சிறப்புக் களம்

"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி

"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி

sharpana

புதியக் கதைக்களத்தில் வெளியான பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ’பட்டா’வை பிடித்துள்ளது. இதில், அடித்த... சாரி... நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், ’டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உடல் மொழியாலேயே அற்புதமான நடிப்பை வழங்கி கூடுதல் கவனம் ஈர்த்துள்ளார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,

’சார்பட்டா பரம்பரை’ வாய்ப்பு எப்படி வந்தது?

“நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஏற்கனவே, இப்படத்தின் காஸ்டிங் இயக்குநர் நித்யா சாருடன் அறிமுகம் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ’ரஞ்சித் சார் படம் ஒன்னு இருக்கு. நல்ல ரோல். நீங்கப் பண்ணா நல்லாருக்கும்’ என்று அழைத்தார் நித்யா சார். ஆடிஷனில் ’நீங்க கொஞ்சம் வெய்ட் போட முடியுமா?’என்று கேட்டார்கள். நான் வேறு ஒரு படத்தில் நடிக்கும் சூழல் இருந்ததால் ’முடியாது’ என்று கூறிவிட்டேன். இரண்டு வாரத்திற்குப் பிறகு மீண்டும் போன் செய்து ’ஒரு லுக் டெஸ்ட் வாங்களேன்’ என்றார்கள். லுக் டெஸ்ட் பண்ணப்போ எல்லோருக்கும் டான்சிங் ரோஸ் ரொம்பப் பிடிச்சிப் போச்சி. நானும் எஞ்சாய் பண்ணி நடிச்சேன்”.

’டான்சிங் ரோஸ்’ பெயர் எப்படி வந்தது? நிஜத்தில் வாழ்ந்த பாக்ஸரின் பெயரா?

“’டான்சிங் ரோஸ்’ ஒரு ஆங்கிலோ இந்தியன் பெயர். இந்தப் படத்திற்காக ரஞ்சித் சார் கற்பனையாக உருவாக்கிய கதாபாத்திரம். இவரோட ஸ்டைல் டான்ஸ் ஆடிக்கொண்டே பாக்ஸிங் பண்ணுவதுதான். அந்த டெக்னிக்கால்தான் அவருக்கு டான்சிங் ரோஸ் என்று வைத்துவிட்டார்கள். ஆனால், எனக்கு உண்மையாகவே டான்சிங் தெரியும். ஏழு வருடமாக கற்றுக்கொண்டுள்ளேன்”.

’டான்சிங் ரோஸ்’ கேரக்டருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

“என்ன நடக்குதுன்னு சத்தியமா எனக்கு தலை கால் புரியலை. என் வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வெல்லாம் நடந்தது கிடையாது. இப்போ, நிகழும்போது ரொம்ப புதுசா இருக்கு. இந்த மூமெண்ட்ஸ்சை ரொம்ப எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். நடிக்கும்போது, ’டான்சிங் ரோஸ் கேரக்டர் பேசப்படும்’ என்றார் ரஞ்சித் சார். ஆனால், இந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லோரும் இந்தக் கேரக்டரை லவ் பண்றாங்க. அந்த லவ் நல்லா இருக்கு”

நெகிழ்ச்சியான பாராட்டு எது?

“படம் பார்த்த எல்லோரும் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், என் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் “மச்சான் நாங்க ஜெயிச்ச மாதிரியே இருக்குடா” என்று சந்தோஷப்படுகிறார்கள். அந்த பாராட்டுக்கு ஈடு இணையற்றது எதுவும் இல்லை”.

பா.ரஞ்சித்துடன் பணியாற்றிய அனுபவம்?

“ரொம்ப உண்மையா இருப்பார். கதாபாத்திரமாக நாமே ஒன்றை சிறப்பாக பண்ணால் ஏற்றுக்கொள்வார். ’இதுதான் வேண்டும்’ என்று கண்டிப்புடன் இருக்க மாட்டார். ரொம்ப ஃப்ரீடம் கொடுப்பார். ஊக்கப்படுத்துவார். ஷூட்டிங்கில் டேக்ஸ் எல்லாம் போனால், முகம் சுளித்துக்கொள்ளுதல் அவரிடம் பார்க்கவே முடியாது.

