சிறப்புக் களம்

அழியாப்புகழின் உச்சம்; பிரதியெடுக்க முடியாத கலைஞன் - சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று

அழியாப்புகழின் உச்சம்; பிரதியெடுக்க முடியாத கலைஞன் - சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று

கலிலுல்லா

தன்னிகரற்ற, தனித்துவமான நடிப்பால் தமிழ்த்திரையுலகில் ஆளுமையாக பரவி சிகரம் தொட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். காலத்தால் அழியா காவியப் படைப்புகளை கலையுலகிற்கு விட்டுச் சென்ற சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த தினம் இன்று.

ஒப்பிட்டுச் சொல்ல எவருமில்லை என்ற அசாத்தியமான நடிப்பை அரங்கேற்றிய நடிகர் திலகம், 1928ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் பிறந்தவர். வெள்ளித்திரையில் தோன்றுவதற்கு முன்னரே ஏராளமான நாடகங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். பார் புகழ்ந்த பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் முன்னரே ராமாயணம் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக தோன்றியிருந்தார் சிவாஜி கணேசன். கருணாநிதியின் கதைவசனத்தில் 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் தான் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் சிவாஜி கணேசன் பக்கம் திரும்ப வைத்தது. இதன்பின்னர் ஒவ்வொரு திரைப்படத்திலும் சிவாஜியின் நடிப்பை கண்டு சக நடிகர்களே வியப்பின் உச்சத்திற்கு சென்றனர்.

சகோதர பாசத்தில் ரசிகர்களை கண்கலங்கி, நெஞ்சுருகச் செய்த பாசமலர், புறக்கணிக்கப்பட்ட மகனின் எண்ணத்துடிப்புகளை கச்சிதமாக வெளிப்படுத்திய தெய்வமகன், கலையும், காதலும் பின்னிப்பிணைந்த தில்லானா மோகனம்பாள், வீரஞ்செறியும் கதாபாத்திரத்தில் மின்னிய கர்ணன், பார்த்திராத கட்டபொம்மனை கண் முன்னே நிறுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன் என சிவாஜி நடிப்பில் உச்சம் தொட்ட திரைப்படங்களின் பட்டியல் நீளமானது. கதாநாயகன், வில்லன் என சிவாஜி திரையில் தோன்றிய போதெல்லாம் உணர்வு பொங்கும் தம் ரசவாத நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா போன்ற திரைப்படங்களில் சிவாஜியின் வசன உச்சரிப்பும், கம்பீரமிக்க உடல்மொழியும் வேறு எவராலும் பிரதியெடுக்க முடியாதது. தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் கடைக்கோடி ரசிகனையும் சென்றடையும் வகையிலான பாவனைகளையும் குரல்மொழியையும் கொண்டிருந்த ஒரு பெரும் கலைஞன் சிவாஜி கணேசன். டிஜிட்டல் யுகத்திலும் சிவாஜியின் பாத்திரத்தோடு ஒன்றிப்பிணைந்த நடிப்பாற்றலும், உடல் மொழியும், வசன வெளிப்பாடும் அடுத்தடுத்த தலைமுறையினர் நெஞ்சிலும் பதிகிறது என்பது நிதர்சனம். நடிகர் திலகம் தமிழ்த்திரையுலகின் காவிய ஆவணம். என்றென்றும் போற்றிப்புகழ வேண்டிய பொற்களஞ்சியம்.

சிவாஜி கணேசனை பார்த்து அவர் போலவே நடித்து பல நடிகர்கள் வந்திருக்கலாம், வரலாம். ஆனால் நடிப்பில் பலருக்கும் முன்னோடியாக இருப்பதில் சிவாஜி நிகர் சிவாஜியே....

சிவாஜி பெற்ற விருதுகள்:

1966- பத்மஸ்ரீ விருது.
1969- தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது.
1984- பத்ம்பூஷன் விருது.
1986-ல் கெளரவ டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் வழங்கியது         
இவரின் படம் பதித்த 4ரூபாய் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1995- செவாலியர் விருது பிரான்சினால் வழங்கப்பட்டது.
1996- ல் குடியரசுத் தலைவர் அளித்த  தாதாசாகிப் பால்கே விருது.

சிவாஜி கணேசனை பார்த்து அவர் போலவே நடித்து பல நடிகர்கள் வந்திருக்கலாம், வரலாம். ஆனால் நடிப்பில் பலருக்கும் முன்னோடியாக இருப்பதில் சிவாஜிக்கு நிகர் சிவாஜியே....