சிறப்புக் களம்

சும்மா இர்ரா.. 'தலைவரே' - ரசிக்க வைக்கும் வில்லத்தனத்தின் சொந்தக்காரர் எஸ்.ஜே.சூர்யா!

சும்மா இர்ரா.. 'தலைவரே' - ரசிக்க வைக்கும் வில்லத்தனத்தின் சொந்தக்காரர் எஸ்.ஜே.சூர்யா!

கலிலுல்லா

பெருங்கூட்டம் ஒன்று ஓலமிட்டுக்கொண்டிருக்கும். மக்கள் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருப்பார்கள். ஒரு கொலை நிகழ்ந்து முடிந்ததன் எதிரொலியாக எழுந்த பெரும் ஓலத்தின் நடுவே, நெற்றியில் வழியும் முடி; வழித்து மழித்த மீசையுடன், கிராஃப் கட்டிங்குடன் முடியில் ஒரு கண் மறைய, ஒரு கண் மட்டும் வெளியே தெரியும்படி திரையில் தோன்றுவார் எஸ்.ஜே.சூர்யா. பின்னணி இசை ஒலிக்க, அவர் நடந்து வந்து, அழுது கொண்டிருக்கும் மக்களின் கதறல்களை ரசித்துக்கொண்டிருப்பார். அப்போது வைக்கப்படும் ஒரு க்ளோசப் ஷாட்டில், எஸ்.ஜே. சூர்யாவின் உதடு மட்டும் அசையும். 'ப்பா.. யார்ரா இந்த மனுசன்?' என மிரட்சியுடன் தியேட்டரே பார்த்தது ரசித்து ஆர்ப்பரித்தது அந்த நடிகனின் நடிப்பை! 'ஸ்பைடர்' எனும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பின் மாஸ்டர் பீஸ் படத்தில் வரும் காட்சிதான் இது.

தனது 20வது வயதில் அதாவது 1988ம் ஆண்டு நெத்தியடி படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைகிறார். அந்த படத்தில் அவருக்கு சிறிய கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 1993ம் ஆண்டு கிழக்குச் சீமையிலே படத்திலும், 1995ம் ஆண்டு ஆசை படத்திலும் நடித்திருக்கிறார்.

1999ம் ஆண்டு வாலி என்ற படம் வெளியாகி ஹிட்டாகிறது. இரட்டை வேடத்தில் அஜித் மிரட்டியிருக்கிறார் என பலரும் புகழத்தொடங்குகின்றனர். அப்போது படத்தின் இயக்குநர் யார் என்ற தேடலுக்கு விடையாய் கிடைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. 'யாருயா இந்த பையன்?' என ஏறிட்டு பார்ப்பதற்குள் அடுத்த வருடமே விஜயுடன் அடுத்த படம், குஷி வெளியாகி மற்றொரு ஹிட். தமிழ்சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து இயக்குநராக முத்திரை பதித்தார். அதுவரை கேமிராவுக்கு பின்னால் இருந்து இயக்கியவர் நியூ படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். தொடர்ந்து, 'அன்பே ஆருயிரே' 'இசை' படங்களில் மூலம் ஹீரோ அவதாரத்தை தொடர்ந்தார்.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவை தவிர்த்துவிடுவோம். கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யாவையும் தவிர்த்துவிடலாம். இதையெல்லாம் வடிகட்டிய பின்பு நமக்கு எஸ்.ஜே.எஸிடமிருந்து 'வில்லன்' எனும் வலுவான மெட்டிரியல் கிடைக்கும். அந்த மெட்டிரியலைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்; கொண்டாடுகிறார்கள்; ரசிக்கிறார்கள். தானே இயக்குநராக இருந்து நடிக்கும்போது வெளிப்படும் அவுட்புட்டை காட்டிலும், மற்றொரு இயக்குநருக்கு கீழ் நடிகனாக நடிப்பது உண்மையில் சவாலானது. அந்த சவாலை சாதனையாக்கிய விதத்தில் ஜோலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

