கேரளாவின் திரிச்சூரில் உள்ள கனிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசம் பால். 55 வயதான அவருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு போதுமான பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தார்.
அதன்படி, திரிச்சூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சையும் செய்துள்ளார். அங்கிருந்த சீனியர் மருத்துவர் கவனக்குறைவாக அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்திய கத்தரிக்கோலை வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்ததால் அதை அகற்ற மீண்டும் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் பாலி டி ஜோசப்பை விசாரிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். நோயாளியின் மனைவி பிந்து இதுபற்றி கூறுகையில், ’’ என் கணவர் ஹெடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் எங்களால் செலவுசெய்ய முடியாததால்தான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.
முதலில் மருத்துவக் கல்லூரியின் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணரான டாக்டர் பிரவீனை அணுகினோம். அவர்தான் டாக்டர் பாலியை பரிந்துரைத்தார்.
ஆனால் அவர் அரசு மருத்துவ கல்லூரியில் சந்திப்பதற்கு பதிலாக அவருடைய சொந்த மருத்துவமனைக்கு ஆலோசனைக்கு வருமாறு கூறினார். அறுவைசிகிச்சை நன்றாக செய்ய பத்தாயிரம் ரூபாய் எங்களிடமிருந்து வாங்கிக்கொண்டார். அறுவைசிகிச்சை செய்த பத்து நாட்களிலேயே பித்த நாளத்தில் மலம் இருப்பதாகக் கூறி மற்றொரு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிடி ஸ்கேன் செய்தனர். ஒரு ஜூனியர் மருத்துவர் அவரது குடலில் தொற்று இருப்பதாகவும், மீண்டும் ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் எனவும் கூறினார்.
இதைக் கேட்ட எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதனால் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோதுதான் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்தோம். முன்பே டாக்டர் பாலியிடம் கேட்டபோது அவர் தெளிவான பதிலை கொடுக்கவில்லை. தாமதமின்றி அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தினார்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அவரைத் தொடர்புகொண்டு இதுபற்றி பேசினோம். அரசு மருத்துவமனையில் எதற்கு பணம் கேட்டார் என்று தெரியவில்லை. இதுபோல் மற்ற நோயாளிகளிடம் இருந்தும் பணம் வாங்கியிருக்கிறார் என்றும் அறிந்துகொண்டோம். மருத்துவமனை அதிகாரிகளையும் அதற்குபிறகு தொடர்புகொள்ள முடியவில்லை’’ என்கிறார் பிந்து.