சிறப்புக் களம்

சென்னை to நாகை Via புதுச்சேரி... விரைவில் தயாராகிறது கப்பல் - படகு சவாரி!

சென்னை to நாகை Via புதுச்சேரி... விரைவில் தயாராகிறது கப்பல் - படகு சவாரி!

நிவேதா ஜெகராஜா

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலையை வழியே பயணித்திருப்போம். இனி படகு மூலம் வங்காள விரிகுடா வழியே பயணிக்கலாம். ஆம், விரைவில் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை படகு சவாரியை தொடங்க மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலம் என்பதால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்தை கடற்கரை நகரங்களுக்கு இடையே தொடங்கும் முயற்சியில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே கப்பல், படகு போக்குவரத்து 5 மாதங்களில் தொடங்கப்படுவதற்கான பணிகளில் சென்னை துறைமுக அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரோ-ரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் மற்றும் படகு இயக்குவது குறித்து, முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதற்காக தற்போது புதுச்சேரியிலும் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது.

கடலுார் துறைமுகத்திலும் 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராகிவிடும். இதில், 120 மீட்டர் நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம்.

அதேபோல, காரைக்கால் துறைமுகத்தில் 130 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்தும் தளம் உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களை ஏற்றி செல்லும் வகையிலும் வசதிகள் அமைய உள்ளன. ஒரு படகில் 20 முதல் 30 பேர் வரை அமரக்கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடல்வழி போக்குவரத்து பயணம் ஐந்து மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக என துறைமுக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், மேலும் பல படகுகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த வருடத்தில் சென்னையிலிருந்து கொழும்புவிற்கு கடல் போக்குவரத்து பயணம் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- பால வெற்றிவேல்