சிறப்புக் களம்

"பாஜகவில் நல்லவர்கள் சேரவே வாய்ப்பில்லை": சீமான் சிறப்பு பேட்டி

"பாஜகவில் நல்லவர்கள் சேரவே வாய்ப்பில்லை": சீமான் சிறப்பு பேட்டி

sharpana

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ‘பா.ஜ.க தனித்து போட்டியிட்டாலே 60 தொகுதிகளில் வெற்றிபெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருகிறார், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டுமுதல் நடந்த சட்டமன்றத் தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தமிழகத்தில் ’தனித்தே’ தேர்தல் களம்கண்டு வாக்கு வங்கியை அதிகரித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், இதுகுறித்து பேசினோம்,

பா.ஜ.க தலைவர் எல். முருகன் ’தனித்து போட்டியிட்டாலே 60 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’ என்றிருக்கிறாரே? அவர், கூறுவதுபோல்  வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

கட்சியின் தலைவர் என்பதால் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்த முருகன் அப்படி பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல,  தனித்து போட்டியிட்டு ஆட்சியமைப்போம் என்று எல்லா கட்சிகளுமே கூறுவதுதான். எந்தக் கட்சியுமே தேர்தல் களத்தில் நாங்கள் தோற்றுப்போவோம் என்று சொல்வதில்லை. அதனால், ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கும் உற்சாகம் அளிப்பதற்கும் பேசுவதாகத்தான் இதனைப் பார்க்கவேண்டும். கட்சியினரை உற்சாகப்படுத்தும் உரிமை ஒரு தலைவராக முருகனுக்கு உள்ளது. ஆனால், எதார்த்த களநிலை அப்படி இல்லை என்பது அவருக்கேத் தெரியும். பாஜக தமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை. அக்கட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தேவையற்றக் கட்சி. இந்த நிலத்திற்கே பாஜகவும், அதன் கோட்பாடும் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

தமிழகத்தின் குடிமகனாக கேட்கிறேன், தமிழகத்திற்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் எதற்கு?  இந்த இருக்கட்சிகளும் என்ன காரணத்திற்காக தேவைப்படுகிறன்றன? தமிழக மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் உயிருக்கும் எங்கேயாவது இந்தக் கட்சிகள் நின்றிருக்கின்றனவா? தானே புயல், ஒக்கி புயல், கஜா புயல், மீனவர் படுகொலை, ஆந்திரக்காட்டு படுகொலை, ஈழப்படுகொலை, விவசாயிகள் சாவு போன்ற எந்த பிரச்சனையிலாவது நம் பக்கம் நின்றிருக்கிறார்களா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஏதாவது அனுதாபம் தெரிவித்தார்களா? காவிரி நீர் உரிமை, முல்லை பெரியாறு உரிமை, கச்சத்தீவு மீட்பு உரிமை போன்றவற்றில் நின்றார்களா? என் மொழியையாவது வாழவைக்க பாடுபடுகிறார்களா? இல்லையே? ஆனால், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். அதனால், இரண்டு கட்சிகளுமே தேவையில்லாததுதான்.

பாஜகவிடம் 10 ஆண்டுகள் இந்தியாவை கொடுத்துவிட்டோம். அதில், ஏழு ஆண்டுகள் முடித்துவிட்டார்கள். இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவையே ஆளக்கொடுத்த நம்மை பிச்சைக்காரர்களாக்கிவிட்டதோடு, பொருளாதரத்தில் பெரிய இழப்பையும் ஏற்படுத்திவிட்டார்கள். அதற்கு, கடவுள் மீது பழியை போடுகிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாங்கள் கடவுளுக்கா ஓட்டுப் போட்டோம்? உங்களுக்குத்தானே போட்டோம்? இந்த ஐந்து வருடங்களில் 6 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி திருப்பி தரவேண்டும். ஆனால், அப்படி திருப்பித் தரும் நிலைமையே இல்லையே? எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்கிவிட்டது பாஜக.

’இன்றைய உலகத்தில் தற்சார்பு என்பது சாத்தியமில்லை. சீமான் இன்னும் தற்சார்பு குறித்து பேசுகிறார்’ என்கிறார்கள் பலர். ஆனால், என்னுடைய அடிப்படைக் கேள்வி கல்வி, மருத்துவம், குடிநீர் விநியோகம், சாலை போடுதல் பராமரித்தல், மின் உற்பத்தியில்கூடவா தற்சார்பு அடைய முடியாது? என்பதுதான். ஆனால், இதனையெல்லாம் அரசிடமே வைத்துக்கொள்ளாமல் எதற்கு தனியார்மயம் ஆக்கினீர்கள்? இந்த நாட்டில் பிறந்ததைத் தவிர என்ன தவறு செய்தோம்?  

       கொரோனா சூழலில் எல்லோரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆறு மாதமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் திடீரென சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தினால் எப்படி சமாளிப்பார்கள். மக்களின் நலனில் இருந்து மக்களின் மனநிலையில் இருந்து எதையுமே சிந்திக்காமல் அதிகார அரசாக பாஜக உள்ளது. இதுப்போன்ற மக்கள் விரோத காரணங்கள் நிறைய உள்ளன. அதனால், பாஜகவை தமிழக மக்கள் எப்போதுமே புறக்கணிப்பார்கள்.