படம் வெளியான பிறகு பா.ரஞ்சித் என்ன சொன்னார்?

“நான் ரஞ்சித் சாரை பயம் கலந்த பிரமிப்போடுதான் பார்ப்பேன். படம் வெளியான பிறகு போன் செய்து ‘டான்சிங் ரோஸ் வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப தேங்ஸ் சார்’ என்றேன். சிம்பிளாக ஒரு விஷயம் சொன்னார். “எஞ்சாய் யுவர் டைம், எஞ்சாய் யுவர் மூமெண்ட்ஸ்.. எஞ்சாய்’ என்றார்.

இந்தப் படத்திற்காக நீங்கள் செய்த ஹோம் ஒர்க்?

“நான் ஏற்கனவே காலடி குத்து வரிசை கற்றுக்கொண்டிருந்தேன். அதனால், எனக்கு பாக்ஸிங் கடினமாகத் தெரியவில்லை. இந்தப் படத்திற்காகத்தான் மூன்று மாதம் பாக்ஸிங் கற்றுக்கொண்டேன். மற்றபடி நான் டான்ஸர் என்பதால் ஷூட்டிங்கில் தானாக பாக்ஸிங்கோடு டான்ஸும் வந்துவிட்டது. ரஞ்சித் சாரிடம் ’இப்படி பண்ணலாமா? அப்படிப் பண்ணலாமா?’ என்று காட்டினேன். அவருக்கும் பிடித்திருந்தது. நல்ல ஃப்ரீடம் கொடுத்தார். இதற்காக, எந்த ரிகர்சலும் பண்ணவில்லை”.

ஆர்யாவுடன் பாக்ஸிங் செய்த அனுபவம்?

“ரொம்ப கஷ்டமான அனுபவம். குத்துச்சண்டை நிஜமாவே போட்டோம். எல்லா அடியுமே உண்மையான அடி. நான் மட்டுமில்ல, எல்லோருமே அடி வாங்கினோம். ஆர்யா பிரதருடன் நான் மோதும் காட்சியில் ஒரு நாக் அவுட் வருமே, அது உண்மையானது. அவர் அடித்தவுடனே எனக்கு கழுத்து சுளுக்குப் பிடித்துக்கொண்டு லேசான மயக்கம் வந்துவிட்டது. அவரே ஓடி வந்து ‘என் கையே ஒதறிடுச்சி. ஓகேதானே ஷபீர்?’ என்றார். அந்த சுளுக்கு வலி நான்கு வாரம் வரை இருந்தது. ஆனால், அந்தக் காட்சியில் நடித்து முடித்ததும் அவுட் புட் நல்லா வந்ததில் சந்தோஷமடைந்தேன்.

எனக்காவது, ஒரு ஃபைட்தான். ஆனால், ஆர்யா பிரதருக்கு படம் முழுக்க அடிதான். இதுவே, பாக்ஸிங் விளையாட்டு என்றால் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று விடலாம். இது அப்படியல்ல. ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான ஆங்கிளில் எடுக்கவேண்டும். ஆர்யா, ஜான் கொக்கன், கலை என அனைவரும் கடினமாக உழைத்தார்கள். அடி வாங்கிக்கொண்டே இருந்தார்கள். க்ளைமேக்ஸ் காட்சியில், ஜான் கொக்கனுக்கு ஒரு டேக்கில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். மறுநாள்தான் மீதியை நடித்துக் கொடுத்தார்.

பாக்ஸிங்கிற்காக, உடம்பை கட்டுக்கோப்பாக கொண்டு வந்துவிடலாம். ஆனால், அதனை மெயிண்டெய்ன் பண்ணுவதுதான் ரொம்ப கஷ்டம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது காட்சிகள் எடுக்கும்போது, கொரோனாவால் ஊரடங்கு போட்டுவிட்டார்கள். ஆறுமாதம் படப்பிடிப்பு இல்லை. அப்படியிருந்தும், உடம்பை மெயிண்டெய்ன் செய்து வந்தேன். ஆனால், ஜூலையில் எனக்கு கொரோனா வந்துவிட்டது. மெயிண்டெய்ன் செய்ய முடியவில்லை. உடல் எடைக் கூடிவிட்டது. மீண்டும் சிரமப்பட்டு பழைய நிலைக்கு உடம்பை கொண்டு வந்து செப்டம்பரில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். பாக்ஸிங் செய்துகொண்டே நடனம் ஆடுவது, கபிலனை வெறுப்பேற்றுவது... அழுவது என எல்லாமே எஞ்சாய் பண்ணி செய்தேன்”.

