சிறப்புக் களம்

''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்

''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்

webteam

நன்றாக பேசிக்கொண்டிருந்த பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ளனர்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பாப்பிரட்டிப்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளார் கோமதி. கடந்த 5ம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் மாணவி கோமதி. மாணவியை பின் தொடர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் கோமதியை கடத்தி அப்பகுதியில் உள்ள ஆற்று ஓடைப்பகுதியில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சி செய்துள்ளனர். மாணவி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவர சதீஷும், ரமேஷும் தப்பித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து பலத்த காயமடைந்திருந்த கோமதியை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் கோமதி.

இந்நிலையில், கோமதிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “தீபாவளிக்காக எனது மகள் ஊருக்கு வந்தாள். காட்டுப்பகுதிக்கு சென்ற எனது மகளை சதீஷும், ரமேஷும் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். வாயில் துணியை வைத்து அடைத்து சத்தம் போடாதவாறு தடுத்துள்ளனர். ஊரார் வந்தபின் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுவிட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த மகளை தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். கடந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. இறப்பதற்கு சிறிது நேரம் முன்னதாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி எனது மகள் கூறினாள். சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டாள். மருத்துவமனையிலும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. சரியாகிவிடும் என்று மேம்போக்காக இருந்துவிட்டனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த போது தாங்கள் யாருமே வீட்டில் இல்லை என்றும் கூலி வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கோமதியின் தயார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மகளின் வாயில் கோணியையும் துணியையும் வைத்து அடைத்துள்ளனர். அதனால் மகளால் அலறக்கூட முடியவில்லை. பெண்ணை தரதரவென்று இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்துள்ளனர். நாங்கள் வந்து பார்த்தபோது கோமதி மயக்கத்தில் இருந்தாள். இது குறித்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஜாமின் கூட கிடைக்காது என்றும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அடிக்கடி மயக்கம் வருவதாக கோமதி என்னிடம் தெரிவித்தார். தலையை ஸ்கேன் செய்து பார்த்தோம். எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குளுக்கோஸ் மட்டுமே ஏற்றப்பட்டது. வேறு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. நல்லபடியாக பேசிக்கொண்டுதான் இருந்தாள். வாந்தி வருவதாக கூறினார். திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.