சிறப்புக் களம்

ரியல் ஆடுகளம்.. சீறும் சேவல்கள்.. சோகத்தில் கரூர்..

ரியல் ஆடுகளம்.. சீறும் சேவல்கள்.. சோகத்தில் கரூர்..

webteam

தமிழகத்தில் கபடி, ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் சேவக்கட்டும் ஒன்று. இதில் கத்திக்கால் சேவக்கட்டு, வெற்றுக்கால் சேவக்கட்டு என இருவகை உண்டு. இந்த இரண்டு சேவல் சண்டைகளில் அதற்கேற்றவாறு வெவ்வேறு ரக சேவல்கள் களமிறங்குகின்றன. 

வெற்றுக்கால் சேவல் சண்டை:

வெற்றுக்கால் சேவல் சண்டையை பொறுத்தவரையில் சேவலின் காலில் உள்ள நகங்களை கூர்மையாக்கி சண்டைக்கு விடப்படும். இந்த சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ‘அசில்’ என்று அழைக்கப்படுகின்றன. அசில் என்றால் அசல், அதாவது ஒரிஜினல் இனத்தை சேர்ந்தது என்று பொருளாகும். இந்த ரக சேவல்கள் சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றன. இந்த வகை சேவல்கள் இயற்கையிலேயே சண்டையிடும் குணம் உடையவை. இவற்றின் நகங்கள் மிகவும் கூர்மையானதாக வளர்கிறது. அது ‘முள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முள்ளை கோழி வளர்ப்பாளர்கள், சேவச்சண்டை நடப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே தயார் செய்யத்தொடங்கி விடுகின்றனர்.

முள்ளை மட்டும் தயார் செய்யமால், சண்டையிடும் சேவலையும் ஆரோக்கியமான இயற்கை உணவுகள், கடுமையான பயிற்சிகள் கொடுத்து தயார் செய்கின்றனர். இவற்றுக்கு அளிக்கப்படும் பயிற்சி சண்டைகள் ‘டப்னி’ எனப்படுகிறது. இந்த முறையில் உயரங்களின் அடிப்படையில் சேவல்கள் சண்டைக்கு விடப்படுகிறது. 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஓய்வு என ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு சண்டை நடைபெறும். இதில் ஓய்வுக்கு சேவலை கொண்டு செல்வது ‘தண்ணிக்கு எடுப்பது’ என்றழைக்கப்படுகிறது. இந்த வார்த்தையை தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தில் நாம் கேட்டிருப்போம். வெற்றுக்கால் சண்டையில் சேவல் உயிரிழந்தால், ஓடிவிட்டால் அல்லது சேவலின் மூக்கு மண்ணில் பட்டால் எதிர் சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

கத்திக்காவல் சேவல் சண்டை:

சேவலின் காலில் கத்தியை கட்டிக்கொண்டு சண்டையிடும் முறைதான் இது. இந்த முறையில் இரு தரப்பினரும் தங்கள் சேவல்களை கையில் பிடித்துக்கொண்டு முகத்தை நோக்கி மோதும் வகையில் விடுவார்கள். அந்த நொடியிலிருந்த சண்டை தொடங்குகிறது. இதனை ‘நடவு போடுதல்’ அல்லது ‘முகைய விடுதல்” என்பர். இதில் காயமடையும் சேவல்களுக்கு இடைவெளி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மோதல் தொடங்குகிறது.

இந்த முறை சண்டையில் பெரும்பாலும் சேவல்கள் இறந்துவிடுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்கும் சேவல்களுக்கு ‘கட்டுச்சேவல்’ எனப்பெயர். இவற்றின் வால் நீண்டு காணப்படுகிறது. வெற்றுக்கால் சேவல் சண்டையை போலவே இந்த முறையிலும் வெற்றி அறிவிக்கப்படுகிறது. இதில் களத்தில் இறக்கும் அல்லது தோல்வி அடையும் சேவல், வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு வழங்கப்படுகிறது. 

