சிறப்புக் களம்

அரசியல் என்ன சாக்கடையா? இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்? - விரிவான அலசல்

அரசியல் என்ன சாக்கடையா? இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்? - விரிவான அலசல்

kaleelrahman

அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கியிருக்கும் இளைஞர்கள் ஜனநாயக கடமையாற்ற அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவிலும், வல்லரசாக விளங்கும் அமெரிக்காவிலும் இளைஞர்கள் குறைவாகத் தான் இருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரை, இளைஞர்கள் நினைத்தால் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும். அதனால் இளைஞர்கள் இந்தியாவை வல்லராசாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டம் என்றனர்.

இந்திய இளைஞர்கள் மிக திறமையானவர்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம். அதன்படி தலைசிறந்த பொருளாதாரத்திலும் மேலோங்கிய நாடுகளில் மருத்துவ பணியிலும் கணிசமான தொகையில் இந்திய இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நாசா, ஐபிஎம், மைக்ரோசாப்ட் போன்ற தலைசிறந்த நிறுவனங்களிலும் இந்திய இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது.

ஒரு நாடு இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் அந்த நாடு வளரவும் முடியாது, வளர்ந்த நாடுகளின் வரிசையில் இணையவும் வாய்ப்பில்லை. அதனால் நீ நிலையை மாற்றிக்கொள்ள, மனிதன் தன்னை எவ்வாறு ஆள்கிறான் என்பது பற்றி அறிந்துகொள்ள நிச்சயம் அரசியல் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் வேண்டும் இது தேவையானதும், அதீத முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.

தங்களுக்குள் சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டு தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு கூட்டாகச் சேர்ந்து பெரிய அமைப்புகளை ஏற்படுத்தி, கூட்டு வாழ்க்கைக்கான ஒரு அமைப்பை உருவாக்கி தருவதே அரசியல். அதனுள் வரும் கட்சி என்பது கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பேயாகும். இந்நிலையில் கடந்த காலங்களில் அரசியல் ஒரு சாக்கடை என கருதிய இளைஞர்களும், பொதுமக்களும் ஒதுங்கி நின்றனர். இதற்கு அவர்களின் பொருளாதார சூழ்நிலை குடும்ப சூழ்நிலை அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கு போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தது. ஆனால் தற்போது அதையும் மீறி அரசியலில் விழிப்புணர்வுடன் இளைஞர்களின் வருகை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது அரசை கண்காணிப்பது தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது இளைஞர்களும் மாணவர்களும் கொதித்தெழுந்த நிகழ்வு என அனைத்தையும் பொதுமக்களாகிய நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் உந்துதல் என்ன? அவர்களின் அரசியல் பார்வை என்ன? அவர்களின் அரசியல் மாற்றம் என்ன? வருங்கால தொலைநோக்கு பார்வை என்ன? போன்றவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

“தரமான சாலை இல்லாத காரணத்தால் என் தந்தையை நான் இழந்தேன். லஞ்சம் கொடுக்காமல் எனக்கு வேண்டிய கல்வி சான்றிதழ் வாங்கிய நான், என் தந்தைக்கு செய்ய வேண்டிய கடைசி கடமைகள் சிலவற்றை செய்ய லஞ்சம் தர வேண்டியதானது. நடுத்தர குடும்பதை சார்ந்த நான் அரசியலுக்கு வந்திருக்கேன். எனக்கு வந்த கோபத்தில், நம்ம ஊரு ஏன் இப்படி இருக்கு இதை யாரு மாற்றுவாங்க, நாமா ஏன் மாற்றக் கூடாது என்று அந்த கோபம் தான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்துதிருக்கு. மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, கல்வி, குடிநீர் வேண்டும், அதை நாம்தான் கொடுக்க முடியும் என்று அரசியல் மீது ஈர்ப்பு வந்தது. இங்க இருக்குற எல்லோரும் அரசியலுக்கு புதுசு. ஆனால் மக்கள் சேவைக்கு புதுசு இல்லை என்று படித்து தெரிந்து கொண்டேன். அரசியலில் மாற்றம் வேண்டும் அதற்கு நாம் என்ன பண்ணப்போறோம். மற்றவர்களை பற்றி குறை சொல்லாமல் நாம் களத்தில் இறங்கி செய்வோமே” என்கிறார் காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர்.

“என்னுடைய சிறுவயது முழுவதும் வறுமையில் கழிந்தது. அரசியலும் வாழ்வியலும் பிரிக்க முடியாத ஒன்று இதை புரிந்துக் கொள்வதற்காக நான் கொடுத்த விலை என் தந்தையின் மரணம். நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது என் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றோம். நான்குமணி நேரமாக எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நேரத்தை கடத்தினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இதயத் துடிப்பு குறைய ஆரம்பித்தது.

