சிறப்புக் களம்

சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

webteam

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வெளிவந்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் பத்திரிகைக்கு பேட்டியளித்த  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார். 

அதன் பின்னர் கதைத்திருட்டு, சமரசம் என சர்க்கார் படத்தை சுற்றி பரபரப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பெண் அரசியல்வாதியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் பெயர் கோமலவள்ளி. இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் அரசியல் வசனங்கள், தமிழக அரசியல் களத்தின் பல நிகழ்வுகள் என சர்க்கார் முழு அரசியல் படமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், ''சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும்.  அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்சிகளை நீக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்'' என தெரிவித்துள்ளார்.