப் படையில் உண்டு.

எந்த ஒரு விமானமும் அனுமதி இல்லாமல், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை மீறியும் தரையிறங்க முயற்சிக்கும்போது, சிவப்பு நிற பட்டொளி துப்பாக்கி கொண்டு நான்கு முறை சுடுவர். அதைக் கண்ட விமானி, அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அங்கு தரையிறங்க கூடாது. துறை சார்ந்து இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியதாக உள்ளது.

மேலும் ஒரு நிகழ்வாக, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், விமான ஓட்டியான சைத்தன்யாவை (கிருஷ்ணகுமார்) பார்த்து, 'சவுதியா விமானம் இங்க தரையிறங்கியபோது என்ன செய்தோம்?' என்று கேட்பார். அதற்கு பதிலாக, அந்த விமானம் தீவிரவாத தொடர்பு கொண்டிருந்ததா என தீர விசாரித்து, அபராதம் வசூலித்ததாக சொல்வார்.

இந்த நிகழ்வு உண்மையில் நடந்த சம்பவம்தான். இந்த மாதிரியான நிகழ்வுகள் நிறைய நிகழ்ந்துள்ளன. எனினும், இது பெரிதாகக் கவனிக்கப்பட்ட நிகழ்வாகிப்போனது. ஜூன் 2, 1997-ல் சவுதி அரேபியாவிலிருந்து 'போயிங் 747' வகை விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி கேட்டு வந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ரேடார் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. அதனால், விமானக் கட்டுப்பாட்டு அறை விமானத்தை சற்று காலம் தாழ்த்தி நீள் வட்டத்தில் சுற்றி வந்து பல்லாவரத்திலிருந்து தாம்பரம் மார்கமாக இறங்க அனுமதி அளித்தது.

விமான ஓட்டி, அந்தக் கட்டளைக்கு பணிந்து அவ்வாறே முயற்சித்துள்ளார். நேவிகேஷன் பழுதாகிப்போனதன் காரணமாக பார்வையை மட்டுமே நம்பி விமானத்தை தரையிறக்கும் நிலைக்கு விமான ஓட்டி தள்ளப்பட்டிருந்தார். அப்போது ஒரு ஓடுதளம் கண்ணுக்கு தெரியவும் விமானத்தை இறக்க ஆயத்தமானார்.

விமானத்தை தரையிறக்குவதற்கான முன்செயல்பாடுகளை முடித்தவுடன் தோராயமாக 350 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
ஓடுதளத்தில் விமானம் ஓடிக்கொண்டிருக்கும்போதுதான் விமானம் தவறான ஓடுபாதையில் இறங்கியுள்ளதை விமான ஓட்டி உணர்கிறார். காரணம், போயிங் ரக விமானம் அளவில் பெரிது. ஆகையால், அதற்கு நீளமான ஓடுதளமும் தேவை. விமான ஓட்டி இறக்கியிருப்பதோ 4,700 அடி நீளமுள்ள ஓடுபாதை. 'போயிங் 747' ரக விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 8,000 அடி தேவைப்படுமாம்.

இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் விபத்தில்தான் முடியும் என்பதை உணர்ந்த விமான ஓட்டி, தடுப்புக்கருவியை நெருக்கி, உருளிப்பட்டையை வெடிக்கவைத்து விமானத்தை நிறுத்தியுள்ளார். முன்பு சொல்லியிருந்ததுபோல் விமானப்படை அதிகாரிகள் இந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கவில்லை. அதனால், பட்டொளி துப்பாக்கியை கொண்டு சுட்டு அனுமதி மறுத்துள்ளனர்.  விடியற்காலை நேரம் என்பதால் விமான ஓட்டி கவனிக்கவில்லைபோலும். ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை அல்லவா இது?!

எனவே, விமானப்படை தளம் ஒரு போருக்கான தயார் நிலையை மிக துரிதமாக அமைத்தது. உடனடியாக விமானம் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டு, தீர விசாரிக்கப்பட்டது. இந்திய விமான அமைச்சகம் தலையிட்டு பிரச்னையை கையாண்டு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் விமான பயணிகளை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே பேருந்தில் அழைத்து வந்து குடியுரிமை பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், விமானம் இன்னும் அங்குதான் இருக்கிறது. இனிதான் பெரும் பிரச்னை காத்திருக்கின்றது. விமானத்தின் எடையின் காரணமாக அச்சிறிய விமான ஓடுதளத்தில் அதை கிளப்ப இயலாதல்லவா?

இந்தச் சவாலான காரியத்தை செய்ய உலகம் முழுதும் விமான ஓட்டிகள் தேடப்பட்டனர். இருப்பினும் சவுதி அரேபியாவின் 'போயிங்' விமான பயிற்சி பெற்ற விமானியான ஜோம் ஜாம்பர் என்பவர் விமானத்தை கிளப்ப ஆயத்தமானார்.

விமானத்தை கிளப்புவது சாதாரண காரியமாக தோன்றவில்லை. ஆகையால், விமானத்தின் உட்கட்டமைப்புகளையும், குளிரூட்டும் அமைப்புகளை அகற்றிவிட்டு, மிகவும் குறைவான எரிபொருளை மட்டுமே வைத்து விமானத்தை கிளப்ப முடிவெடுத்தனர். காற்று சாதகமான சூழல் நிலவாத நிலையில் மூன்றரை மணி நேர காத்திருப்பிற்கு பின் விமானத்தை 3690 அடி ஓட்டி மேலே தூக்கி சாதனையை நிகழ்த்தினார். பிறகு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசர தரையிறக்கத்துக்கு அபராதமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பன்னிரெண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அமைந்துள்ள இரு விமான ஓடுபாதைகளும் விமான ஓட்டிகளுக்கு பெரும் சவாலாய் இருந்து வந்துள்ளது. விமானக்கட்டுப்பாட்டு மையம் புதிய கருவிகளை நிறுவி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க பெரும் முயற்சி எடுத்து வந்துள்ளனர். இந்த மாதிரியான நிஜ தகவல்களை திரட்டி, தேர்ந்த காட்சிகளை அமைத்தற்கு 'சூரரைப் போற்று' படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

காலக்கோட்டில் தவறு இருந்தாலும், விமான கண்காட்சி நடைபெற்ற இடம் மற்றும் விமானத் தளங்களான பேகம்பேட், ஹக்கிம் பேட் போன்ற இடங்களில் காட்சிகளை அமைத்துள்ளதும் கவனத்துக்குரியது.

கட்டுரையாளர்: ஜெகதீசன்