நடிகர்கள் நபீசா அலி, மிருணாளினி தேஷ்பிரபு மற்றும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் முதலானோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். இந்த இணைப்பின் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
கோவா தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியாக களமிறங்கியுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் பொதுமக்களின் கவனத்தை பெரும் யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக நடிகர்கள் நபீசா அலி, மிருணாளினி தேஷ்பிரபு ஆகியோருடன் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸும் திரிணாமூல் கட்சியில் சமீபத்தில் இணைந்தனர். இணைப்பு நிகழ்வில் பேசிய மூவரும் ``2024 பொதுத் தேர்தலில் மம்தாவே உண்மையான சாம்பியன் ஆக இருப்பார்" என்கிற ரீதியில் பேசினர்.
மம்தாவுக்கும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலருக்கும் நெருங்கிய நட்பு இருப்பது தெரிந்த ஒன்று. அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாரூக்கான், கமல்ஹாசன், மகேஷ் பட் போன்றோருடன் தனிப்பட்ட நட்பு பேணி வருபவர் மம்தா. இதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெங்காலி திரை நட்சத்திரங்களுடன் பாலிவுட்டை சேர்ந்த சிலரும் கட்சியில் இணைந்தனர். இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கட்சியில் இணைந்து இப்போது எம்எல்ஏ ஆக இருந்துவருகிறார்.
பிரபலங்களை கட்சியில் இணைத்துக்கொள்வது அரசியல் கட்சிகளிடையே இருக்கும் பரவலான பழக்கம்தான். அதேபாணியைதான் மம்தாவும் பின்பற்றத் தொடங்கியுள்ளார். ஆனால், மம்தா சினிமா பிரபலங்களை தாண்டி கல்வித் துறைகளில் பிரபலமாக இருப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற அறிவுத்தளத்தில் இயங்கும் பிரபலங்களையும் இணைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். 11 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சி செய்த இடது முன்னணி அரசை அகற்றும் முனைப்பில் இறங்கிய மம்தாவுக்கு மக்களின் குறைகளை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இதுபோன்ற அறிஞர்கள்தான்.
எதிர்கட்சித் தலைவராக மம்தா போராடிய காலத்தில், அப்போதைய இடது முன்னணி அரசாங்கத்தை அகற்ற வெளிப்படையாக அவர்கள் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவி, திரைப்பட இயக்குநர் அபர்னா சென், நாடக கலைஞர்கள் ஷாலி மித்ரா மற்றும் பிபாஸ் சக்ரவர்த்தி மற்றும் ஓவியர் ஷுவபிரசன்னா பட்டாச்சார்ஜி போன்ற பலர் சிங்கூர் மற்றும் நந்திகிராமில் நடந்த நிலப் போராட்டங்களின்போது இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக மம்தாவுடன் இணைந்து வீதிகளில் இறங்கி போராடினர்.
எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி உள்ளூர் நாளிதழ் மூலமாக மம்தாவுக்கு கைகொடுத்தார் என்றால், நாடக கலைஞர்கள் ஷாலி மித்ரா மற்றும் அர்பிதா கோஷ் போன்றோர்கள் தங்களின் நாடகங்களின் மூலமாக மக்கள் மத்தியில் மம்தாவை கொண்டுச் சேர்த்தனர். இவர்களின் உழைப்பின் விளைவாக 2011-ல் இடதுசாரிகளை தோற்கடித்து மம்தா ஆட்சிக்கு வந்தார். இவர்களின் உழைப்பை நன்கு உணர்ந்து வைத்திருந்த மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு பல்வேறு அரசுக் குழுக்களில் முக்கியப் பதவிகளை அளித்ததோடு, அவ்வப்போது விருதுகளையும் அங்கீகாரங்களையும் வழங்கினார்.
இப்போது அசைக்க முடியாத ஒரு தலைவராக இருக்கும் மம்தா, வரவிருக்கும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களை கணக்கில் கொண்டு மீண்டும் பிரபலங்களோடு இணைந்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள், பிரபலங்களோடு இணையும்போது வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலில் 2011-ல் செய்தது போன்றொரு செய்ய முடியும் என மம்தா நம்புகிறார். ஏனென்றால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் அறிஞர்கள் எண்ணிக்கை வெகுவாகவே அதிகரித்துள்ளது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்க அவர்களின் உதவியை பெறும் முயற்சியை தொடங்கியுள்ளார் மம்தா.
கல்வியாளர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையேயும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரிடையே திரைப்பட பிரபலங்கள் கொண்டுள்ள செல்வாக்குகளையும் மம்தா நன்றாகவே அறிந்து வைத்துள்ளார். இதுபோன்ற பல பிரபலங்கள் ஒன்றிணைப்பது, ஒரு புதிய தோற்றத்தை உருவாக்க உதவும். அவர்கள் மூலமாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்று நம்புகிறது திரிணாமூல். இதனால்தான் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸை கட்சியில் இணைத்த பிறகு, ``இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் 2014 முதல் நாங்கள் காத்திருக்கும் ஜனநாயகத்தின் விடியலைப் பார்ப்பதை உறுதி செய்வோம்" என்று ட்வீட் செய்தது திரிணாமூல்.
- மலையரசு
| வாசிக்க > அன்று 'நோ' ராம்... இன்று 'ஜெய் ஸ்ரீராம்' - தேர்தலுக்காக யு-டர்ன் எடுக்கிறாரா கெஜ்ரிவால்?! |