சுவர்களின் மேல் பற்றியிருக்கும் கைகளில் குண்டு பாய்ந்து மணிக்கட்டு துண்டாகிறது; வழிந்தோடும் ரத்தம் சுவரை சிவப்பாக்குகிறது. உலராத ரத்ததின் மீது பற்றும் மற்றொரு கையின் நாடித்துடிப்பு நொடியில் இல்லாமல் ஆகிறது. சுவரைத் தாண்டிவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற குறைந்தபட்ச நம்பிக்கை நீர்த்துக்கொண்டேபோக, இறுதியில் செத்து மடிவது மட்டுமே ஒரு வழி என்றாகிவிடுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் தெறித்த அந்த ரத்தம் வரலாற்றின் பக்கத்தில் காயாமல் இன்னும் ஈரத்துடனே இருக்கிறது. உலராத அந்த ஈரத்தின் அடர்த்தியை கடத்தும் மகத்தான திரை முயற்சிதான் 'சர்தார் உத்தம்' (Sardar Udham).
அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சர்தார் உத்தம்', பாலிவுட்டின் வழக்கமான டெம்ப்ளேட்டுகளிலிருந்து நழுவி படமாகியிருப்பது இந்த நூற்றாண்டின் அதிசயம். தமிழ் சினிமா இயக்குநர்களிடம் சிக்கி விவசாயம் எப்படி படாத பாடு படுகிறதோ, அப்படித்தான் பாலிவுட்டின் பேனாக்களில் சிக்கி தேசபக்தி படங்கள் கண்ணீர் வடிந்திருந்தன. அந்தக் கண்ணீரை இயக்குநர் ஷூஜித் சிர்கார் துடைத்திருக்கிறார். (குறிப்பு: உருண்டு பிரண்டு தேசக்கொடியை காப்பது, பக்கம் பக்கமாக புல்லரிக்கும் தேசபக்தி வசனங்களைக் கக்குவது, எதிரிநாடுகளை சரமாரியாக குற்றம்சாட்டுவது போன்ற ஸ்டீரியோ டைப்களை விரும்புபவர்கள் இந்தப் படத்தை தவிர்ப்பது மனநலத்திற்கு நலம்).
பொதுவாக சுதந்திர வரலாறு என்றாலே தலையில் வெள்ளைத்தொப்பியும் கையில் தேசிய கொடியும் ஏந்தி நடத்தப்படும் போராட்டமாகவே இதுவரை பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் பழக்கப்பட்டிருக்கும் அந்த வரலாற்றிலிருந்து 'சர்தார் உத்தம்' விலகி நிற்கிறது. சொல்லப்படாத வரலாற்றின் பக்கங்கள் திரைமொழியாக்கப்பட்டுள்ளதுதான் படத்தின் சிறப்பு. பெரிய கூஸ்பம்ப் மூவ்மெண்ட்கள், உணர்ச்சியைத் தூண்டும் செயற்கை வசனங்கள் என எதுவும் இல்லாமல் வரலாறாகவே பதிவாகியிருக்கும் படம் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது. அதுதான் வரலாறாகவும் இருக்கிறது.
பகத்சிங்குக்கும், சர்தார் உத்தமுக்கும் இடையேயான நட்பு அத்தனை உயிர்ப்புடன் காட்சியாகியிருக்கிறது. போகிறபோக்கில் ஒரு ஃப்ரேமில் காட்சிப்படுத்தப்படும் பகத்சிங், முதன்முறையாக படத்தில் கதாபாத்திரமாகியிருக்கிறார். இந்திய சினிமாவில் கவனிக்கவேண்டிய இடம் இது. தீவிரவாதிக்கும், புரட்சியாளனுக்குமான வேறுபாட்டை அவர் விளக்கும் விதம், சமத்துவம், மனிதநேயத்தை வலியுறுத்துவது, ஏகாத்திபத்திய எதிர்ப்பு என பகத்சிங்கின் சுதந்திர வேட்கையை பற்றி பேசுவது சிறப்பு. அதேபோல சர்தார் உத்தம் தன் நண்பன் பகத்தை எந்த இடத்திலும் விட்டுகொடுக்காமல், 'உன்னுடைய 23-வது வயசுல என்ன பண்ணிட்டு இருந்த? உனக்கு அவர பத்தி பேச அருகதையில்ல' என பேசுவது எதிரிலிருக்கும் பிரிட்டிஷ் அதிகாரியை மட்டுமல்லாமல் நம்மையும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கிறது.
