சிறப்புக் களம்

மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் பாஜகவின் முயற்சிக்கு வெற்றி?

rajakannan

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு அளித்தது. 6 வாரத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், 15
ஆண்டுகளுக்கு இதுதான் தீர்ப்பு என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் முதல், நிச்சயம் 6 வாரத்திற்குள் மத்திய அரசு
தீர்ப்பை நடைமுறைப்படுத்தாது என தமிழக எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வருவதால், தேர்தல் முடியும் வரை தீர்ப்பில்
கூறியுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தும் என்று கூறினார்கள். தற்போது, மேலும் 24 நாட்கள் அவகாசம்
கிடைத்துள்ளது, மத்திய பாஜக அரசின் காலம் தாழ்த்தும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். 

இதுஒருபுறம் இருக்க, காலக்கெடுக்குள் தீர்ப்பை அமல்படுத்தாமல் மேலும் ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது
உச்சநீதிமன்றம் என்ன சொல்லும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தது. 

1. 6 வார காலத்திற்குள் ஏன் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று கண்டனத்தை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவிக்கும்

2. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் தேவைப்பட்டிருந்தால் ஏன் காலக்கெடு முடியும் வரை காத்திருந்தீர்கள் என்று கேட்கும்

3. மேல் முறையீடு செய்யாமல் விளக்கம் கேட்டிருப்பதால் ஆரம்ப கட்டத்திலே மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பில்லை

ஆனால், உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கண்டனம் எதனையும் தெரிவிக்கவில்லை. நீங்கள் தீர்ப்பை அமல்படுத்தாதது சரியல்ல, வருத்தமளிக்கிறது என்னும்
தோரணையில் தான் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஸ்கீம் என்பதை அமையுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

இந்த இடத்தில் தான் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் எழுப்பும் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு
விளக்கம் கேட்டுதான் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள், அதற்கு விளக்கம் அளிக்காமல் மற்றதை ஏன் பேச வேண்டும் என்று அவர் வினா எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அவர் கூறுகையில், “நியாயமாக, ‘ஸ்கீம் அமைப்பதற்காக உங்களுக்கு காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது. ஏன் அதற்குள்
அமைக்காமல் மேலும் அவகாசம் கேட்கிறீர்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளது தான் ஸ்கீமா? என்பதுதான் கேள்வி. அதனை
தெளிவுபடுத்தாமல் மற்றவைகளை பேசி என்ன பிரயோஜனம். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர, விளக்கம்
அளிக்கப்படவில்லை. மே 3ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார்கள். அவ்வளவு தான். நியாயமாக அப்படி செய்யக் கூடாது. வேறு வழியில்லாமல்
செய்துவிட்டார்கள். தமிழக அரசு தன்னுடைய வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. ஸ்கீம் என்பது நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது தானா
என்பது உறுதி செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி இருக்க வேண்டும். அப்படி ஸ்கீம் என்பது நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அல்ல என்றால்
அதனையும் தெளிவாக கூற வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான முழு அதிகாரமும் உள்ளது. அப்படியெனில் ஸ்கீம் என்பது
என்ன?” என்று தெரிவித்தார். 

மத்திய அரசின் மனுவை முகாந்திரம் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என விவசாய சங்கத்தைச் சேர்ந்த காவிரி தனபாலன்
கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்ட பொழுதெல்லாம் கர்நாடக அரசு அதனை
நிறைவேற்றவில்லை. அப்பொழுதெல்லாம் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனத்தை உச்சநீதிமன்றம் பதிவு செய்யவில்லை. மத்திய அரசு உச்சநீதிமன்றம்
அளித்த உத்தரவை நிறைவேற்றவில்லை. மீண்டும் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்கிற போது உச்சநீதிமன்றம் அதனை ஏற்றிருக்கக் கூடாது. நீங்கள்
கேட்கும் விளக்கங்கள் அனைத்தும் நடுவர் மன்ற தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை நிராகரித்து இருக்க
வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டு தங்களிடம் வருமாறு நீதிமன்றம் கூறியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. தமிழகத்தை
புறக்கணிக்கும் வகையில் தான் மத்திய அரசு செயல்படுகிறது. அதனால், அது கொடுக்கும் வரைவு திட்டமும் அப்படி தான் இருக்கும்” என்று தெரிவித்தார். 

