சிறப்புக் களம்

முறையான ஊசி to உணவு முறை : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்க சில எளிய வழிகள்

முறையான ஊசி to உணவு முறை : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்க சில எளிய வழிகள்

Sinekadhara

நீரிழிவு நோயை கண்டுகொள்ளாவிட்டால் அதுவே மிகப்பெரிய உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். சில உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறைகள் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும். டயாபட்டிக் அல்லது நீரிழிவு நோய் என்பது உண்ணும் உணவுப் பொறுத்து உடலை பாதிக்கக்கூடிய ஒருவகை பிரச்னை. டைப் 1 அல்லது டைப் 2 என எந்தவகை நீரிழிவு நோயாக இருந்தாலும் அதைக் கருத்தில்கொள்வது அவசியம்.

டயாபட்டிக் நிலை என்றால் என்ன?

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அனைத்தும் சர்க்கரை மூலக்கூறுகளாக அதாவது குளுக்கோஸ்களாக மாற்றப்படுகின்றன. இந்த சர்க்கரை மூலக்கூறுகள்தான் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது அது, கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது.

இன்சுலின் என்பது உடல் திசுக்களில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் இயக்கத்துக்கு காரணமாக ஒருவகை ஹார்மோன். இந்த சர்க்கரைதான் உடலின் இயக்கத்துக்கு ஒரு எரிபொருளாக செயல்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில் கணையத்தில் பீட்டா செல்கள் என்று சொல்லக்கூடிய இன்சுலினை சுரக்கும் செல்களை நோயெதிர்ப்பு மண்டலம் அழித்துவிடுகிறது. இந்த பீட்டா செல்கள் அழிக்கப்படும்போது, இன்சுலின் சுரக்காமல் போகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

டைப் 2 நீரிழிவு நோயைப் பொருத்தவரை கணையம் இன்சுலினை சுரக்கும். ஆனால் உடல் செல்கள் அதை தேவையான அளவுக்குப் பயன்படுத்தாது. இதைத்தான் இன்சுலின் தடை என்கின்றனர். இதன் முடிவும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுதான்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு, பக்கவாதம், பார்வையிழத்தல், சிறுநீரக செயலிழப்பு மற்றும் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் உருவாகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும்போது உடலில் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே போகும். சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திட உதவும்.

நீரிழிவு நோய்க்கு சபதம் விடுங்கள்: உங்களுடைய மருத்துவர் நீரிழிவு நோய்குறித்த சில அடிப்படை தகவல்களைத்தான் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் அதை முறையாகக் கடைபிடிப்பது அவரவர் கைகளில்தான் இருக்கிறது. தினசரி உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதேபோல் தினசரி ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தல் கூடாது: எந்தவகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதயம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும். ரத்த ஓட்டம் குறையும்போது கால்கள் மற்றும் பாதங்களின் தொற்றுகள், புண்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் கால்களின் செயலிழப்புக்கு காரணமாக அமைந்துவிடும். கண்கள் குருடாதல், நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் எளிதில் உருவாக்கும் என எச்சரிக்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு.

தொடர் பரிசோதனை மற்றும் கண் சோதனை அவசியம்: உடல் பரிசோதனை செய்யும்போது சிறுநீரகம், நரம்பு, கண்கள் மற்றும் இதய நோய்கள் குறித்த சோதனைகளையும் மேற்கொள்வது அவசியம் என்கிறது மாயோ க்ளினிக் ஆய்வு. இந்த சோதனைகள்மூலம் உடல் உறுப்புகள் மேலும் சேதமடையாமல் முன்கூட்டியே சிகிச்சை எடுத்து சரிசெய்துகொள்ளலாம் என்றும் கூறுகிறது.

ரத்த அழுத்தம் மற்றும் லிப்பிட் அளவுகள்: நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ரத்தநாளங்களை சேதமடையச் செய்யும். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கொழுப்புச்சத்தும் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு எளிதாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் என எச்சரிக்கிறது ஆய்வு. எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெறும்போது அவர்கள் முறையான பயிற்சி, உணவு முறைகளில் மாற்றம் மற்றும் முறையான மருந்துகளை பரிந்துரைப்பர்.

கால்களை பாதுகாக்கவேண்டும்: ஒரு நீரிழிவு நோயின் பாதங்கள் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பாகம். நீரிழிவு நரம்பியல் பிரச்னையால் கால்களின் உணர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் காயம் ஏற்பட்டால் உடனே தெரியவராது. அதேசமயம் ஏற்பட்ட காயமும் சீக்கிரம் குணமாகாது. எனவே தினமும் குளிக்கும்போது கால்களை சுத்தமாக கழுவி காயம் ஏற்படாமல், ஈரப்பதம் இல்லாமல் பாதுகாப்பது அவசியம்.

பற்கள் பாதுகாப்பு: நீரிழிவு நோய் பல் ஈறுகள் பிரச்னைக்கு வழிவகுக்கும். எனவே தினசரி கட்டாயம் இரண்டுநேரமும் பல்துலக்குவது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பரிசோதிப்பதும் அவசியம்.

முறையான ஊசி: மருத்துவர் பரிந்துரைக்கும் எந்த ஊசியையும் தவிர்க்கக்கூடாது. ஆய்வுகளின்படி, டயாபெட்டிகில் உள்ள ஹைப்பர் கிளைசீமியா நோயெதிர்ப்பு சக்தியை செயலிழக்க செய்யும் என்று கருதப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளிடம் படையெடுக்கும் நோய்க்கிருமிகளின் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிடும். எனவே நீரிழிவு ஊசிகளை முறையாக எடுத்துக்கொள்வது அவசியம். மேலும் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றியும் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்றி வேறு மருந்துகளை எந்த காரணம் கொண்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

தூக்கம் தவறவே கூடாது: தூக்கம் ரத்தத்தின் சர்க்கரை அளவை பாதிக்கும். அதேபோல் ரத்த சர்க்கரை அளவு தூக்கத்தை பாதிக்கும். எனவே நன்றாக தூங்குவதற்கான பயிற்சிகளையும் வாழ்க்கைமுறைகளையும் மேற்கொள்வது அவசியம்.