படத்தில், இத்தனைபேர் பாக்ஸராக நடித்துள்ளீர்கள்? யார் உண்மையிலேயே பாக்ஸிங் விளையாட்டிற்கு செல்லலாம்?

“எல்லோருமே போகலாம். அந்தளவுக்கு, உண்மையாகவே முறையாக பாக்ஸிங் கற்றுக்கொண்டோம். எல்லோருமே வேற லெவல் உடம்பு வைத்துள்ளார்கள்”.

உங்களைப் பற்றி?

“எனது பூர்வீகம் கேரளா. பிசினஸ் நிமித்தமாக அப்பா சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். அதனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை கீழ்பாக்கத்தில்தான். என்னோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் 6 பேர். நான் நான்காவது பையன். பள்ளிக்கல்வி செவென்த்டேவிலும், பி.காம் வைஷ்ணவா கல்லூரியிலும், எம்.பி.ஏவை ஐ.டி.எம் இன்ஸ்டிடியூட்டிலும் பண்ணேன். சிறு வயதில் சினிமா மீதெல்லாம் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில்தான் இருந்தது. அதனால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினேன். இங்கிலாந்திலெல்லாம் விளையாடி இருக்கிறேன். ஆனால், காலேஜ் படிக்கும்போது பார்ட் டைம் ஜாப் எல்லாம் செய்து வந்தேன். அப்போது, சூர்யா சாரின் ‘ஆயுத எழுத்து’ படத்திற்கு நிறைய ஸ்டூடண்ட்ஸை அழைத்திருந்தார்கள். நானும் ஒருவனாக நடித்தேன். அதுதான், முதல் ஷூட்டிங் அனுபவம். அதிலிருந்து, சினிமா மீது சின்ன ஒரு ஆர்வம் வந்துவிட்டது. ‘பிக்பாஸ்’ ஆரி அறிமுகம் கிடைத்தது. அவர், மூலம் கூத்துப்பட்டறையில் இணைந்தேன். அப்போதிலிருந்தே, எனக்கு பசுபதி சாரைத்தெரியும். ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் படமான ’4531’ படத்தில் வில்லனாக செய்தேன். அதன்பிறகுதான் ‘அடங்க மறு’, ‘பேட்ட’, ‘டெடி’ தற்போது, ’சார்பட்டா பரம்பரை’ என தொடர்கிறது.

(ஆயுத எழுத்து படத்தில் மாணவராக ஷபீர் - பின்னால் நிற்பவர்)

இத்தனைப் படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால், சார்பட்டா வாய்ப்புதான் கவனம் ஈர்த்ததாக நினைக்கிறீர்களா?

“இந்த வாய்ப்புக்காக நான் மட்டுமல்ல. எல்லா நடிகர்களும் காத்துக்கொண்டிருப்பார்கள். கிரிக்கெட்டை பாதியிலேயே விட்டுவிட்டேன். ஆனால், சினிமாவில் எனக்கு ஒரு இடம் இருக்கு என்று மட்டும் உறுதியாக நம்பினேன். அதற்காக, டான்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், பார்க்கவுர், சிலம்பாட்டம், ஃபைட், கேரள களரி என பல பயிற்சிகளைப் கற்றுக்கொண்டு என்னை எல்லா வகையிலும் தயார்படுத்தி வைத்துக்கொண்டேன். அதுவே, எனக்கு இந்தப் படத்துல ஒரு அட்வாண்டேஜா அமைஞ்சிடுச்சி.

உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்?

நவாஸுதின் சித்திக், கமல் சார், கலை பிரதர் எனப் பலரைப் பிடிக்கும்.