சிறப்புக் களம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை; சிறந்த மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரிக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை; சிறந்த மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரிக்கு விருது

sharpana

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த சிறப்பாக உழைத்த மாவட்ட ஆட்சியர்களில் ’2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது’ சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ், தூத்துக்குடி ஆட்சியராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அனைவரின் பாராட்டுகளை குவித்தார். இதற்காக, தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2020 ஆம் ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு, சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் செய்த உதவிகளில் கவனம் ஈர்த்த சில...

ட்ரீம் கிச்சன்’

வேலை கேட்டு கோரிக்கை வைத்த தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 30 லட்ச ரூபாய் செலவில் 'ட்ரீம் கிச்சன்' எனப்படும் கனவு உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஆரம்பித்துக் கொடுத்தார். 

அத்துடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ட்ரீம் கிச்சன் உணவகத்தில் குடும்பத்தினரோடு சென்று உணவு சாப்பிட்டதோடு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பணிபுரியும் அனைவரையும் உணவு, தேனீர் போன்றவற்றை மாற்றுத்திறனாளிகளிடமே வாங்கும்படி உத்தரவும் போட்டு செயல், அதுவே சொல் என்று நிரூபித்தும் காட்டினார்.

ஆட்டிசம் பாதித்த முத்து மீனாவை தேசிய அளவில் சாதிக்க வைத்தார்.

ஆட்டிஸம்… மனவளர்ச்சி பாதிப்பு… குடும்பச்சூழல் என வாழ்க்கைப்பாதையே ‘தடை’களமாக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி முத்து மீனாவை ‘தட’களத்தால் வென்று தேசிய அளவில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவிக்க வைத்ததில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரிக்கு பெரும் பங்குண்டு.

பிறக்கும்போதே ஆட்டிசம் பாதித்த முத்து மீனா மாநில அளவில் 10 க்குமேற்பட்ட தங்கப் பதக்கங்கள், தேசிய அளவில் ஆறு தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததோடு, குண்டு எரிதல் போட்டியில் வெற்றிபெற்று சர்வதேசப்போட்டிகளுக்கு சமீபத்தில் தேர்வானார்.

இதற்கெல்லாம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உதவியும் ஊக்கப்படுத்துதலும்தான் காரணம் என்று நன்றியோடு கூறுகிறார்கள் முத்துமீனாவின் பெற்றோர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேசியளவிலான போட்டிக்கு தேர்வான முத்து மீனா வறுமையான சூழலால் போட்டியில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டபோது மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து 69 ஆயிரம் ரூபாய் நிதியளித்து ’ஆல் தி பெஸ்ட்’ சொல்லி ஊக்கப்படுத்தி அனுப்பினார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி. அந்தப் போட்டியில் இரண்டு தங்கங்களை முத்துமீனா குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த வருடம் நடந்த தேசியளவிலான போட்டிக்கும் தனியார் நிறுவனத்திடம் ஸ்பான்ஸர் பிடித்து 59 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க வைத்து போட்டிக்கு அனுப்பி வைத்தார். ஆட்சியரின் ஊக்கத்தால், இம்முறையும் இரண்டு தங்கம் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் முத்து மீனா.

இதுதவிர, தூத்துக்குடி ஆட்சியராக இருந்தபோது கொரோனாவால் வேலை வாய்ப்புகள் இன்றி தவித்த மாற்று திறனாளிகளுக்கு நிதியுதவியும், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் அளித்தது, சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு தனியாக வீடுகள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பால் பண்ணையையும் அமைத்துக்கொடுத்தது என நீள்கிறது சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்ஸி பேருதவிகளின் பட்டியல். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது நரிக்குறவர்களின் பிள்ளைகள் படிக்க பல்வேறு உதவிகளையும் செய்திருக்கிறார்

இதனால், இந்த ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றிய மாவட்ட ஆட்சியாளர்களில் சிறந்த ஆட்சித் தலைவர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தீப் நந்தூரிக்கு அளித்து கெளரவித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ”மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான "2020-க்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்" விருதை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஊக்கப்படுத்தியுள்ளார். அதற்கு சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்ஸும் உற்சாகமுடன் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

- வினி சர்பனா