ரசிக்கும்படியான எதிர்மறை கதாபாத்திரத்தின் தேவை தமிழ்சினிமாவுக்கு அதிகமாவே இருக்கிறது. 'ஜாம்பவான்' ரகுவரனுக்கு பிறகு அந்த தேவை கூடிக்கொண்டே செல்கிறது. திடீரென அந்த இடத்தை க்ராஸ் செய்கிறார் எஸ்.ஜே.எஸ். ரகுவரனைப் பொறுத்தவரை வில்லனாக இருந்தாலும் தமிழ்சினிமா ரசித்து கொண்டாடிய நடிகன். பார்வையாளர்களுக்கு ரகுவரன் வில்லனாக தெரிந்தாலும் அவர் மீது கோபம் வருவதேயில்லை. அவரது வில்லத்தனத்தை மக்கள் ரசித்தார்கள். அவரது வாய்ஸ்க்கே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. எஸ்.ஜே. சூர்யாவை முழுமையாக ரகுவரனுடன் ஒப்பிடமுடியாது என்றாலும், அவரின் சாயல் தென்பட தொடங்கியிருக்கிறது. ரகுவரனைப்போல, எஸ்.ஜே.சூர்யாவிடமும் ரசிக்கும் வில்லத்தனம் மிளிர்கிறது.

இறைவி படத்தில் ஹாஸ்ப்பிடல் காட்சியில், 'நாய் அவன் நாய்' என கோவத்தில் எஸ்.ஜே.சூர்யா கத்தும் அந்த மொத்த காட்சியும் ரசிக்க வைக்கும். அதேபோல க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியை கொன்ற பிறகு, ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்துகொண்டு, 'ஆண் நெடில், பெண் குறில்' என கூறும் காட்சிகள் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக, மனைவியுடன் உண்மையை மறைத்து போலியாக பேசியாக வேண்டும் என்பது தான் அந்த காட்சி. பிரித்து மேய்ந்திருப்பார் மனுசன்! எந்த கதாபாத்திரம் சூழல் கொடுத்தாலும் அந்த காட்சியை மெருகேற்றும் கலை அவருக்கு சாத்தியம்!

குறிப்பாக அவரது அந்த ஏற்ற, இறக்க மாடுலேஷன் டோன் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. மெர்சல் படத்தில் ஹரிஷை நோக்கி 'இன்னும் 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரின்னா எல்லாரும் ஷாக் ஆவாங்க' என பேசிவிட்டு சிரிக்கும் காட்சிகள் எஸ்.ஜே.சூர்யாவை வழக்கமான வில்லன்களிடமிருந்து தனித்து தெரிய வைக்கிறது. மொத்த காட்சியிலுமே ரசிர்களை தன் பக்கம் நோக்கி இழுத்துவிடும் வல்லமையை அவருக்கு மட்டுமே வாய்த்தது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திலும் எதிர்மறையான கதாபாத்திரத்தை ஏற்றே எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார். 'சும்மா இர்ரா' என்ற ஒரே டையலாக் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்தியது. க்ளாஸிக்!

தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாநாடு’ படத்திலும் 'தலைவரே' என்ற ஒரே ஒரு வார்த்தையை என்ன வகையான மீட்டரில் பயன்படுத்த முடியும்? எந்தெந்த மாடுலேஷனில் உபயோகிக்கலாம் என்பதை அவரது அந்த காட்சியின் மூலம் உணர முடியும். அவ்வளவு அழகாக ரசிக்க வைத்திருக்கிறார். சிரிக்க வைக்கிறார். சிம்புவுக்கு டஃப் கொடுத்து முதன்மை கதாபாத்திரத்துக்கான இடத்தில் தன்னை நகர்த்தும் அளவில் இதயங்களை வெல்கிறார். அவர் நடித்த மற்ற படங்களிலுமே கூட, ஹீரோக்களை அச்சுறுத்தும் வகையில் தனக்கான முக்கியத்துவத்தை உருவாக்கி அலறவிடுகிறார். இதே வேகத்தில் சென்றால், எதிர்காலத்தில் படத்தின் நாயகன் பெயரை பார்க்கும் முன் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரை ரசிகர்கள் கவனிப்பார்கள் என்பதை அறுதியிட முடியும்.

அவரின் இந்த பாணி தொடர வேண்டும் என்பது தான் சினிமா விரும்பிகளின் விருப்பம்!

- கலிலுல்லா