இதுபோன்ற சேவல் சண்டைகள் தமிழகத்தில் கரூர், தஞ்சை, நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆரவாரத்துடன் நடைபெற்று வந்தது. இந்த சேவல் சண்டை நடைபெறும் நாட்களில் திருவிழாக்கோலம் அடையும் கிராமங்கள் ஏராளம். ஜல்லிக்கட்டுக் காளைகள் எப்படி குடும்பத்தில் ஒருத்தர் போல வளர்க்கப்படுகின்றனவோ, அதுபோலவே சண்டைச்சேவல்களும் வளர்க்கப்படுகின்றன. 

சேவக்கட்டுக்கு தடை:

இத்தகைய சேவல் சண்டை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சேவல் சண்டையில், சேவலின் காலில்  கட்டப்பட்டிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்தனர். இதனால் தமிழக காவல்துறை சேவல் கட்டுக்கு தடை விதித்தது.  இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. 

கரூரின் சேவக்கட்டு:

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, ஜல்லிக்கட்டு, புத்தாடைகள், கொண்டாட்டம் என அனைத்திலும் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களே கலைகட்டும். இப்படி இருக்க கரூர் மாவட்டத்தில் இவற்றை மிஞ்சும் வகையாக சேவல் சண்டைப்போட்டிகள் நடைபெற்று வந்தது. அதனை சேவல் சண்டைப்போட்டி என்று கூறுவதை விட சேவல் சண்டை திருவிழா என்றால் பொருத்தமாக இருக்கும். இங்கு நடைபெறும் சேவல் சண்டையில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சேவல்கள் கலந்து கொள்ளும். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ளது பூலாம்வலசு என்ற கிராமம். 100க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட இந்தக் கிராமம் பொங்கல் பண்டிகை நேரத்தில் 3 நாள்களுக்கு திருவிழாக்கோலம் கொள்ளும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பாரம்பரியமாக நடைபெற்று வந்த சேவல் சண்டைதான் இதற்கு காரணம். இந்த சண்டையில் கரூர் மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட சேவல்களும் களம் காணுகின்றன. இதைக்காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர். அந்த 3 நாள்களுக்கும் அந்த கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் யாரைப் பார்த்தாலும் துண்டில் சுற்றப்பட்டு தோளில் தொங்கவிடப்பட்ட சேவலுடன் தென்படுவார்கள். இந்த மூன்று நாள்களிலும் பூலாம்வலசு மட்டுமல்ல அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் சின்னதும், பெரியதுமாக சேவல் சண்டைகள் நடைபெறும்.

இவ்வாறு கொண்டாட்டங்களுடன் பரபரப்பாக காணப்பட்டு வந்த பூலாம்வலசு கிராமம் கடந்த 3 ஆண்டுகளாக சேவல் சண்டை நடத்தப்படாமல் உற்சாகம் இன்றி காணப்படுகிறது. தடை அகற்ற வேண்டும் என சேவல் ஆர்வலர்கள் இணைந்து நீதிமன்றம் சென்றும், தடை அகலவில்லை. இதனால் அந்த கிராமமே சேவல் சண்டை இல்லாத சோகத்தில் உள்ளது. இதுகுறித்து கூறும் அந்த கிராம சேவல் சண்டை ஆர்வலர்கள், இந்த ஆண்டு சேவல் சண்டைக்கு அனுமதி கிடைக்கிவில்லை என்றால், அடுத்த ஆண்டில் சேவல் சண்டைக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்கின்றனர். அதுமட்டுமின்றி சேவல் சண்டை தடை செய்யப்பட்டதால் தங்கள் பொருளாதாரம் பெரிதும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் உட்பட பலரும் கூறுகின்றனர். ஏனெனில் சண்டையில் வெற்றி பெரும் சேவல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என விற்பனை ஆகும்.  

இத்தகைய தமிழ்ப் பாரம்பரியம் உடைய சேவல் சண்டைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது கரூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள சேவல் சண்டை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள அரசு, தற்போது அதைக் கண்காணிக்க சிறப்புக்குழு அமைத்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதைப்போல சேவல் சண்டைக்கும் கட்டுப்பாடுகள் விதித்தாலும், தடையை அகற்ற வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது.