சிறப்புக் களம்

புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திகி மரணத்தை 'கொண்டாடும்' மோசமான போக்கு - பின்புலம் என்ன?

புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திகி மரணத்தை 'கொண்டாடும்' மோசமான போக்கு - பின்புலம் என்ன?

நிவேதா ஜெகராஜா

புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திகியின் மரணத்தைக் 'கொண்டாடும்' சில தரப்பினரின் மோசமானப் போக்கும், தனது இதழியல் கடமையை சமரசமின்றி செய்த அவரை, மரணத்துக்குப் பின்னும் இழிவான விமர்சன வகையிலான 'ட்ரோல்' செய்யும் போக்கும் சமூக வலைதளங்களில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் பின்புலத்தில் உள்ள சில அமைப்புகளைச் சேர்ந்தவர்ளுக்கு எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளரும், புலிட்சர் விருது வென்றவருமான தனிஷ் சித்திகியின் மரணம், செய்தி ஊடக உலகை அதிரவைத்துள்ளது. ஆனால், அவரின் மரணத்தை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் விமர்சித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியாவின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களை எடுத்திருந்தார் தனிஷ் சித்திகி.

இந்தப் புகைப்படம் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஓர் இந்து பொது மயானத்தில் எடுக்கப்பட்டது. இதுபோன்ற அவரின் பல புகைப்படங்கள், கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் மயானத்தில் வரிசைகட்டி நிற்பது, மயானத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க நிற்பது என இரண்டாம் அலையின்போது இந்தியாவின் நிலையை அப்பட்டமாக எடுத்துரைத்தது.

இந்தப் புகைப்படங்கள் உலக அளவில் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது. இந்த விஷயத்தை வைத்துதான் தற்போது அவரின் மரணத்தை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். யோடா என்ற ட்விட்டர் பயனர், "கொரோனா இரண்டாம் அலையின் உச்சத்தில் இந்து தகனங்களின் புகைப்படங்களை எடுத்து வெளிநாட்டு ஊடகங்களில் பரப்பியது இந்தியாவை மட்டுமல்ல, இந்து மதத்தையும் இழிவுபடுத்தியுள்ளது" என்று தனிஷ் சித்திகியின் இறந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், ரிஷப் என்பவர் டெல்லி மயானத்தில் தனிஷ் சித்திகி எடுத்த புகைப்படங்களையும், அவரின் மரணச் செய்தியையும் பதிவிட்டு, ``'இது இன்றைய சிறந்த செய்தி. மிகவும் நல்லது. சித்திகி தகுதியானதை பெற்றுள்ளார்" என்று மோசமான மனநிலையை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் சிலர், " தனிஷ் சித்திகி நூற்றுக்கணக்கான இந்துக்களின் புனித இறுதிச் சடங்குகளை தனது ட்ரோன் மூலம் பிடித்து ஒரு கதையை உருவாக்கி இருந்தார். தனிஷ் சித்திகி போன்றவர்களின் மரணங்களை எஸ்.டபிள்யூ அமைப்பு (வலதுசாரி அமைப்பு) கொண்டாடுகிறது. சித்திகியின் மரணத்தில் எந்தவித துக்கத்தையும் உணரவில்லை" என்று மோசமாக பதிவிட்டு இருந்தனர்.

அதேநேரத்தில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இதுபோன்ற விமர்சனங்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். ``ஆப்கானிஸ்தானில் தனது வேலையைச் செய்யும்போது தனிஷ் சித்திகி கொல்லப்பட்டுள்ளார். சித்திகி தனது பணியில் நேர்மையாளராக இருந்ததால், அவரின் நேர்மை சிலருக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது. அவரது மரணத்தை கொண்டாடும் சிலர் இருக்கிறார்கள்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் நடக்கும் போர் குறித்து செய்திக்காகச் சென்ற, இந்தியாவை சேர்ந்த புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திகி நேற்று கொல்லப்பட்டார். அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட பின், ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படச் செய்தியாளரான மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திகி, தொடர்ச்சியாக செய்தி சேகரித்து வந்தார்.

கந்தஹாரில் ராணுவத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் தனிஷ் சித்திகி கொல்லப்பட்டார். அவரது உடல் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசிடம் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனிஷ் சித்திகி படுகொலை குறித்து ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா எதிர்ப்பை பதிவு செய்யும் என்று வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷவர்தன் சிங்க்லா தெரிவித்தார்.