அப்போது செங்கல்பட்டுக்கு தான் அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் செங்கல்பட்டு அழைத்துச் செல்வதற்கு முன்பே அப்பா இறந்துவிட்டார். அவரின் நினைவோடு சில நாட்கள், சில வாரங்கள் கரைந்து போனது. அப்போதுதான் சிந்தித்துப் பார்த்தேன் காஞ்சிபுரத்தின் தலைமை அரசு மருத்துவமனை, இங்கு வசிக்கக் கூடிய அனைத்து மக்களுக்குமானது. இங்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு, விபத்து ஏற்பட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை எதுவானாலும் இங்கிருந்து உடனே செங்கல்பட்டுக்கு தூக்கிச் செல்லுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

அப்புறம் எதற்கு காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை. என் அப்பா காலங்காலமாக இந்த திராவிட கட்சிக்காரர்களுக்கு தான் ஓட்டு போட்டார். ஆனால் இந்த திராவிட கட்சிக்காரர்கள் அடிப்படை மருத்துவத்தை கூட எங்களுக்கு உறுதி செய்து தரவில்லை. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் தந்தை நேரம் கடத்தப்பட்டு என் கண்முன்னே துடிக்க துடிக்க இரத்த வாந்தி எடுத்து இறந்துபோனார். மருத்துவர்கள் உடனடி அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவரை நிச்சயம் காப்பாற்றி இருக்கலாம்.

அப்போதுதான் புரிந்தது அடிப்படை அரசியல் என்பது ஒரு வாழ்வியல் தான். நாங்கள் சொல்வது போல தரமான மருத்துவம் தேவைப்படும் போது உடனடி அறுவை சிகிச்சை என தரமான மருத்துவம். இதை அவர்கள் கொடுத்திருந்தால் என் தந்தையை நான் இறந்திருக்க மாட்டேன். என்னைப்போல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய அம்மா, அப்பா, அக்கா, தம்பி என்ற உறவுகளை விபத்திலோ அல்லது சரியான சிகிச்சை கிடைக்காமலோ இறந்திருக்கிறார்கள். இந்த நிலை இனி என் மக்களுக்கு வரக்கூடாது.

60 ஆண்டு காலமாக ஓட்டுப்போட்ட என் மக்களுக்கு தரமான சாலை. குடிநீர், மின்விளக்கு, மருத்துவம் கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிகிறது. எல்லாம் தெரிந்தும் இவர்கள் மீண்டும் மீண்டும் செய்த தவறையே செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு அடிப்படை அறிவியல் அடிப்படை அரசியல் இதை பற்றிய தெளிவு இல்லை.

அரசியல்வாதிகளும் அதை கற்றுக் கொடுக்கவில்லை. இதையெல்லாம் தெரிந்து தெளிவுபெற்ற நான் அரசியல் களத்தில் குதித்தேன். அரசியலை என்னுடைய கொள்கையாக ஏற்ற நான் சீமானின் கொள்கையுடன் என்னுடைய கொள்கை ஒத்துப்போனதால் அவரோடு இணைந்து பயணிக்க முடிவெடுத்து, இன்று நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கிறேன்” என்றார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன்.

இளைஞர்களின் அரசியல் வருகையை குறித்து தெய்வசக்தி பயிற்சி மையத்தின் இயக்குனர் ஜவகர் கூறும்போது...

நாட்டின் விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய நாட்டின் பிரச்னைகளை நன்றாக புரிந்து கொண்டு தெளிவான பிறகுதான் போராட்டக் களத்திற்கு வந்தார்கள் அப்படியிருக்க இன்றைய காலச் சூழலில் இளைஞர்கள் பொதுவாக அரசியல் பார்வையில், அரசியல்வாதிகள் அனைவரும் கொடுத்த வாக்கை ஒருபோதும் காப்பாற்ற மாட்டார்கள். மக்களை ஏமாற்றி விடுவார்கள் என்கின்ற ஒரே பார்வைதான் இருக்கிறது. இதற்காக அரசியலை விட்டு விலக முடியாது. தேர்தலை புறக்கணிக்க முடியாது. நிச்சயமாக தேர்தல் தேவை இதற்காக புதிய புதிய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த புதிய கட்சிகளால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு விடாதா என்று இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

இவர், உங்களால் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தற்போது இளைஞர்கள் இருக்கிறார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென புது ஆட்சியை கொண்டுவந்து முதல்வர் பதவியில் அமர்ந்தது போல், தானும் கட்சி ஆரம்பித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாமென நினைக்கிறார்கள். ஆனால் அது தமிழகத்தில் சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இளைஞர்கள் ஆதங்கத்தின் காரணமாகவே பல்வேறு கட்சிகளில் இணைகிறார்கள்.

இளைஞர்கள் சாதி அரசியலை தாண்டி நல்ல அரசியலை கொண்டு வர முடியுமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். விளக்கை தேடிவரும் விட்டில் பூச்சி போல் இளைஞர்களை மாற்றி விடுவார்களோ இந்த அரசியல்வாதிகள் என்று என தோன்றுகிறது என்றார்.

- பிரசன்னா