பாதுகாக்கப்பட வேண்டிய எந்த ஆவணங்களையும், அடையாளப்படுத்த வேண்டிய எந்த ஆவணங்களையும் அச்சடித்து கொடுக்கும் நம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் நம் வீட்டில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் அழைப்பிதழ் அடிக்கிற பழக்கங்கள் நீண்ட நாட்களாகவே நம்மோடு இருந்து வருகிறது.
ஒரு திருமண நிகழ்வு என்றால் கூட நேர்த்தியான வடிவமைப்போடுகூடிய ஒரு அழைப்பிதழை அச்சடித்து வழங்குவதுதான் நம்முடைய பழக்கங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கடமைக்கு என்று இல்லாமல், அழகியலோடு கூடிய ஒரு அழைப்பிதழை அடித்து வழங்குவது பாரம்பரியமாக நாம் கொண்டிருக்கிற ஒரு பழக்க வழக்கம். அச்சாணி காலத்திலிருந்தே அப்படி அழைப்பிதழ்களை நாம் எழுதி வழங்கியிருக்கிறோம். மன்னர் காலம் தொட்டு தற்போது வரை ஆவணப்படுத்துதல் என்பது நம்முடைய வாழ்க்கையில் இரண்டற கலந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் அச்சாணியில் தொடங்கி அச்சுக் கோக்கும் முறைக்கு மாறி, இப்போது துணிகள் மூலமாகவே எழுத்துக்களை அச்சடிக்கும் முறை வரை நாம் நிறைய வளர்ந்திருக்கிறோம். இதற்காகவே உள்ள தொழில்தான், ஆப்செட் பிரின்டிங். அதிலும் மிகவும் அழகியலோடு கூடிய ஒரு அச்சு எதுவென்று சொன்னால் "ஸ்கிரீன் பிரிண்டிங்" என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யும் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இந்த அத்தியாயம்.
இவர்களின் வாழ்க்கை குறித்து நம்மிடையே பேசினார், ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யும் தொழிலாளி முரளி. “எனக்கு 37 வயசாகுதுங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி, படிப்பு முடிச்ச உடனே ஸ்கிரீன் பிரிண்டிங் கத்துக்கணும்னு ஆர்வத்தோடு இந்த வேலைக்கு வந்தேன். இந்த வேலைக்கு ஒரு பிரேம், ஒரு ஸ்கிரீன் துணி, ஒரு டேபிள், ஒரு சி.கிளாம்ப் - இவ்வளவுதாங்க முதலீடு. அச்சடிக்க தேவையான இங்க் இயந்திரங்கள் செய்கிற வேலையை மனித சக்தியால ரொம்ப நேர்த்தியா செய்ய முடியும். சாதாரணமா டீ சர்ட், சாக்குப்பை, கல்யாண தாம்பூலம் பை, துணி கடை விளம்பரம், அப்படின்னு நிறைய முறையில் பிரிண்டிங் பண்ணுவோம். அதுல எல்லாம் வேலை நுணுக்கம் அதிகமா தேவைப்படாது. விசிட்டிங் கார்டு, கல்யாண பத்திரிக்கை, ஷீல்டு இதுமாதிரியான வேலைகள்ல தான் நுணுக்கம் அதிகமா இருக்கும்.
முன்னலாம் வசதியானவங்கதான் ஸ்கிரீன் பிரிண்டிங் பத்திரிக்கை அச்சடிபாங்க. இப்போ எல்லோரும் செய்யக்கூடிய அளவுக்கு அதுவும் எளிமையாகிடுச்சு. ஸ்கிரீன் பிரின்டிங்ல, மூன்றுமுறை இருக்குதுங்க. அவை குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, ரன்னிங் ஜாப் முறை. இதுல மூன்றாவது முறை தான் அதிகமா பயன்படுத்துகிற முறை.
15 வருஷத்துக்கு முன்னாடி சாதாரணமா ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்ப எல்லாம் ரெண்டு நாளைக்கு 300 ரூபாய் கிடைக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு. அறிவியல் வளர்ச்சி நிறைய வர வர, நிறைய பேர் ஆப்செட் பிரிண்டிங் தொழிலுக்கு கூப்பிடுறாங்க. ஆனா எங்களுடைய தொழில்நுட்பம் யாருக்கும் புரிவதில்லை. புரிஞ்சவங்க ஒருத்தர் ரெண்டு பேரு தான் எங்களுக்கும் வேலை கொடுக்கிறாங்க. இதனால் தொழில்ல நிறைய நஷ்டம் வருது.
எங்கிட்ட வேலை செய்ற பையனுக்கு நான் ஒரு நாளைக்கு 150 ரூபா கூலி கொடுக்கிறேன். வேலை இருந்தாலும் இல்லாட்டியும் அந்த கூலியை கொடுத்து தான் ஆகணும். நான் வேலைக்கு வரும்போது ஒரு கிலோ இங்க் 130 ரூபாய்க்கு வித்துச்சு. இப்ப 350 ரூபாய் வரைக்கும் வித்துட்டு இருக்கு. இருக்கிற கலர்ல பிரிண்ட் போட்டு கொடுக்கலாம் என்று பார்த்தாலும், பார்ட்டி புதுசா ஒரு கலர்-ஐ கொண்டு வந்து காட்டுவாங்க. அப்ப கூடுதலான முதலீட்டு தொகை வைக்க வேண்டியிருக்கும். எப்படியோ என் காலம் முழுக்க இந்த ஸ்கிரீன் பிரிண்டிலே ஓட்டிட்டேன். ஆனா எதிர்காலம் எப்படி இருக்கும்னு இப்பவும் பயம் இருக்கு” என்றார் வருத்தத்தோடு.
அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் முன்னேற்றத்தை கொடுத்தாலும் கூட சிலர் வாழ்க்கையில் அது விளையாடவே செய்கிறது எனலாம். இருந்தாலும் கலை தன்னை காப்பாற்றும் என்கிற நம்பிக்கையோடு இருந்து வருகிறார்கள் இந்த எளிய மனிதர்கள்.
- ஜோதி நரசிம்மன்
முந்தைய அத்தியாயம்: எளியோரின் வலிமை கதைகள் 29: சாலையோர பலா பழ விற்பனையாளர்களின் பரிதாப வாழ்க்கை!