சிறப்புக் களம்

விண்வெளிக்குச் செல்லும் 2-வது இந்தியப் பெண்... யார் இந்த சிரிஷா பாண்ட்லா?!

விண்வெளிக்குச் செல்லும் 2-வது இந்தியப் பெண்... யார் இந்த சிரிஷா பாண்ட்லா?!

PT WEB

கல்பனா சாவ்லாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் பிறந்த ஒரு பெண் விண்வெளிக்கு பயணம் செய்ய இருக்கிறார். இந்தியாவை பெருமைப்படுத்த காத்திருக்கும் சிரிஷா பாண்ட்லாவின் பின்புலம் அறிவோம்.

பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனம் விர்ஜின் கேலடிக். இந்த நிறுவனம் தனது முதல் சோதனை பயணமாக வரும் 11-ம் தேதி விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. இந்தப் பயணத்தில் ஐந்து பேர் குழு முதல்முறையாக விண்வெளிக்கு பறக்கிறது. இந்தப் பயணத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான சிரிஷா பாண்ட்லா என்பவர் பயணப்பட இருக்கிறார். கல்பனா சாவ்லாதான் விண்வெளிக்குச் சென்ற இந்தியாவில் பிறந்த முதல் பெண் வீரர்.

அவருக்கு பிறகு இந்தியாவில் பிறந்த சிரிஷா பாண்ட்லா தான் தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆக இருக்கிறார் சிரிஷா பாண்ட்லா. இந்தப் பயணத்துக்கு விர்ஜின் கேலடிக் நிறுவனத்தை நிறுவிய ரிச்சர்ட் பிரான்சன் தலைமை ஏற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

#Unity22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணமானது அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் விண்வெளி பறக்க இருக்கும் ஒன்பது நாளுக்கு முன்பு நடக்கவிருக்கிறது. ஜூலை 20-ம் தேதி ஜெப் பெஸோஸ் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே, தனது விண்வெளி பயணம் குறித்து ட்வீட் செய்துள்ள சிரிஷா பாண்ட்லா, ``#Unity22ன் அற்புதமான குழுவின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

யார் இந்த சிரிஷா பாண்ட்லா?

ஆந்திராவின் குண்டூரில் பிறந்தவர் சிரிஷா. என்றாலும் அவர் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் டெக்சாஸின் ஹூஸ்டனில்தான். அமெரிக்காவில் கல்வியை முடித்தவர், அங்குள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். இதனிடையே தான் கடந்த 2015-ம் ஆண்டு ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சிரிஷா தற்போது அந்த நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவர் பதவியை அலங்கரித்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக டெக்சாஸில் விண்வெளி பொறியாளராகவும், வணிக விண்வெளிப் பயணக் கூட்டமைப்பில் (சி.எஸ்.எஃப்) விண்வெளி கொள்கை பிரிவிலும் பணிபுரிந்தார் என்று 'எகனாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்கிடையே, இன்னும் சில தினங்களில் இந்தியர்கள் பெருமைப்படப் போகும் வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கும் சிரிஷாவை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தி இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பதிவில், ``இந்திய வம்சாவளி பெண்கள் தொடர்ந்து தடைகளை உடைத்து தங்களின் திறனை அந்நிய மண்ணில் நிரூபித்து வருகிறார்கள். தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பாண்ட்லா, புதிய விண்வெளி யுகத்தின் விடியலைக் குறிக்கும் ஒரு பயணத்துக்கு பறக்கத் தயாராகி, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறார்!" என்று வாழ்த்தியிருக்கிறார்.