1956ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தில் ஸ்கீம் என்ற வார்த்தை முழு விளக்கம் உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திடம் அது குறித்து விளக்கம் கேட்க வேண்டிய
அவசியமில்லை என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகிறார். “ஸ்கீம் என்ற வார்த்தைக்கு நீதிமன்றம் விளக்கம் அளிக்க
தேவையில்லை. ஸ்கீம் என்பது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956-இல் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் பல
இடங்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடைபிடிப்பதை விடுத்து விளக்கம் கேட்பது ஏமாற்று வேலை. அதிகாரம் மிக்க ஒரு
அமைப்பாக வாரியம் அல்லது அமைப்பு அல்லது குழு என்ற பெயரில் அமைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. மத்திய அரசு தானாக எந்த
அமைப்பையும் உருவாக்க முடியாது” என்றார் டி.கே.எஸ். 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு என்ன கூறுகிறது

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் Chapter-5 இல் Volume-8 இல் ஸ்கீம் எப்படி அமைக்கப்பட
வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அது நிர்வாக அமைப்பாக செயல்படும். தொழில்நுட்ப
அமைப்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழு செயல்படும். காவிரி மேலாண்மை வாரியத்தின் கையில் தண்ணீரை திறந்து விடும் அதிகாரம் இருக்கும். தண்ணீரை
திறக்கும் அதிகாரம் கர்நாடகத்திடம் இருக்காது. திறக்கப்படும் தண்ணீரின் அளவை ஒழுங்காற்றுக் குழு சரிபார்க்கும். நிர்வாக அமைப்பாக காவிரி மேலாண்மை
வாரியமும், தொழில் நுட்ப அமைப்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் சேர்த்ததுதான் ஸ்கீம் என்ற தீர்ப்பில் உள்ளது. இதுகுறித்துதான் மத்திய அரசு சந்தேகம்
எழுப்பி இருந்தது. 

இப்படி முழு விளக்கமும் தெளிவாக இருக்கையில் ஏன் மத்திய அரசு விளக்கம் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மே 3ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை சுட்டிக் காட்டி மத்திய அரசு மே
12ம் தேதி வரையும் அவகாசம் கேட்டுள்ளது. ஆனால் வழங்கப்படவில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட மே 15ம் தேதி வரை தீர்ப்பு தொடர்பான விசாரணை
நடைபெற வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருந்தால் தற்போது எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், ‘ஸ்கீம்
என்ற ஒன்றினை அமைத்து வாருங்கள், 4 மாநிலங்களிடம் அதுகுறித்து ஆலோசித்து நாங்கள் இறுதி செய்கிறோம்’ என தற்போது உச்சநீதிமன்றம் சொல்லி
இருக்கிறது. ஒருவேளை மே 3ம் தேதி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்தாலும், அடுத்ததாக உச்சநீதிமன்றம் 4 மாநிலங்களுடன் கலந்து
ஆலோசிக்கும். அதற்கு குறைந்தபட்சம் சில வாரங்களாவது தேவைப்படும். அதற்குள் நிச்சயம் கர்நாடக தேர்தல் முடிந்துவிடும். அதனால், கர்நாடக தேர்தல்
வரை மத்திய பாஜக அரசு காலம் தாழ்த்தும் என்ற விமர்சனம் இந்த இடத்தில் உண்மையாகிவிடுகிறது. 

மே 3ம் தேதி கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் நடைபெறும் காலம். பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் என்ற
வார்த்தையை வரைவு திட்டத்தில் மத்திய பாஜக அரசு பயன்படுத்துமா என்பது சந்தேகமே.