சிறப்புக் களம்

புகழஞ்சலி: ஆ.மாதவன்.. 'கேரளாவுக்கு பிழைக்கப்போன தமிழர்களின் அவலங்களை அரிச்சுவடாக்கியவர்!'

புகழஞ்சலி: ஆ.மாதவன்.. 'கேரளாவுக்கு பிழைக்கப்போன தமிழர்களின் அவலங்களை அரிச்சுவடாக்கியவர்!'

sharpana

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. ’கடைத்தெருவின் கதைச்சொல்லி’ என்று கொண்டாடப்படுபவர். அவரது மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்று  எழுத்தாளர்களும்  வாசகர்களும் சமூக வலைதளங்களில் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவற்றில் சில...

Fb/Thamizhachi Thangapandian:

“கடைத்தெருவின் கதை சொல்லி” என்றழைக்கப்பட்ட ஆ.மாதவன் மறைந்துவிட்டார். ’ மோக பல்லவி’ எனும் சிறுகதைத் தொகுப்பில் துவங்கிய அவரது இலக்கியப் பயணம், 7 சிறுகதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு எனக் குறிப்பிடத்தக்க படைப்புகளுடன் தொடர, தனக்கென ஒரு செறிவான வாசகப் பரப்பைக் கொண்டவர். திறனாய்வு, மொழியாக்கம் எனும் துறைகளிலும் காத்திரமான பங்களித்தவர். விருதுகள், அங்கீகாரங்களுக்கு அப்பாற்பட்டு, படைப்பியக்கம் என்பதை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு இயங்கிய அருங்குணமுடையவர்.

“கிருஷ்ணப் பருந்து” பறந்து விட்டது”.

 Twitter/Kamal haasan: 

 புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் . மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.

 Fb/ R T Muthu: “திருவனந்தபுரத்தில் மகள், மருமகன் உடன் வாழ்ந்த வந்த எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களை 2016 பொங்கல்நாளில் சந்தித்தேன். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சந்திக்க ஆற்றுப்படுத்தி உதவினார். நண்பகல் நேரம். உறைத்த வெயில். பசி நேரம். கேரளாவில் பொங்கல் பண்டிகை கிடையாது. பொங்கலை ஞாபகப்படுத்தி சிறுபயிறு (பாசிப்பயிறு/வெல்லம்) மண்டைவெல்லம் இயைந்த பாயாசத்தை ஒரு கப்பில் தந்து உபசரித்தார் மாதவனின் மகள்.

ஆ.மாதவனிடம் நிறைய கேள்விகள் கேட்டேன். டக் டக்கென்று பதில்களை தந்துகொண்டே இருந்தார். குறிப்பெடுத்த புத்தகம் ஆரல்வாய்மொழிக்கு திரும்பி வரும் வழியில் தொலைந்து போனதால், பேட்டியை பிரசுரிக்க இயலாது போனது. பெரும் உற்சாகத்தோடு என்னை வறவேற்று பேசிக்கொண்டிருந்தார். பழகுவதற்கும் பேசுவதற்கும் மனத்தடை தராத மனிதராக எழுத்தாளராக ஆ.மாதவன் உள்வாங்கப்பட்டார். தன் 87 ஆவது வயதில் மரணித்திருக்கிறார். ஆழ்ந்த இரங்கல். இந்த பொங்கலிற்கு பிறகு ஆரல்வாய்மொழி போகும் பொழுது, அவரின் மகளையும் மருமகனையும் திருவனந்தபுரத்தில் சந்தித்து, தமிழ்நாட்டின் இரங்கலை தெரியப்படுத்துவேன்.”

 Twitter/ ஆலாத்தி:  ”ஜெயகாந்தனைப் போல எளிய மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலித்த காலக்கண்ணாடி. அதுவும் கேரளாவில் வாழ்ந்து கொண்டு அங்கு பிழைக்கப் போன தமிழர்களின் அவலங்களை அரிச்சுவடாக்கியவர்  .மாதவன் அவர்கள் இல்லாமை ஆனது நமக்கு இழப்பு”.

 Fb/ KN Senthil: “மகாபாரத கர்ணனை மையப் பாத்திரமாகக் கொண்டு பி.கே.பாலகிருஷ்ணனால் எழுதப்பட்ட மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஆ.மாதவன். தலைப்பு 'இனி நான் உறங்கட்டும்'(சாகித்ய அகாதமி). இந்திய அளவில் வெளிவந்த மகாபாரத பின்னணி கொண்ட முக்கியமான நாவல்களான எம்.டி.வாசுதேவன் நாயரின் 'இரண்டாம் இடம்' (மலையாளம்), கார்வேயின் 'யுகத்தின் முடிவில்' (மராட்டி), பைரப்பாவின் 'பருவம்' (கன்னடம்) போன்ற நாவல்களுக்கிணையாக வைத்து பேசப்பட வேண்டிய நாவல்களுள் ஒன்று 'இனி நான் உறங்கட்டும்'.”