இன்றுவரை காந்தி, நேரு, படேல் ஆகியோரின் பார்வையிலிருந்து விரியும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை பகத் சிங்கின் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் (HSRA) கண்ணோட்டத்திலிருந்து காட்சிபடுத்திருப்பது பாராட்டுக்குரியது. 'நீங்கள் போராடாத வரை உங்கள் உரிமைகளை உங்களால் பெற முடியாது' என்ற பகத்சிங்கின் இறுதி விருப்பமாக, 'சர்வதேச ஆதரவு திரட்டல்' இருப்பதாக கூறப்படுகிறது. அதை வழிமொழியும் வகையில் அமெரிக்க சோசலிஸ்ட்டுகள், சோவியத் யூனியன், IRA தேசிய இன விடுதலைப் படையினர் முதலிய ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழுக்களுடன் ஒன்றிணைந்து இயங்குகிறார் உத்தம் சிங்.
வலி, அழுகை, சோகம் என அனைத்து உணர்சிக்களையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்கி கௌஷல். இறுதிவரை தான் செய்தது தவறு என ஒப்புக்கொள்ளாமல் பேசும் காட்சிகளில் முகத்தில் அனல் கக்கும் விக்கி கௌஷல் நடிப்பு அபாரம். மென்சோகத்துடன் வலம்வரும் அவர், நம்மையும் அந்த மனநிலைக்கு இழுப்பதில் வெல்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி எப்போது வரும் என எண்ணிக்கொண்டிருக்கும் நமக்கு, இதை தவிர்த்திருக்கலாமே என நினைக்கும் அளவுக்கு கனக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் ரத்ததால் நனைந்திருக்கிறது. சர்தார் உத்தமின் மென்சோகத்துக்கு பின்னால் இருக்கும் வலி, படம் முடிந்தபின்பும் நம்மை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது.
திரையில் நம்மை ஆற்றுப்படுத்துவது சர்தார் உத்தமுக்கு பிடித்த லட்டுவும், அவரது காதலியும்! சில காட்சிகள் ஆசுவாசப்படுத்துகின்றன. அனல்காற்றின் நடுவே வீசும் தென்றலைப்போல. இறுதிவரை பகத் சிங்கின் புகைப்படத்தை ஏந்துவதைப்போல தனது காதலியின் நினைவையும் ஏந்தியே உயிர் விடுகிறார் உத்தம். பல்வேறு கட்டுமைப்புகளை உடைத்து பேசியிருப்பதில் ஷூஜித் சிர்காருக்கு பாராட்டுகள்.
இறுதிவரை வருத்தம் தெரிவிக்காத கவர்னர் ஓ.ட்வையர் ஒட்டுமொத்த பிரிட்டிஷின் உருவகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். 100 ஆண்டுகள் கடந்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து பிரிட்டிஷ் அரசு இதுவரை அதிகாரபூர்வமாக மன்னிப்பைக் கேட்வில்லை. ஓ.ட்வையரும் அப்படியே!
உத்தம் சிங் செய்தது பழிவாங்கலுக்கான படுகொலை அல்ல; அது ஒரு சுதந்திரப் போராட்டப்பாதையில் ஒற்றைப் போராளியின் புரட்சி என நிறுவப்பட்ட விதம், அந்த மகத்தான போராளிக்கு செலுத்தப்பட்ட சல்யூட். ஒப்பனை தொடங்கி கலை அமைப்பு வரையில் ஒட்டுமொத்தமாக கதைக்களம் கையாளப்பட்ட விதம், உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குப் பெருமிதம் தரக்கூடிய ஒன்று என்றால் அது மிகையல்ல.
நான்-லீனியராகச் செல்லும் திரைக்கதையும், அதன் அடர்த்திக்கு உரம் சேர்க்கும் பின்னணி இசையும் மெச்சத்தக்கவை. கடைசி 45 நிமிடக் காட்சிகளைக் காண நமக்கு நிச்சயம் மன உறுதி தேவை. நிழலைக் காணும் நமக்கே இந்த நிலை எனில், அங்கே நிஜத்தில் சாட்சியாக நின்றவர்களின் நிலை..?
ஓர் உண்மையான சுதந்திரப் போராளியின் கதையை மிகையின்றி காட்டிய 'சர்தார் உத்தம்' நாம் கொண்டாட வேண்டிய ஓர் உன்னத சினிமா.
-கலிலுல்லா