சிறப்புக் களம்

தூக்கமின்மைப் பிரச்னை - சித்த மருத்துவர் சொல்லும் தீர்வு என்ன?

தூக்கமின்மைப் பிரச்னை - சித்த மருத்துவர் சொல்லும் தீர்வு என்ன?

webteam

மனித உடலுக்கு உணவும், காற்றும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் தூக்கமும். ஆனால் இன்றைய காலங்களில் தூக்கம் என்பது மனித உடலின் அடிப்படைத்தேவை என்பதையே மக்கள் மறந்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று இளைஞர்களிடையே நிலவும் மன சார்ந்தப் பிரச்னைகள். நாட்கணக்கில் இரவு நேரத் தூக்கத்தை தவிர்த்து வரும் மக்கள் ஒரு கட்டத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் தூங்கமுடிவதில்லை. ஊரடங்கில் இந்தப் பிரச்னைகள் தனது அடுத்தக்கட்டப் பாய்ச்சலை நோக்கிச் சென்றிருக்கிறது.  

ஒருவருக்கு தூக்கமானது கெடும்போது, மீதமுள்ள அனைத்துப் பிரச்னைகளும் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் அபாயாம் அதிகம் என்பதால் தூக்கமின்மை குறித்த தெளிவான விளக்கத்தை தெரிந்து கொள்ள சித்த மருத்துவர் மது கார்த்தீஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு:

தூக்கமின்மைப் பிரச்னை குறித்து பேசும் முன், தூக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்து விடலாம். சித்த மருத்துவமுறைப் படி பார்த்தோம் என்றால் தூக்கமானது கனவும் நனவும் இன்றி இருக்க வேண்டும். அதாவது மனதளவில் எந்தச் சஞ்சலமும் இன்றி இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அதனை நாம் நல்லத் தூக்கம் என்று அழைப்போம்.

தூக்கமின்மை பிரச்னைகள் வெவ்வேறு வடிவத்தை கொண்டுள்ளது. அவையாவன:

1. சரியான நேரத்திற்கு தூக்கம் வராமை.

2. சிறிய சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவது. அதன் பின்னர் தூக்கமின்றி அவதிப்படுவது.

3. கழிவுகளை வெளியேற்ற வரும் நபர்கள், அதன் பின்னர் தூக்கமின்றி அவதிப்படுவது.

4. கனவுகள் மூலமாக தூக்கமின்றி அவதிப்படுவது.


சித்த மருத்துவத்தில் இந்தப் பிரச்னையை வாதச் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பார்க்கிறோம். உடல் இயக்கத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, வாத சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும்.

சரி முதலில் இந்தப் பிரச்னையை உணவின் மூலமாக அணுகும் முறையை விளக்குகிறேன்.

1. தூக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள், தங்களது உணவை நான்கு அல்லது ஐந்து வேளையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. அவர்கள் உண்ணும் உணவானது அதிக குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ இருத்தல் கூடாது. மிதமான பதத்தில் இருக்க வேண்டும்.

3. இனிப்பு, புளிப்பு சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. துவர்ப்பு, காரம், கசப்புச் சுவைகளை குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

6. இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர், இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

கை வைத்திய முறைகள்:

1. உணவிற்குப் பின் சிறிதளவு ஜாதிக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

2. ஜாதிக்காய்ப் பொடியை தேனில் குழைத்தும் சாப்பிடலாம்.

3. கசகசாவையும், பாதாமையும் ( 4 அல்லது 5) நீரில் ஊற வைத்து இரவு உணவுக்குப்பின் சாப்பிடலாம். பாதாமை உபயோகப்படுத்தும் போது, அதன் தோலை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். இதனை பொடி போல் அரைத்தும் பயன்படுத்தலாம்.

4. அசைவ உணவுகளைப் உண்ணும் போதும், கசகசாவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

முன்னதாக ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்படும் நபர்களாக இருப்பின் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

1. மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா பொடியை இரவு உணவுக்குப் பின்னர் கால் டீஸ் பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

2. நீரேற்றப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - வசம்புபொடியை ( கால் டீஸ் பூன்) தேனுடன் கலந்து குடிக்கலாம்.

3. மூட்டு, கை,கால் வலிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் - நல்லெண்ணெய் மற்றும் கற்பூரத்தை சூடுபடுத்தி, உடலின் இணைப்புகளில் தேய்த்து கொள்ளலாம் .

4. உடல் அரிப்பு பிரச்னைகள் கொண்டவர்கள் - அருகம்புல் தைலத்தை தேய்த்துக் கொள்ளலாம்.

இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், மொபைல் போன் உபயோகப்படுத்துவதை தவிர்த்து விட்டு புத்தகவாசிப்பு, இசைக் கேட்டல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம்.