 Suresh Venkatadari:  “சாகித்ய அகாதமி, விஷ்ணுபுரம் விருதுகள் பெற்ற திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்துவிட்டார். அவரது, 'கிருஷ்ண பருந்து, மணலும் புனலும்' ஆகிய இரு நாவல்களும் தமிழின் சிறந்த நாவல்களின் வரிசையில் என்றும் இடம்பெறும். ஆனைச்சந்தம், நாயனம், சாளைப்பட்டாணி போன்ற பல சிறந்த சிறுகதைகளையும் எழுதியவர். 2010ம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு விஷ்ணுபுரம் விருது (அவ்விருதின் முதல் பெறுனர் அவரே) வழங்கப்பட்ட கோவை நிகழ்வில் அவருடன் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம். கசப்புச் சுவை மிகுந்த கதைகளையே அதிகம் எழுதியிருந்த அவர் மீது உண்டாகியிருந்த சற்றே எதிர்மறையான ஒரு பிம்பத்துக்கு மாறாக, மிகுந்த பிரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் உரையாடிக்கொண்டிருந்தார் அன்று. அவருடைய படைப்புகளுக்கு வழங்கப்படாமல், ஒரு கட்டுரைத் தொகுதிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது சற்றே நெருடினாலும், அவரது பரந்து பட்ட இலக்கிய அனுபவங்களை விவரிக்கும் அந்தத் தொகுதியும் சுவாரஸ்யமான ஒன்றே. ஆ.மாதவன் அவர்களுக்கு அஞ்சலிகள்”.

 Fb /K S Radhakrishnan: “படைப்பாளி ஆ.மாதவன் அவர்கள்  காலமானார். தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோயில். திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின்போதே திருவனந்தபுரத்தில் குடியேறிய குடும்பம். தந்தை திருவனந்த புரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். 1934-ல் பிறந்த இவர் திருவனந்தபுரம் சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அதிகமான சிறுகதைகளை எழுதியவர். அவர் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். அங்குள்ள பத்மநாபசாமி கோவில் அருகே இருந்த இவரின் கடையில் இரண்டு தடவை சந்தித்ததுண்டு. கதைசொல்லி பற்றி அடிக்கடி செல்பேசியில் விசாரிப்பார்.

 7 சிறுகதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகிய குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர்.

//'அப்பா பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்தார். சொந்த ஊர் கொட்டாரம். வீட்டில் பெரிய அளவில் வசதிகள் ஒன்றும் இல்லை. திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தோம். வீட்டில் என்னையும் சேர்த்து ஏழு பேர். மலையாள வழிக்கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட நான் முழுமையாக முடிக்கவில்லை. ஒரு பாத்திரக் கடையில் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அதே நேரம் எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம். ரஷ்ய, பிரஞ்சு, ஆங்கில இலக்கிய நூல்களை மலையாள மொழிபெயர்ப்பில் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். அதே வேளை தமிழில் இருந்து சித்திரங்களுடன் வெளியாகும் சஞ்சிகைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

சஞ்சிகைகளை படிக்கும்போது நமக்கும் எழுதினா என்னவென்று தோன்றியது. அப்படி முதலில் நான் மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து 'கழுமரம்' என்ற குருநாவலை 'சிறுகதை' என்ற இதழில் எழுதினேன். இதற்கு நல்ல வரவேற்பு. அதன்பின்பு எதற்கு மொழிபெயர்ப்பு என்று எண்ணியவன் தொடர்ந்து, எனது கண்ணில் பட்டவற்றை கதைகளாக எழுதத் தொடங்கினேன். பெரும்பாலும் சாமான்ய மக்களின் வாழ்க்கையைத் தான் எழுதினேன். 'கடைத்தெருவின் கதைசொல்லி' என்றே என்னை அழைப்பார்கள். நான் நடத்தி வந்த பாத்திரக்கடையில் தினசரி சந்திக்கும் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தேன். அது இலக்கிய வட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

82 வயதைத் தொட்டபின் என்னை தேடிக் கண்டுபிடித்து விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சி. இலக்கியச் சுவடுகள் நூலுக்கு விருது வழங்கியிருக்கிறார்கள். அது 1955 முதல் பல்வேறு கட்டங்களில் நான் எழுதிய பல்வேறு விஷயங்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலுக்காக விருது வழங்கியிருப்பது எனது திறனாய்வை சாகித்திய அகாடமி உணர்ந்திருப்பதாக அறிகிறேன்' //—— ஆ.மாதவன்”.