சிறப்புக் களம்

மக்களுக்கும், அரசுக்கும் சுஜித் சொல்லிச் சென்ற பாடம் என்ன?: ஒரு பேஸ்புக் பதிவு!

மக்களுக்கும், அரசுக்கும் சுஜித் சொல்லிச் சென்ற பாடம் என்ன?: ஒரு பேஸ்புக் பதிவு!

webteam

80 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வியடைந்த நிலையில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சுஜித் மக்களுக்கும், அரசுக்கும் சொல்லிச்சென்ற பாடம் என்ன? ஒரு பேஸ்புக் பதிவு!

’’குழந்தைகள் பயமறியாது என்பார்கள். உண்மையில் குழந்தைகளுக்கு கருத்து தெரியாது. ஏனென்றால் அது குழந்தைகள். நெருப்பு என்றால் சுடும். தண்ணீர் என்றால் மூழ்குவோம். சாலை என்றால் வாகனம் வரும். குழி என்றால் விழுந்து விடுவோம். எதுவுமே தெரியாது. குழந்தைகள் நல்லது கெட்டது அறியும் வரை அதை முழுவதும் கண்ணுக்குள் வைத்திருக்க வேண்டியது, பெற்றவர்களை தவிர வேறு யாருமே இல்லை. திருவிழாவில் ஒரு குழந்தை காணவில்லை என்று ஏதோ ஓர் அம்மா அழுது துடித்தால் நம் கையில் இருக்கும் குழந்தையை ஒரு முறை இறுகப்பிடிப்போமே. அப்படிப்பட்ட ஜாக்கிரதை ஏன் எப்போதும் பலருக்கு இருப்பதில்லை?

இன்றும் சென்னை சாலைகளில் கையில் செல்போனை நோண்டிக்கொண்டு வலதுபுறம் குழந்தையை நடக்க வைத்துக்கொண்டு குழந்தையின் கையைக் கூட பிடிக்காமல் நடந்து போகும் அம்மாக்களை பார்க்கிறேன். பாசம் இல்லாமல் இல்லை. அதுதான் அலட்சியம். குழந்தை ஓரத்திலேயே நடந்து வரும் என்ற நம்பிக்கை. பெரிய மனிதர்களின் அறிவை குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது. சுஜித்தின் இறப்பு நமக்கெல்லாம் படிப்பினை. இந்த அரசுக்கும் படிப்பினை.

ஆழ்துளை கிணறு இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. கிணறு இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலை ஓர வீடு என்றால் குழந்தை ஓடி விடாமல் இருக்க தடுப்பு அமைக்க வேண்டும். சிலிண்டரை திறந்து விடும் அளவுக்கு உயரத்தில் வைக்கக் கூடாது. சின்ன அலமாரியை இழுத்து தன் மேலேயே குழந்தை போட்டுக்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. கையில் சில்லரை காசுகளை கொடுத்து விளையாட சொல்லக்கூடாது. மின் சாதனங்களில் கவனம்.

முதல் மாடி வீடு என்றால் மாடிப்படிக்கு அருகில் தற்காலிகத் தடுப்பு வேண்டும் இப்படி இது நீண்டு கொண்டே போகிறது. எங்கேயோ கிராமத்தில் தான் குழந்தைக்கு விபத்து என்றெல்லாம் இல்லை. குழந்தையைச் சுற்றி இருப்பதெல்லாம் ஆபத்து தான். முழுக்கவனம் கொள்ள வேண்டியது பெற்றவர்கள். சுற்றி இருக்கும் பெரியவர்கள். இங்கு யார் மீது வேண்டுமானாலும் தவறு இருக்கலாம். ஆனால் பாதிப்பு நமக்கு தானே என்று உணர வேண்டும். கவனக்குறைவு காரணமாக குழந்தை ஒன்று விபத்தில் சிக்குகிறது என்றால், உயிரிழக்கிறது என்றால் அது விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்ல. பெற்றோர் செய்த கொலை. நாம் செய்த கொலை.

சுஜித் விவகாரத்தில் அரசு முழு மூச்சாகச் செயல்பட்டது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இந்த நேரத்தில் அரசு தங்களின் பலத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு நூறு அடி விவகாரம் தங்களை எப்படி அலைக்கழித்தது என்பதை உணர வேண்டும். எவ்வளவு சவாலாக இருந்தது என்பதை உணர வேண்டும். தங்களிடம் உள்ள குறை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்றால் அதனை அணைக்க அரசிடம் நவீனமாய் என்ன இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். கடலில் கொட்டிய எண்ணெயை வாளியில் அள்ளிய நாம் அதற்கு பின் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு காட்டுத்தீ, இயற்கை சீற்றம், கட்டட விபத்து என எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன. இதற்கெல்லாம் 2020 இல் இருக்கும் நாம் புதியதாய் என்ன வைத்திருக்கிறோம் என்பதை அரசு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். இயற்கைக்கு எதிராக நாமும் அரசும் தயாராகவே இருக்க வேண்டும். டெங்கு உயிரிழப்புகள், சாக்கடை குழிக்குள் உயிரிழப்பு என தொடரும் உயிரிழப்புகளையும் அரசு கருத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைப்பது, பராமரிப்பது போன்ற எந்த வித செயல்பாடுகளிலும் மக்கள் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். அரசும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகு பள்ளிகள் கட்டடம் ஆகின. இப்படி உயிரிழப்புக்கு பின்னர் திருத்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால் எப்படியெல்லாம் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்பதை பகுத்தறிய நம்மால் முடியாமல் இல்லை. அவற்றை முன்னரே பகுத்தறிந்து தடுத்துக்கொள்ள வேண்டும். கவனக்குறைவால் ஏற்படும் விபத்தால் இனி ஓர் உயிர் பலியாக நாம் அனுமதிக்கக்கூடாது.’’