இந்தியாவில் பாதி மாநிலங்களை பாஜகதான் ஆள்கிறது. அந்த மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி விகிதம் என்ன? மற்ற மாநிலங்களில் எப்படி என்று பாருங்கள். ஏற்கனவே இருந்த காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆளும் மாநிலங்களில் ’அய்ய்ய்யயோ…. வேலையில் தன்னிறைவு அடைந்துவிட்டது, பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டது, அனைவருக்கும் வேலை, தடையற்ற மின்சாரம் அப்படி எதாவது இருக்கிறதா?’ அப்படி, ஒன்றுமே இல்லையே? இந்தியாவையே ஆளுக்கொடுத்தும் மக்களை பாஜக பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியா?

இப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம்.அதற்கான பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறோம்.

சினிமா நடிகர்கள்  பாஜகவில் சேர்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது ஒரு பருவகால வியாபாரம் மாதிரி. அதிமுக, திமுக இரண்டிலுமே இப்படி நடிகர்கள் சேர்வார்கள். தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிப்பார்கள். எப்போதும் நடப்பதுதான். இன்னும் மூன்று வருடத்திற்கு பாஜக ஆட்சியில் இருக்கிறது என்பதால் சேர்கிறார்கள். எங்க அண்ணன் நெப்போலியன் பாஜகவில் போய் சேர்ந்தார். ஆனால், அதற்குப்பிறகு அவரை இயங்கவிட்டார்களா? என் தம்பி பேரரசு போய் சேர்ந்தான். ஏதாவது தெரிகிறதா? அதோட அப்படியே விட்டுவிடுவார்கள். சினிமாத்துறையினர் சேர்வது  ஆள்கிற கட்சியில் இருக்கும்போது பாதுகாப்பு என்பதால் சேர்கிறார்கள். மற்றப்படி கோட்பாடு பிடித்து கொள்கையோடு சேரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நாளை இவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் அமைதியாகிவிடுவார்கள்.

அதேபோல, பா.ஜ.கவில் தொடர்ச்சியாக ரவுடிகளாக சேர்கிறார்கள் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

மார்க்கண்டேய கட்ஜூவே பாஜகவினரை குண்டாஸ்களின் கூடாரம் என்கிறார். சாதி, மதம் இரண்டையும் இரண்டுக் கண்ணாக பார்க்கிறது பாஜக. ஆனால், நாங்கள் சாதி மதம் மனித குலத்தின் எதிரியாகப் பார்க்கிறோம். ’சாதி மதம் மேலோங்கி இருக்கும் ஒரு சமூகத்தில் பொது நன்மை, பொதுப்பயன், சமூக ஒற்றுமையே இருக்காது’ என்கிறார், அண்ணல் அம்பேத்கர். ஆனால், அதனைத்தான் பாஜக இருக்கவேண்டும்; அதுதான் கோட்பாடு என்கிறது.  ரவுடிகள் வந்தால் கொடிமரம் நடுவதற்கும் கூட்டம் போடுவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறது. மக்கள் மதித்து வணங்குவதற்கும் ரவுடி என்பதற்காக பயந்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் வீரப்பனை வனத்தின் காவலனாக மதிக்கிறோம். வணங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அவரைக் கொண்டாடுவதற்காக எங்களை அருவருப்பாக பார்ப்பார்கள். ஆனால், சட்டம் வீரப்பனை ஒரு மாயாவி போல்தான் குற்றப்படுத்தியுள்ளது.  இதே பாஜகவிடம் வீரப்பன் குறித்து கேட்டால், சந்தனக் கடத்தல்காரன், மாயாவி, திருடன் என்று பேசும். ஓட்டுக்காக அவரது மகளை கட்சியில் சேர்த்துக்கொள்ளும். ஆடு பகை; குட்டி உறவு என்பதுபோல்தான். வீரப்பன் கெட்டவர். ஆனால், மகளை சேர்த்துக்கொள்வார்கள். பொதுவாகவே பாஜகவில் நல்லவர்களே சேர்வதற்கு வாய்ப்பு கிடையாது. ரவுடி ரவுடியுடன் தான் சேருவான். இனம் இனத்தோடுதான் சேரும். கொலைகாரன் கொலைகாரனுடன் தான் சேருவான். திருடன் திருடனுடன்தான் சேருவான். அதுமாதிரி பாஜகவில் ரவுடி ரவுடியுடன் தான் சேருகிறார்கள். அவ்வளவுதான்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜவில் சேர்ந்தது குறித்து?

அண்ணாமலை பாஜகவிற்காக திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறார்.  கவுண்டர் சமூகத்தில் இருந்து கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருக்கிறது. சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசனை விடவா அந்தக் சமூகத்தில் பெரிய ஆளுமைகள் பாஜகவில் இருக்கிறார்கள்? அதனால்தான், இந்த அந்த சம்பவத்தை நான் வேடிக்கையாக கருதுகிறேன்.

- வினி சர்பனா