சிறப்புக் களம்

“தமிழ்த்தாய் வாழ்த்திற்கு யாராக இருந்தாலும் எழுந்து நிற்கவேண்டும்”: ராமானுஜர் ஜீயர் பேட்டி

“தமிழ்த்தாய் வாழ்த்திற்கு யாராக இருந்தாலும் எழுந்து நிற்கவேண்டும்”: ராமானுஜர் ஜீயர் பேட்டி

sharpana

”மாற்றுத்திறனாளிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும்” என்று அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்த உத்தரவுக்குப் பின்னால், ஒரு சர்ச்சையும் உள்ளது.

தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததால் அவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி பரபரப்பானது.

இதுகுறித்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் "தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப்பாடல். தேசிய கீதம் அல்ல. அதற்குக் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்பாக உத்தரவும் எதுவும் இல்லை" என்றார்.

அதன் தொடர்ச்சிதான், தற்போது வெளியாகியிருக்கும் தமிழக அரசின் அரசாணை. இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயரை தொடர்புகொண்டு பேசினோம்,

எப்படி இருக்கீங்க?

”ஆண்டாள் புண்ணியத்தில் நல்லபடியாக இருக்கிறேன். எந்தக்குறையும் இல்லை. பூஜைகள் செய்வது மக்களுக்கு ஆசிர்வாதம் செய்வது என பணிகள் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது”.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

“ரொம்ப நல்ல விஷயம். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது எழுந்து நிற்பது மரியாதையானது. நம்முடைய அம்மாவுக்கு கொடுக்கும் மரியாதைப் போன்றுதான் இதுவும். தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதுபோல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கண்டிப்பாக மரியாதை கொடுத்தே ஆகவேண்டும்.

யாராக இருந்தாலும் எழுந்து நிற்கவேண்டும். எழுந்து நிற்பதில் தவறில்லை. எழுந்து நிற்பதால் யாரும் குறைந்து விடமாட்டார்கள். நாங்களே இருந்தாலும் நிற்கவேண்டும். முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி ரொம்ப நல்லாருக்கு. சிறப்பாக செயல்படுகிறார். எந்தக்குறையும் அவரது ஆட்சியில் இல்லை”.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது சங்கராச்சாரியார் விஜேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையானதே... எப்படி பார்க்கிறீர்கள்?

“இது கோயில்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இதுகுறித்துப் பேசவேண்டாம். ஒவ்வொரு மடங்களுக்கும் ஒவ்வொரு ஆதினங்களுக்கும் வரைமுறைகள் உள்ளன. தனித்தனி விருப்பங்கள், மனப்பான்மைகள் உள்ளன. அந்த முறைகளின்படி கடைப்பிடித்து வந்தால் உலகத்தில் பிரச்னைகள் வரவே வராது. மாற்றுவதுதான் பிரச்சனைகள் வருவதற்கே காரணம். யாருக்கு என்னென்ன முறைகள் இருக்கோ, அந்தந்த கோயில்களின் பாரம்பரியங்கள் மாறக்கூடாது”.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

“அருமையாக செயல்படுகிறார். கோயில்களில் அவர் செய்யக்கூடிய ஒவ்வொரு திட்டங்களுமே ரொம்ப நல்லாருக்கு. நிறைய விஷயங்கள் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”.

- வினி சர்பனா