புலிட்சர் விருது பெற்ற தனிஷ் சித்திகின் மறைவுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், சக செய்தியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனிஷ் சித்திகி மரணத்திற்கு அமெரிக்க அரசும் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தனிஷ் சித்திகி எப்படி இறந்தார் என்பது தங்களுக்கு தெரியாது என தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், தனிஷ் சித்திகி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர் இறந்த விதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். போர்க்களப் பகுதிக்கு செய்தி சேகரிக்க வருபவர்கள் தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இறுதி மூச்சு வரை கேமரா லென்ஸ் வழியே வெளிச்சம்:

நாட்டின் நிலவும் உண்மை நிலையை முகத்தில் அறைவதுபோல உணர்த்துவதற்கு ஒரு புகைப்படம் போதும் என நிரூபித்தவர் தனிஷ் சித்திகி. உலக அளவில் ஊடக புகைப்படக் கலைஞர்களுக்கான உச்சபட்ச அங்கீகாரமான புலிட்சர் விருதை 38 வயதிலேயே பெற்ற பெருமைக்குரிய இந்தியர் அவர்.

மியான்மரில் ரோஹிங்யா அகதிகள் அனுபவித்த சோகம், கொரோனா பொதுமுடக்கத்தில் கால்நடையாக இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம், கொரோனாவின் காலத்தில் நிலவிய ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனும் அவலம், சிஏஏ போராட்டத்தின்போது மூர்க்கமான தாக்குதலில் தனியே சிக்கியவரின் கையறுநிலை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக களத்தில் உள்ள விவசாயிகளின் போர்க்குணம், நேபாள நிலநடுக்கத்தில் ஏதுமின்றிபோன மக்களின் ஏக்கம், திருவிழாக்களில் மக்கள் வெள்ளத்தில் வெளிப்படும் உற்சாகம் என ஒவ்வொரு உணர்வுகளையும் உணர்த்திட தனிஷ் சித்திகிக்கு ஒரு புகைப்படமே போதுமானதாக இருந்தது. அவரது புகைப்படங்கள் கண்ணீரையும் வரவழைக்கும். பதைபதைப்பையும் ஏற்படுத்திவிடும். பார்த்த நொடியில் சிலிர்ப்பையும் தந்திடும்.

மும்பையைச் சேர்ந்த தனிஷ் சித்திகி கல்வி கற்றதெல்லாம் டெல்லியில். பொருளாதாரம் பயின்ற தனிஷ், பத்திரிகை துறையின் மீதான ஆர்வத்தில் மாஸ் கம்யூனிகேஷன் முடித்து கேமராவை கையில் எடுத்தார். அப்போது எடுத்த கேமராவை இறுதி மூச்சுவரை கைவிடவே இல்லை தனிஷ் சித்திகி. அதுவரை அவரது கேமராவின் வெளிச்சத்தில் உறைந்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு கதைகளை உலகிற்கு உணர்த்தின. விஷமாகப் பரவிய கொரோனாவால் டெல்லியில் சுடுகாடுகள் இடைவிடாமல் இயங்கிய அவலம் தனிஷ் எடுத்த புகைப்படமே உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.

கண்ணில் காணும் காட்சிகளை ரத்தமும் சதையுமாக உணர்வுகள் கலந்து புகைப்படமாகக் கடத்துவதில் வல்லவர் தனிஷ் சித்திகி. 2018 ஆம் ஆண்டு ரோஹிங்யா அகதிகள் படும் துயரத்தை ஆவணப்படுத்திய புகைப்படங்கள் மூலம், ஊடக புகைப்படக் கலைஞர்களுக்கான உலகின் மிக உயரிய புலிட்சர் விருதை வென்றார் தனிஷ் சித்திகி. இந்தியாவிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் புகைப்படச் செய்தியாளருக்கான சீரிய பணிக்கு விருதுகளை வசப்படுத்தியுள்ளார்.

தனிஷ் சித்திகின் கேமரா சிறைபிடித்த காட்சிகள், சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் துணிச்சலாக அம்பலப்படுத்தின. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அவருக்கு, மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.