சிறப்புக் களம்

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வருகிறதா? - ஆய்வில் தகவல்

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வருகிறதா? - ஆய்வில் தகவல்

Sinekadhara

குரங்கம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒரு வாரத்தில் மயோர்கார்டிடிஸ்(இதய வீக்கம்) அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு இதய வீக்கம் ஏற்பட்டது இதுவே முதன்முறை என்கின்றனர் நிபுணர்கள். தோல் புண்களால் இதுபோன்ற அரிதான அறிகுறிகள் தென்படுவது மிகவும் சவாலானதாக இருப்பதாக கருதப்படுவதாக JACC ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல், உடல்வலி, அசௌகர்யம் மற்றும் கை, முகம் மற்றும் பிறப்புறுப்புகளில் வீக்கத்துடன் கூடிய புண்கள் போன்ற குரங்கம்மை வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்பட்ட 5 நாட்களில் அந்த நபர் மருத்துவரை சந்தித்திருக்கிறார். பிசிஆர் சோதனைமூலம் குரங்கம்மை தொற்றை உறுதிசெய்ய அவருடைய புண்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 3 நாட்களில் அந்த நபருக்கு இடது கை வலியுடன் கூடிய மார்பு இறுக்கம் ஏற்பட்டதால் அவர் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அவருடைய இதய தசைகள் வீக்கமடைந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு மயோர்கார்டிடிஸ் உறுதி செய்யப்பட்டது.

மயோர்கார்டிடிஸ் மற்றும் குரங்கம்மைக்கு இடையேயான தொடர்பு எப்படி?

முன்னதாக, மயோர்கார்டிடிஸ் பெரியம்மை தொற்றுடன் தொடர்புடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது மிகவும் மோசமான வைரஸ் எனலாம். மயோகார்டிடிஸ் நோயை விரிவாக கண்டறிய உதவும் இமேஜிங் கருவியான கார்டியாக் மேக்னடிக் ரெசோனன்ஸ்(CMR)மேப்பிங்கை பயன்படுத்தினர். குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு இதய பிரச்னையும் ஏற்பட்டால் அங்கு விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்த நபரின் வழக்கு கவனத்தில் கொண்டுவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஒரே வாரத்தில் முற்றிலும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், இதய நோய்க்கும் குரங்கம்மைக்குமான தொடர்பை கண்டறிய ஆராய்ச்சிகள் இன்னும் தொடரப்பட்டு வருகிறது.

குரங்கம்மை என்றால் என்ன?

குரங்கம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் தொற்று. குரங்கம்மை வைரஸ் பாலுறவால் பரவும் நோயல்ல என்றும், காயங்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மற்றும் அசுத்தமான படுக்கை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலேயே தொற்று பரவும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீண்டநேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களிடமிருந்து எளிதில் பரவலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன?

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அறிகுறிகள் வெளிப்பட 6-13 நாட்கள் ஆகலாம். அல்லது சிலருக்கு 5-21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தென்படலாம். குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் தென்படும் சில முக்கிய அறிகுறிகள்...

1. தீவிர தலைவலி
2. முதுகுவலி
3. காய்ச்சல்
4. அதீத சோர்வு
5. கணுக்கால்களில் வீக்கம்
6. முகம், உள்ளங்கால்கள், உள்ளங்கைகல் மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள்
7. குளிர்
8. தசை வலி
9. தொண்டை வலி
10. இருமல்
12. முக்கடைப்பு போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் தென்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.